இந்து டாக்கீஸ்

இந்தியத் தொலைக்காட்சிகளில் கடைசி முறையாக...?

கா.இசக்கி முத்து

எல்லாப் படங்களையும் திரையரங்கில் போய்ப் பார்க்க இயலாதவர்கள் அல்லது விரும்பாதவர்கள் அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ‘டிவில போடும்போது பார்த்துக்கலாம்’ என்று காத்திருப்பார்கள் (கள்ளச் சந்தையில் குறுந்தகடு வாங்கிப் பார்ப்பவர்கள் இங்கே கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை).

படத்தைத் திரையரங்கில் பார்த்தவர்களும் படம் பிடித்திருந்தால் தொலைக்காட்சி ஒளிபரப்புக்காகக் காத்திருப்பார்கள். ஆனால், இனிமேல் திரையரங்கில் மட்டுமே படம் பார்க்க முடியும் என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோமோ எனத் தோன்றுகிறது. காரணம், தற்போது வெடித்திருக்கும் பிரச்சினை.

வெற்றிப் படங்களுக்கும் விலையில்லை

முன்பு ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டியிட்டு, படத்தை வாங்கிவிடும். ஆனால், தற்போது வெற்றியடைந்த படத்தைக்கூட தொலைக்காட்சி நிறுவனங்கள் வாங்க முன்வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. ‘வை ராஜா வை', ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை', ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்', ‘இன்று நேற்று நாளை', ‘வன்மம்' உள்ளிட்ட சில படங்களை வாங்க எந்தத் தொலைக்காட்சி நிறுவனமும் முன்வரவில்லை. தொலைக்காட்சி உரிமம் மூலம் வருமானம் என்பதைத் தயாரிப்பாளர் மறந்துவிட வேண்டும் என்பதுபோல இருக்கிறது தற்போதைய சூழல்.

‘எலி', ‘வலியவன்' போன்ற படங்கள் வெளியாகும் முன்பு தொலைக்காட்சி நிறுவனங்கள் வாங்க ஆர்வம் காட்டினார்கள். ஆனால், படம் வெளியாகி வெற்றி பெற்றால் நீங்கள் எங்களுக்குத் தரப்போகும் பணமே வேறு என்ற பேராசையில் அந்த வாய்ப்பைத் தயாரிப்பாளர்கள் நழுவ விட்டுவிட்டார்கள். படங்கள் தோல்வி அடைந்ததால் இப்போது வாங்க யாரும் முன்வரவில்லை. இந்தக் காரணத்தாலும் சில படங்கள் பெட்டியில் தூங்கிகொண்டிருக்கின்றன.

அபாயச் சூழ்நிலை

இந்தச் சூழ்நிலை குறித்து தயாரிப்பாளர் தரப்பில் விசாரித்தபோது, “முன்பு ஒரு சிறு பட்ஜெட் படத்தை எடுத்தால், படத்தை விளம்பரப்படுத்தி, வெளியாகி வரவேற்பை பெற்று, தொலைக்காட்சி உரிமை விற்று, திரையரங்குகள் வசூலில் காசு கிடைத்து கணக்கிட்டுப் பார்த்தால் லாபம் இருக்கும். இப்போது நஷ்டமே இருக்கிறது.

அது மட்டுமன்றி, தொலைக்காட்சி உரிமைக்கு ஒரு நிறுவனத் திடம் ஒப்பந்தம் போட்டு, அதைக் கொடுத்து வட்டிக்குக் காசு வாங்கிப் படத்தைத் தயாரிப்போம். இப்போது படத்தை வாங்கவே யாருமே இல்லையே... பிறகு எப்படி படத்தைத் தயாரிப்பது? இந்தச் சூழ்நிலை தொடரும் என்றால் சில நாட்களில் சிறு பட்ஜெட் படங்களின் தயாரிப்பு நின்றுபோகும். பெரும் பொருளாதாரச் சிக்கல் ஏற்படக்கூட வாய்ப்பிருக்கிறது” என்றார்கள்.

“வின்னர் என்ற படத்தின் காமெடிக் காட்சிகளைப் போடாத தொலைக்காட்சி நிறுவனம் கிடையாது. ஆனால் அப்படத்தின் தயாரிப்பாளர் இப்போது ஒரு வீடுகூட இல்லாமல் இருக்கிறார். அந்தத் தயாரிப்பாளருக்குத் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒரு வருடத்துக்கு 2 லட்ச ரூபாய் கொடுத்தால் எப்படியிருக்கும்” என்கிறார் ஒரு தயாரிப்பாளர்.

தயாரிப்பாளர் சங்கம் கெடுபிடி

இந்தச் சிக்கலைப் போக்க, தற்போது தயாரிப்பாளர் சங்கம் ஒரு முடிவை எடுத்திருக்கிறது. ஜூலை 24-ம் தேதி முதல் தொலைக்காட்சி உரிமையை வாங்கும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மட்டுமே பாடல்கள், காமெடி, படக் காட்சிகள், டிரெய்லர் என அனைத்தையும் கொடுப்பது என்று முடிவெடுத்திருக்கிறது. தொலைக்காட்சி உரிமையை வாங்கும் நிறுவனம் போக தூர்தர்ஷன், ஜெயா ஆகிய தொலைக்காட்சிகளுக்குக் கொடுக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.

படங்களின் விளம்பரங்கள் விஷயத்திலும் தயாரிப்பாளர் சங்கம் கெடுபிடி விதித்திருக்கிறது. உரிமையை வாங்கும் தொலைக்காட்சிக்கு 25 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டும். வேறு எந்தத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் விளம்பரங்கள் கிடையாது என்று கூறியிருக்கிறார்கள்.

ஒன்றிணைந்த தொலைக்காட்சிகள்

தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவுக்குத் தொலைக்காட்சி நிறுவனங்கள் அசைந்துகொடுக்கவில்லை. அவை தமது நிலையிலிருந்து இறங்கி வரவில்லை. அதற்குப் பதிலாக, அனைத்துத் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஒன்றிணைந்து, இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை எந்த ஒரு புதிய படத்தின் உரிமையையும் வாங்குவதில்லை என்று தீர்மானித்திருக்கிறார்கள். இந்த முடிவிலிருந்து சன் தொலைக்காட்சி நிறுவனம் மட்டும் விலகி நிற்கிறது. வெற்றி பெரும் படங்களை மட்டும் வாங்குவோம் என்பது சன் டிவியின் முடிவு என்கிறார்கள்.

முன்பு ஒரு படத்தைப் பெரும் விலை கொடுத்து வாங்கித் திரையிட்டால், போட்ட பணம் விளம்பரங்கள் மூலமாகத் திரும்ப வந்தது. தற்போது நஷ்டம் ஏற்படுகிறது என்று தொலைக்காட்சித் தரப்பு சொல்கிறது. படங்களின் பட்ஜெட் அதிகமாகிவிட்டது என்று சொல்லித் தயாரிப்பாளர்கள் அதிக விலை கேட்கிறார்களாம். “நாங்கள் அவ்வளவு விலை கொடுத்து வாங்கி நஷ்டமாகத் தயாராக இல்லை” என்கிறது தொலைக்காட்சி நிறுவனங்களின் தரப்பு.

இதே நிலை தொடர்ந்தால், இனி தயாரிக்கவிருக்கும் படங்கள் தொலைக்காட்சி உரிமம் என்ற ஒன்று இருக்கிறது என மறந்துவிட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிடக்கூடும். தயாரிப்பாளர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களையும் பாதிக்கும் இந்தத் தேக்க நிலை சீராவதற்கான அறிகுறி எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. திரையரங்கிலும் கூட்டம் இல்லை, தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு இல்லை என்றால் கள்ளச் சந்தை பெருகவே இது வழிவகுக்கும் என்பதை உணர்ந்து இரு தரப்பும் செயல்பட வேண்டும் என்பதே முறையாகப் படம் பார்க்க விரும்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

SCROLL FOR NEXT