இந்து டாக்கீஸ்

நயன்தாராவுடன் நடிக்க நான் தயார்!- திரிஷா சிறப்பு பேட்டி

கா.இசக்கி முத்து

தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளைக் கடந்து நடைபோடும் தற்காலக் கதாநாயகியரில் ஒருவர் த்ரிஷா. அவர் திரையுலகுக்கு வந்து 12 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஜெயம்ரவியுடன் மூன்றாவது முறையாக த்ரிஷா ஜோடி சேர்ந்திருக்கும் ‘சகலகலா வல்லவன்’ த்ரிஷாவுக்கு 48-வது படம். இப்போதும் இளமைத் துடிப்புடன் நடித்துவருபவரை சந்தித்துப் பேசினோம்…

உங்களுடைய 50-வது படம் எப்படி அமைய வேண்டும் என நினைக்கிறீர்கள்?

என்னுடைய 50-வது படம் ‘தூங்காவனம்’ அல்லது ‘அரண்மனை-2’ ஆகிய படங்களில் ஒன்றாக இருக்கும். எது என்பது எனக்கு உண்மையில் தெரியாது. இரண்டு படப்பிடிப்புகளுமே மிகவும் வேகமாக நடந்து வருகின்றன. ‘தூங்காவனம்’ படத்தில் உள்ள பாத்திரம் போல இதுவரை நான் பண்ணியதே இல்லை. வேறு ஒரு வித்தியாசமான கெட்டப்பில் த்ரிஷாவைப் பார்க்கலாம்.

‘அரண்மனை-2’ என்னுடைய முதல் பேய் காமெடி படம். ஒரு இடத்தில் கூட போர் அடிக்காத மாதிரி படம் நன்றாக வந்திருக்கிறது. சுந்தர்.சி ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும், இந்தப் படம் நாம் இணைந்து பண்ணலாமா என்று கேட்கும்போதெல்லாம் பல்வேறு காரணங்களால் நடிக்க முடியாமல் போய் இருக்கிறது. இறுதியாக இந்தப் படம் மூலமாக இணைந்திருக்கிறோம்.

தொடர்ந்து படங்கள் ஒப்பந்தமாவதன் ரகசியம் என்ன?

திரையுலகிலும் நிறைய பேர் ‘என்ன திடீர்னு நிறைய படங்கள் பண்ணுறீங்க?’ என்று கேட்கிறார்கள். எந்த நடிகையை எடுத்துக்கொண்டாலும் 6 மாதம் இடைவெளி விழும். அப்புறமாக தொடர் படங்கள் வரும். எனக்குத் தொடர்ந்து பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் படங்கள் கிடைப்பது அதிர்ஷ்டம்தான் என்று சொல்ல வேண்டும்.

நீங்கள் இதுவரை நடித்த படங்களுள் உங்களால் மறக்க முடியாத படம் எது? ஏன்?

என்னைப் பொறுத்தவரை நான் பண்ணிய 48 படங்களுமே சிறந்த படங்கள்தான். ஒரு படத்தை மட்டும் தனியாக நான் சொல்ல முடியாது. என்னுடைய ஒவ்வொரு படத்தையும் நான் தேர்வு செய்ய ஒரு காரணம் இருக்கிறது. பெரிய நடிகர் மற்றும் இயக்குநர், சின்ன நடிகர் மற்றும் இயக்குநர் என்று எல்லாம் நான் பார்ப்பதே இல்லை. கதை நன்றாக இருந்தால் போதும் யாருடனும் நடிக்கத் தயாராகிவிடுவேன்.

இன்னும் நீங்கள் ரஜினியுடன் இணைந்து நடிக்கவில்லையே?

கண்டிப்பாக இப்போதும் எனக்கு நடிக்க ஆசையாகத்தான் இருக்கிறது. ரஜினி சாரிடம்தான் ‘த்ரிஷாவுடன் எப்போது நடிக்கப்போகிறீர்கள்’ என்று நீங்கள் கேட்க வேண்டும். நான் அந்த வாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

சமூக வலைதளத்தில் நிறைய சர்ச்சைகள், கிண்டல்களிலெல்லாம் சிக்கியிருக்கிறீர்களா?

அப்படியெல்லாம் நான் சிக்கியதில்லை. நிறைய பேர் அசிங்கமாகத் திட்டுவதெல்லாம் எனக்கு நடந்திருக்கிறது, இல்லை என்று சொல்லவில்லை. திட்டுபவர்களை என் தளத்துக்குள் நுழைய முடியாதபடி தடுத்துவிடுவேன். அதற்குப் பிறகு அவர்கள் என்ன சொன்னாலும் எனக்கு வராது. எப்போதுமே நான் எதையுமே அதிகமாக கண்டுகொள்வதில்லை. அதைத்தான் எனது பலமாகக் கருதுகிறேன்.

எந்த நாயகியோடு இணைந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?

நயன்தாராவுடன் நடிக்கத்தான் ஆசை. நிறைய பேர் என்னிடமே ‘நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து நடிக்கணும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். நானும் நயனும் நெருங்கிய தோழிகள். வெங்கட்பிரபு எப்போதுமே ‘நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கப்போவதாக இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்’ என்று சொல்லுவார். ஆனால், எப்போதுமே நான் யாருடனும் சேர்ந்து நடிக்க தயார்தான்.

திருமணம் நின்றுபோனதற்குக் காரணம் என்ன? மீண்டும் திருமணத்தைப் பற்றி எப்போது யோசிக்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?

திருமண நிறுத்தம் என்பது முடிந்துபோன விஷயம். அதைப் பேசி என்னவாகப் போகிறது. நான் பேசலாம், ஆனால் குடும்பங்கள் சம்பந்தப்பட்டது. அதனால்தான் பேச வேண்டாம் என்று சொல்கிறேன். நான் நாளைக்கே எனது மனதுக்குப் பிடித்த ஒருவரைப் பார்த்தேன் என்றால் கண்டிப்பாகத் திருமணத்தைப் பற்றி யோசிப்பேன். திருமணத்துக்கு நேரமெல்லாம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. திருமணத்தில் கண்டிப்பாக நம்பிக்கை இருக்கிறது. அதே நேரம் அதைப் பண்ணித்தான் ஆக வேண்டும் என்று இல்லை. சரியான ஆள் கிடைத்தால் கண்டிப்பாகத் திருமணம் செய்துகொள்வேன்.

SCROLL FOR NEXT