இந்து டாக்கீஸ்

மும்பை கேட்: 31 ஆண்டுகள்

செய்திப்பிரிவு

சல்மான் கான் பாலிவுட்டில் நுழைந்து 31 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இதை நினைவுகூரும்விதமாக, தனது பயணத்தில் உடனிருந்த அனைவருக்கும் தன் சமூக வலைப் பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார். “இந்தியத் திரைத்துறைக்கும் என் சினிமா பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும், குறிப்பாக என் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ட்வீட் செய்திருக்கிறார். 1989-ம் ஆண்டில் வெளியான ‘மைனே பியார் கியா’, அவர் கதாநாயகனாக அறிமுகமான படம். இருப்பினும் 1988-ல் வெளியான ‘பிவி ஹோ தோ ஐசி’ படம்தான் சல்மானின் முதல் படம். ‘மைனே பியார் கியா’ படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயரான பிரேம். அதே பெயரில் அவர் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ‘தபங் 3’, ‘கிக் 2’ படங்களிலும் நடித்துவருகிறார் சல்மான்.

அதிர்ஷ்ட தேவதை

சோனம் கபூர், துல்கர் சல்மான் நடிப்பில் ‘தி ஸோயா ஃபேக்டர்’ திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அனுஜா சவுஹான் எழுதிய ‘தி ஸோயா ஃபேக்டர்’ என்ற நாவலைத் தழுவிய இந்தப் படத்தில் ஒரு விளம்பர நிறுவனத்தின் நிர்வாகி கதாபாத்திரத்தில் சோனமும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் நிகில் கதாபாத்திரத்தில் துல்கரும் நடித்திருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணியைப் பணிநிமித்தமாகச் சந்திக்கும் ஸோயா, 2011 உலகக் கோப்பைப் போட்டியின்போது அணியின் அதிர்ஷ்ட தேவதையாக எப்படி மாறிவிடுகிறார் என்பதுதான் கதைக்களம். அபிஷேக் ஷர்மா, இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

குறையுள்ள கதாபாத்திரம்!

நடிகை பிபாஷா பாஸு, வில்லியாகவும், குறையிருக்கும் கதாபாத்திரங்களிலும் நடிப்பது எப்போதும் சவாலான விஷயம் என்று சொல்லியிருக்கிறார். ‘பச்னா ஐ ஹசீனோ’ திரைப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்திருக்கும் அவர். அந்தப் படத்தில், ஒரு சிறிய கிராமத்தில் இருந்து மும்பைக்கு வந்து பெரிய நடிகையாகும் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- தொகுப்பு: கனி

SCROLL FOR NEXT