ஆர்.சி.ஜெயந்தன்
திரையரங்கத் தொழில் நடத்திவரும் தமிழக ‘எக்ஸிபிட்டர்கள்’ மத்தியில் ஒரு குண்டு வெடித்துவிட்ட பதற்றம் உருவாகி இருப்பதாகத் தெரிகிறது. பதற்றத்தை உருவாக்கியிருப்பவர் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.
‘தமிழகத் திரையரங்குகளில் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யும் ஒற்றைச் சாளர ஒருங்கிணைப்புத் திட்டம் விரைவில் நடை முறைக்கு வர இருப்பதாக’ அவர் சமீபத்தில் குறிப்பிட்டார். நமது அமைச்சருக்கு முன்பே, ‘எதிர்வரும் 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் திரையரங்க டிக்கெட் விற்பனை என்பது ஒற்றைச் சாளரமாக்கப்படும்’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார்.
வரி ஏய்ப்பும் பிளாட் ரேட்டும்
திரையரங்கை நடத்தி வருபவர்களுக்கு எட்டிக்காயாக இந்த அறிவிப்புகள் கசப்பதற்கானக் காரணத்தைத் தயாரிப்பாளர் தரப்பில் விசாரித்தோம். “திரையரங்கத் தொழிலை நேர்மையாக நடத்திவரும் வெகு சிலரைத் தவிர, பெரிய படம், சின்ன படம் என்ற பேதமில்லாமல், பெரும்பாலான திரையரங்கினர் ‘இதுதான் வசூல் அறிக்கை’ (DCR – Daily collection report) என்று ஒன்றைக் கொடுப்பார்கள். படம் பார்க்க வந்த ஆடியன்ஸுக்கும் அவர் கொடுக்கும் வசூல் அறிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அவர்கள் கொடுப்பதைத்தான் நாங்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும். கிராமமோ நகரமோ இன்று பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட் கொடுக்கும் பாக்ஸ் ஆபீஸ் கவுண்டரில் கம்ப்யூட்டர், பிரிண்டர் வைத்துதான் டிக்கெட் கொடுக்கிறார்கள்.
ஆனால், எங்களுக்கு முறையான வசூல் அறிக்கை தருவதில்லை. ‘நாங்கள் டிக்கெட் விற்பனையை ஏற்கெனவே கணினி மயமாக்கிவிட்டோம்’ என்று கூறும் இவர்கள், அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்திருக்கும் ஆன்லைன் டிக்கெட் சிங்கிள் விண்டோ சிஸ்டத்தை எதிர்க்கிறார்கள். அதற்குக் காரணம், டிக்கெட் விற்பனையை ஒரே மென்பொருள், சர்வர் மூலம் இணைத்துவிட்டால், இவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு டிக்கெட்டும் கணக்கில் வந்து விடும். டிக்கெட் விற்ற அந்த நொடியிலேயே ஜி.எஸ்.டியும்(18%), எல்.பி.டியும் (உள்ளாட்சி வரி 8%) செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போது முதல் மூன்று நாட்களுக்கு அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்துக்கு மாறாக பிளாட் ரேட்டில் விற்பனை செய்ய முடியாது” என்று கூறுகிறார் பெயரும் முகமும் காட்ட விரும்பாத மூத்த தயாரிப்பாளர்.
வசூல் மன்னர்களின் வேஷம் கலையும்
ஒற்றைச் சாளர டிக்கெட் விற்பனை என்ற அறிவிப்பு, படத்தின் பட்ஜெட்டில் பெரும் தொகையை ஊதியமாகப் பெரும் பல உச்ச நட்சத்திரங்களை எரிச்சல் அடைய வைத்திருப்பதாகத் தெரிகிறது. திரையுலகிலும் அரசியலிலும் முக்கியப் பிரச்சினைகள் வெடிக்கும்போதெல்லாம் அதிரடியான கருத்தை பேட்டியாகவோ, ட்வீட்டோ செய்து தெரிவிக்கும் நமது உச்ச நட்சத்திரங்கள், அமைச்சரின் அறிவிப்புக்குப் பின் தேள் கடி வாங்கியவர்கள் போல் மௌனம் காத்து வருகிறார்கள்.
இது பற்றி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கேவிடம் கேட்டோம். இதைப் பற்றி அவர் கூறும்போது “எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுச் செயல்படுத்த முன்வந்த தமிழக அரசுக்கும், அதை அறிவித்திருக்கும் துறைசார் அமைச்சருக்கும் திரையுலகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆன்லைன் டிக்கெட்டிங் ஒருங்கிணைப்பு மூலம், ஒரு படத்தின் உண்மையான வசூல் என்ன, அதில் லாபம் எவ்வளவு என்பது தயாரிப்பாளர்களுக்கு ஒவ்வொரு காட்சிக் குமே வெளிப்படையாகத் தெரிந்துவிடும்.
அதேபோல ஒரு நடிகருக்கான ஓபனிங் என்ன, இயக்குநருக்கான ஓபனிங் என்ன என்பது துல்லியமாக வெளிச்சத்துக்கு வந்துவிடும். அதை வைத்து அவர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பது இனி சுலபமாகிவிடும். சின்ன படங்களின் வசூலை இனியும் மூடி மறைக்க முடியாது. ஆன்லைன் டிக்கெட்டிங் வந்தபின்னரும் திரையரங்கினர் ஏமாற்றாமல் இருக்க, ஒவ்வொரு காட்சிக்கும் திரையரங்கில் படம் பார்ப்பவர்களின் தலைகளை மட்டும் 28 கோணங்களில் ‘ஹெட் ஷாட்’களாக ஓளிப்படம் எடுத்துதரும் கண்காணிப்புக் கேமராவும் திரையரங்குகளில் பொருத்தப்பட இருக்கிறது.
இதில் பார்வையாளர்களின் பிரைவசி எந்த வகையிலும் பாதிக்காது. ஏனென்றால் முகங்களை இந்தக் கேமரா படம் பிடிக்கப்போவதில்லை. இதன் அடுத்தக் கட்டமாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களைப் பயன் படுத்தித் திரையரங்கில் உணவுப் பண்டங்களின் விலை, தரம் இரண் டையும் ஒழுங்குபடுத்த அரசு திட்ட மிட்டு இருக்கிறது. ” என்கிறார் ஜே.எஸ்.கே.
கட்டணக் கொள்ளைக்கு தடா
நட்சத்திரங்களுக்கு அடுத்த இடத்தில் இந்த அறிவிப்பைக் கண்டு அலறிக்கொண் டிருப்பவை இணையவழி சினிமா டிக்கெட் விற்பனை செய்துவரும் நிறுவனங்கள். ‘இண்டர்நெட் ஹேண்ட்லிங் சார்ஜஸ்’ அதாவது இணையச் சேவைக் கட்டணம் என்ற பெயரால், ஒரு டிக்கெட்டுக்கு 60 ரூபாய் வரை பகல் கொள்ளை அடித்துவருவதாகக் கூறப்படும் நிலையில், இவர்கள் இனிக் கடையை மூட வேண்டி வரும்.
இந்த நிறுவனங்களில் சில, ‘டிக்கெட் புக்கிங் விண்டோவில் உங்கள் படத்தின் விளம்பரம் தெரியும்படி செய்ய எங்களுக்கு விளம்பரக் கட்டணமாகச் செலுத்துங்கள். இல்லாவிட்டால் உங்கள் படம், டிக்கெட் செய்ய இணையத்தைப் பயன்படுத்தும் ரசிகர்களுக்குத் தெரியாமல் ‘ஹைடு’ செய்துவிடுவோம் என்று நிர்ப்பந்தித்து, ரூபாய் 5 லட்சம் வரை கறக்கத் தொடங்கியிருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் பலர் கதறுகின்றனர்.
எப்படியிருப்பினும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மிக முக்கியமாக ரசிகர்களுக்கும் பயனுடையதாகவே ‘ஒற்றைச் சாளர டிக்கெட் விற்பனை ஒருங்கிணைப்பு’ அமையும் என்கிறார்கள். இம்முறையை கேரள அரசு ஏற்கெனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திக் காட்டிவிட்டது.
தொடர்புக்கு: jesudoss.c@hidutamil.co.in