இந்து டாக்கீஸ்

வரலாறும் புனைவும்: இரட்டைத் தண்டவாளம் 

செய்திப்பிரிவு

எந்தவொரு வரலாறும் சிறிதேனும் புனைவு கலந்தே பதிவுசெய்யப்பட்டு வந்துள்ளது. மேலும், ஒரு நிகழ்வு, வரலாற்று புத்தகத்தில் இடம்பெறும்போதோ, செவிவழிப் பாடலாகவோ அல்லது கதை வடிவமோ எடுத்து அடுத்துவரும் தலைமுறைகளை வந்துசேரும்போது, அது ஒரு கூழாங்கல்லைப் போல வடிவமும் குணமும் மாறி வந்தடையும் வாய்ப்புகளே அதிகம் என எண்ணத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட நிகழ்வு, வரலாறாக மாறி, பின் அதுவொரு திரைப்படத்தின் கதைக் களமாக வடிவமெடுக்கும்போது அதன் சுவாரசியம் பல மடங்கு கூடிவிடுகிறது.

ஆங்கிலத்தில் ‘வாட் இஃப்’ என்பார்கள். ‘இப்படி நடந்திருந்தால்...?’ அல்லது ‘நடக்காமல் போயிருந்தால்..?’ என்பது போன்ற சாத்தியங்களை வைத்து சுவாரசியமாகக் கதை சொல்லும் முறை ஒன்று உள்ளது. அந்த வகையில், பிரபல ஆங்கில இயக்குநர் குவென்டின் டாரண்டினோ இயக்கத்தில் வெளிவந்த ‘இன்குளோரியாஸ் பாஸ்டெர்ட்ஸ்’, தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் த ஹாலிவுட்’ திரைப்படங்களைக் கூறலாம்.

‘இன்குளோரியஸ் பாஸ்டெர்ட்ஸ்’ 2009-ல் வெளியான திரைப்படம். ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரின் கொலை முயற்சிகள், வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளாக உள்ளன.

திரைப்படமெடுப்பதற்கு ஏற்ற சம்பவங்கள் நிறைந்திருப்பதால் இந்த வரிசையில் அநேகப் படங்கள் உலக அளவிலும் ஹாலிவுட்டிலும் வெளிவந்துள்ளன. முதலில் வீரர்கள் சிலர் ஒரே நோக்கத்தில் பயணிப்பதாக கதை எழுதத் தொடங்கி, அதில் இரண்டாம் உலகப் போரையும் ஹிட்லரையும் சேர்த்து வெகு சுவாரசியமாக வரலாற்றையும் புனைவையும் பின்னியிருப்பார் டாரண்டினோ. அதீதமாகத் திரைப்படங்கள் பார்த்த ரசிகர் என்ற முறையில், ஹிட்லர், திரைப்படங்களின் வலிமையை முழுமையாக உணர்ந்திருந்தார்.

எனவே அதைத் தன் இயக்கப் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தியதையும் வரலாறு நமக்குச் சொல்கிறது. அப்படிப்பட்ட ஹிட்லரை ஒரு திரையரங்கில் வைத்துக் கொல்ல முயற்சி செய்யும் ஒரு சிறு படையின் முயற்சியே ‘இன்குளோரியஸ் பாஸ்டெர்ட்ஸ்’ படத்தின் கதை. உலக அளவில் 370 மில்லியன் டாலர்களை வசூலித்து, டாரண்டினோவின் அதிக வசூல் படங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தையும் பிடித்தது.

எட்டுப் பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது இந்தப் படத்தின் சுவாரசியத்துக்குச் சான்று. பிராட் பிட், க்ரிஸ்டாஃப் வால்ட்ஸ் ஆகியோரது அபார நடிப்பில் சொல்லப்பட்ட கதை, வரலாற்றை மாற்றி எழுதியிருந்தது. இப்படியும் நடந்திருக்கலாம் என்ற மாற்று அல்லது கற்பனை வரலாற்று நோக்கில் வெளிவந்த முக்கியமான படம் இது.

ஹாலிவுட்டில் சார்லஸ் மேன்ஷன் பிரிவினரால் புகழ்பெற்ற நடிகை ஷாரன் டேட்டும் இன்னும் சிலரும் 1969-ல் கொடூரமாகக் கொல்லப்பட்டது ஹாலிவுட்டின் முக்கிய நிகழ்வு. அதன் பின்னணியில் 60-களின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் அன்றாட வாழ்க்கை , மங்கிவரும் ஒரு திரை நட்சத்திரம் ரிக் டால்டன், திரையில் அவருக்கு டூப் போடும் நண்பன் க்ளிஃப் பூத்தின் வாழ்வு, ஹிப்பிக்களின் பரவல், மாறிவரும் ஸ்டுடியோக்கள், தொலைக்காட்சியின் ஆக்ரமிப்பு எனப் பலவற்றையும் கலந்து ஒரு பிரமாதமான கதை சொல்லியிருக்கிறார் டாரண்டினோ.

அதுதான் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் த ஹாலிவுட் ’ (2019). உள்ளபடியே அந்தக் கொலை நிகழ்ந்ததா நிகழவில்லையா என்ற கோட்டைத் தாண்டி வேறொரு கோணத்தில் இந்தப் படம் நம்மை ஈர்க்கிறது. அதீத வன்முறை, பிரமாதமான நகைச்சுவை, மெதுவான கதை நகர்வு, அடுத்தது என்ன எனும் பரபரப்பு , துல்லியமான தயாரிப்பு வடிவமைப்பு எனக் கவர்கிறது இந்தப் படம். இதற்கு நடுவே சார்லஸ் மேஷனைப் பற்றிய மெல்லிய விவரணையும் இடம்பெற்று ஒரு பெரும் வெடிப்பாக படத்தின் இறுதிக்காட்சி அமைந்திருக்கிறது.

கதாசிரியரின் கற்பனைக்கு எல்லையில்லை என்பதற்கு இரு பத்தாண்டுகள் இடைவெளியில் வெளியான ஒரே இயக்குநரின் படங்கள் சிறந்த உதாரணங்கள் எனலாம். காந்தி சுடப்படாமல் தப்பிப்பது, பாரதியார் 80 வயது வரை வாழ்வது, என படத்தின் ஒரு வரிக் கதையை எதிர்காலத்தில் ஒரு தமிழ்த் திரைக்கதையாசிரியர் தனது எண்ணற்ற கற்பனைச் சாத்தியங்களில் விரித்தால் தமிழ் சினிமாவும் புதிய தடத்தில் பயணிக்கும்.

- டோட்டோ
தொடர்புக்கு: tottokv@gmail.com

SCROLL FOR NEXT