ஜியோ சர்க்கஸ் இப்போது கிருஷ்ணகிரியில் நடந்துவருகிறது. பெருந்திரளான ரசிகர்கள் இந்த சர்க்கஸைக் காணச் சென்றுவருகிறார்கள். அபரிமிதமான அறிவியல் வளர்ச்சிக்கு இடையிலும் பழமையின் மீதான ஒரு புதிய கவனம் சமீப காலத்தில் அதிகரித்துவருகிறது. அதன் ஒரு பகுதியாகவே சர்க்கஸுக்கான வரவேற்பும் உள்ளது. ஆனால், சினிமாவைப் போல சர்க்கஸ் ஒரு காலகட்டத்தில் வெகு மக்களின் ஜீவனாக இருந்திருக்கிறது. அதனால்தான் போலீஸ் படம், வக்கீல் படம்போல் சூப்பர் ஸ்டார்கள் பலரும் ஒரு சர்க்கஸ்காரராகவும் நடிக்க விருப்பப்பட்டார்கள்; நடித்தார்கள்.
வினோதமான மனிதர்களும் விலங்குகளும் இணைந்த ஒரு புதிய சமூகமாக சர்க்கஸ் கலைஞர்கள் வாழ்ந்தார்கள். சாதாரண வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட மனிதர்கள் வந்து சேரும் இடமாக சர்க்கஸ் இருந்தது. சினிமாக் கனவைப் போல் சர்க்கஸும் ஒரு காலத்தின் சாமானியனின் கனவாகவும் இருந்திருக்கிறது. யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட சாகசத்தையும் இந்த சர்க்கஸ் அவர்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும்.
139 வருடங்கள் முன்பு மார்ச் 20-ல் இந்தியாவின் முதல் சர்க்கஸ் நிறுவனமான ‘கிரேட் இண்டியன் சர்க்கஸ்’ தனது சாகசத்தை அன்றைய பம்பாய் மாகாணம் மிரஜ்ஜில் தொடங்கியது. அதற்கு ஓர் ஆண்டு முன்புதான் பம்பாயில் ‘ராயல் இத்தாலியன் சர்க்கஸ்’ நிறுவனத்தின் சர்க்கஸ் நடந்தது. வில்லியம் கிரனி இயக்கத்தில் நடந்த இந்த சர்க்கஸைக் காண இன்றைய மகாராஷ்டிரத்தின் ஒரு பகுதியாக உள்ள சாங்லி சமஸ்தான அரசரான பாலாசாகேப் பத்வர்தன் சென்றார்.
அவருக்கு அந்தக் கழைக்கூத்தாடிக் கலைஞர்கள் நடத்திய வேடிக்கை பிடித்துப் போனது. அவருடன் சென்ற அவருடைய மெய்க்காப்பாளரான விஷ்ணுபந்த் மோரேஸ்வருக்கோ அதுவே வாழ்க்கை என்றானது. அந்த ஆசையுடன் அவர் கிரனியைச் சந்தித்தார். ஆனால் அவரோ, “இந்தியாவில் இப்போது சர்க்கஸ் தொடங்குவது நல்லதல்ல. இன்னும் 10 வருஷம் போகட்டும் பார்க்கலாம்” என்றிருக்கிறார். அதுவே விஷ்ணுபந்துக்கு இதைத் தொடங்கியே ஆக வேண்டும் என்ற உறுதியைத் தந்திருக்க வேண்டும். அதனால்தான் அடுத்த ஆண்டே தன் மனைவியுடன் இணைந்து ‘கிரேட் இண்டியன் சர்க்கஸை’த் தொடங்கினார்.
விஷ்ணுபந்த் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று தனது சர்க்கஸை நிகழ்த்தினார். அவரது தளசேரிப் (கேரளா) பயணம் அவரது வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக ஆனது. அங்குதான் பின்னாளில் அவருடைய சீடரான கீலேறி குஞ்ஞிக்கண்ணனைச் சந்திக்கிறார். இங்குதான் கேரளத்தின் சர்க்கஸ் தொடர்பு தொடங்குகிறது. இன்று கேரளத்தில் அதிகமான சர்க்கஸ் நிறுவனங்கள் இருப்பதற்கும், அங்கு சர்க்கஸுக்கான பள்ளி இருப்பதற்கும் காரணம் இந்தச் சந்திப்புதான்.
குஞ்ஞிக்கண்ணன் ‘கிரேட் இண்டியன் சர்க்கஸின்’ ஒரு பாகமாக ஆனார். இவர் 1901-ல் கொல்லம் அருகே சிரக்கரையில் சர்க்கஸ் பள்ளியைத் தொடங்கினார். இந்தப் பள்ளியில் பயின்றவர்களே அடுத்த பல பத்தாண்டுகளில் இந்திய சர்க்கஸை ஆண்டனர். ஜெமினி, பாம்பே, ராஜ்கமல் போன்ற பிரபலமான சர்க்கஸ் நிறுவனங்கள் அவற்றில் சில.
குஞ்ஞிக்கண்ணனின் பொன்விழா ஆண்டான 2010-ல் கேரள அரசு அவர் பிறந்த தளசேரியில் அவர் நினைவாக சர்க்கஸ் பள்ளியைத் தொடங்கியது. அரசு உதவியால் நடத்தப்படும் ஒரே சர்க்கஸ் பள்ளியாக அது இருந்தது. ஆனால், கேரள அரசு 2016-ல் அதை மூடிவிட்டது. இதை இன்றைய சர்க்கஸ் கலை நிலையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.
- ஜெய்