மானா
திரை நடிப்பின் முன்மாதிரியாக, நம் மத்தியிலிருந்து உலக சமுதாயத்துக்கு ஒருவரைக் காட்ட முடியும் என்றால் அவர் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன். ஹாலிவுட்டின் முன்னோடி ‘மெத்தட் ஆக்டிங்’ நடிகரான மார்லன் பிராண்டோ கூட ‘என்னைப் போல் சிவாஜி நடித்துவிடலாம்; அவரைப் போல நான் முயன்றாலும் நடிக்க முடியாது’ என்று வியந்து பாராட்டினார். அப்படிப்பட்ட சிவாஜியை நடிப்புப் பல்கலைக்கழகமாக மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்டுவிட்டோம்.
ஆனால் அவரை, ஒரு பொறுப்புமிக்க குடும்பத் தலைவனாக, பாசம் மிகுந்த தந்தையாக, அண்ணனாக, அப்பழுக்கற்ற காமராசரின் பெருந்தொண்டனாக, தமிழகம் தவறவிட்ட ஓர் அற்புதத் தலைவனாக அடையாளப்படுத்துகின்றன இம்மூன்று வரிசை நூல்கள்.
இவற்றில் குவிந்துகிடக்கும் வியப்பூட்டும் தகவல்கள் நீண்ட கால அவகாசம் கோரும் தேடல் மூலமே சாத்தியமாகியிருக்க முடியும். அதைத் தன்னுரையில் மூன்று ஆண்டுகள் என்று லயிப்புடன் தெரிவித்திருக்கிறார் நூலாசிரியர் மு.ஞா.செ.இன்பா. ஒரு பெருங்கலைஞனுக்கு ரசிகர்கள் தோன்றுவது இயல்பு. இவ்வரிசை நூல்களை முயன்று எழுதியிருக்கும் ஆசிரியரும் அவரது தீவிர ரசிகர் என்பதை அவரது கட்டுரை மொழி எடுத்துக்காட்டுகிறது. அதேநேரம் துடிப்பான கவிதை மொழியின் ஊடாட்டம் வரலாற்றுக் கட்டுரைகளை இன்னிசையுடன் வாசிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.
முதல் பாகம் ‘கணேசன் முதல் சிவாஜி வரை – அறியாத அரசியல் சினிமா’ என்ற துணைத் தலைப்புக்கு அர்த்தம் சேர்க்கும்விதமாக சிவாஜி ஏற்ற கதாபாத்திரங்கள் அவரை எப்படி நட்சத்திரமாக்கின என்பதை எடுத்துக்காட்டுபவை. ‘திராவிடம் முதல் தேசியம் வரை- அறியாத சினிமா அரசியல்’ என்ற துணைத் தலைப்புடன் வெளிவந்திருக்கும் அடுத்த இரண்டு பாகங்களும் கொட்டித்தரும் செய்திகள் ஏராளம். உதாரணத்துக்கு ‘பைலட் பிரேம்நாத்’ படத்தின் பின்னணியிலிருந்த அரசியல், கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திரம் மறைந்த ராஜ்குமார் சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டபோது, அவரை மீட்க நடந்த முயற்சியில் சிவாஜியின் பங்கு எனப் பல. செல்லுலாய்ட் சோழனுக்கு மூன்று சிறந்த தகவல் சமர்ப்பணம் இந்த நூல் வரிசை.
கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை
மூன்று பாகங்கள்
ஆசிரியர் : மு.ஞா.செ.இன்பா
கைத்தடி பதிப்பகம், சென்னை - 41, தொடர்புக்கு: 9566274503