கிரீஸ் நாட்டின் பிரைட்ஸ் (2004) திரைப்படம் மிகையற்ற சினிமாவுக்கு நல்ல உதாரணம். 1922-ல் நிகழும் இதன் கதைக்களம் ஒரு மாறுப்பட்ட கப்பல் பயணம்.
கடலோரத் தீவுக் கிராமம் சமுத்ராஸ். நிறையப் பெண்களைப் பெற்றெடுத்த ஒரு விவசாயி அவர்களுக்குத் திருமணம் தள்ளிப்போவது குறித்துக் கவலையடைகிறான். மூத்த மகள் உடல் நலம் குன்றியதால், கணவனுக்குக் குழந்தை பெற்றுத்தர இயலாத நிலையில் பிறந்த வீட்டுக்கே வந்துவிடுகிறாள். அவளுக்கு அடுத்து உள்ள நிகி துக்கா (விக்டோரியா ஹார்லாபிடோ) மெயில் ஆர்டர் மணப்பெண்ணாக அமெரிக்கா செல்லச் சம்மதிக்கிறாள்.
ஏற்கெனவே கிரீஸின் பல பகுதிகள், தவிரத் துருக்கி, ரஷ்யா, ஆர்மீனியா ஆகிய நாடுகளிலி ருந்து 700க்கும் மேற்பட்ட மணப்பெண்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது எஸ்எஸ் கிங் அலெக்சாண்டர் கப்பல். நிகி துக்கா உள்ளிட்ட பெண்களை ஏற்றிக்கொண்டு ஒரு புதிய விடியலை நோக்கிப் புறப்படுகிறது.
அதே கப்பலில் புகைப்படப் பத்திரிகையாளன் நார்மன் ஹாரீஸ் (டாமியன் லெவீஸ்) என்பவன் வருகிறான். அவனுடைய நாகரிகமான நட்பு அவளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அதுவே காதலாக மாறுகிறபோது அவளுடைய நிலை என்ன என்பதைத்தான் படம் ஒரு கவிதையாக வடித்துத் தருகிறது.
முதல் மனைவிகளைப் பிரிந்த சிகாகோ ஆண்களுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படச் செல்லும் இந்த 700 சொச்சம் பெண்கள் பயணிப்பது மூன்றாவது வகுப்பில். புகைப்படக் கலைஞன் நார்மன் ஹாரீஸுக்கு மட்டும் முதல் வகுப்புப் பயணம்.
நார்மனுக்குப் பெண்களின் இத்தகைய வித்தியாசமான வாழ்க்கைப் பயணம் குறித்த பரிவும் பொதுவாகப் பெண்களின் மீது மரியாதையும் உண்டு. அவனும் மணவிலக்குப் பெற்றவன்தான்.
துருக்கியில் நடந்த போரில் புகைப்படக் கலைஞனாகப் பங்கேற்க, பிரபலப் பத்திரிகையொன்று அவனை அனுப்பி வைக்கிறது. துரதிர்ஷ்டவசமாக நார்மனது படங்கள் நிராகரிக்கப்பட்டுவிட, வேலையை விட்டுவிட்டுக் கப்பலில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான்.
ஒரு நாள் கப்பல் மேல் தளத்தின் விளிம்புப் பகுதிக்கு வந்து அவன் படங்களைக் கிழித்துக் கடலில் வீசிக் கொண்டிருக்கும்போதுதான், யதேச்சையாக அங்கே வந்த நிகியுடன் தனிப்பட்ட அறிமுகமும் நட்பும் கிளைக்கிறது. அவளது ஆங்கிலத்தை அவன் கிண்டலடித்தவாறே பாராட்டவும் செய்கிறான். அன்றிலிருந்து பெண்களிடையே தனித்து அமர்ந்து மெஷினில் துணி தைத்துக்கொண்டிருக்கும் அவளைச் சந்திக்க அடிக்கடி வருகிறான். திட்டங்கள் எதுவுமின்றி வேறு இடங்களிலும் சந்திக்கிறார்கள்.
ஒரு நாள் பெண்கள் அனைவரையும் மணப்பெண் கோலத்தில் தயாராக இருக்கச் சொல்கிறான். அனைவரையும் தனித்தனி அப்சரஸ்களாக இவன் போட்டோ பிடித்துத் தருகிறான். நிகி துக்கா முதலில் இதற்கு ஒத்துழைக்க மறுத்துப் பின்னர் ப்ளைன் உடை யில் படம் எடுத்துக்கொள்ளச் சம்மதிக்கிறாள்.
வெப்பச் சலனத்தில் உண்டான குளிர்ந்த காற்றைப்போல, நட்பு வளர்ந்து காதலாவதற்குக் காலம் பிடிக்கிறது. இந்த நேரத்தில் அவளுடன் வந்த தோழி, பிரிய நேர்ந்த கிராமத்துக் காதலனை நினைத்துக் கடலில் விழுந்து உயிரைப் போக்கிக்கொள்கிறாள். அவள் எப்போதும் வாசிக்கும் காற்றுத் துருத்தி கடலில் மிதப்பதை மட்டுமே காண முடிகிறது. காதலின் வலிமையைக் கண்டு அஞ்சுகிறாள் நிகி.
இன்னொரு இளம் தோழி, கப்பலில் வந்த இளம் உதவி மாலுமியைக் காதலித்துச் சிகாகோ வந்ததும் யார் கண்ணிலும் படாமல் அவனோடு தப்பித்துச் செல்வது தனிக்கதை.
அக்காவுக்குப் பதிலா(ளா)கத் தான் சிகாகோ டெய்லருக்கு வாழ்க்கைப்பட வந்திருப்பதாகக் கூறும் நிகி, குடும்ப மானத்தை, கஷ்டத்தை முன்னிட்டு மாறான முடிவு எதையும் எடுக்கப் போவதில்லை என்று கூறிவிடுகிறாள். பிரியும் தறுவாயில் கொப்பளிக்கும் நேசத்தைத் தடுக்க இயலாமல் அவனை முத்தமிட்டுத் தழுவிக் கொள்கிறாள். காத்திருக்கும் கணவன்மார் கூட்டத்தை நோக்கி அவளை அனுப்பிவிட்டுத் தூர நின்றுவிடுகிறான் நார்மன்.
ஆர்ப்பாட்டமில்லாத தூரிகையால் வரைந்தது போன்ற யோர்கோஸ் ஆர்வனிடிஸின் ஒளிப்பதிவும், நம்முடைய கடந்த கால நினைவுகளையும் மீட்டி விட்டுச் செல்லும் ஸ்டாமாடிஸ் ஸ்பானெலிடாகிஸின் இசையும், வாழ்வின் ஆரம்பங்களையல்ல அஸ்தமனங்களையே உயிர்ப்பிக்கச் செய்யும் பேண்டலீஸ் வோல்காரீஸின் உன்னத இயக்கமும் படத்திற்கு அப்பால், காலத்தைக் கடந்து மனதை வருடிக்கொண்டேயிருக்கும்.