மோட்லிஸ் புரொடக்ஷன்ஸ் குழுவினரின் நாடகங்களைப் பார்ப்பது எப்போதும் அற்புதமான அனுபவமாகவே இருந்துள்ளது. ‘தி இந்து’ நாடக விழாவில் சமீபத்தில் பார்த்த மோட்லிஸ்-ன் நான்கு நாடகங்களில் மூன்று ஓரங்க நாடகங்கள். அதில் இரண்டு சாதத் ஹசன் மண்டோ எழுதியவை. இன்னொன்று இஸ்மத் சுக்தாய் எழுதியது.
இந்திய சுதந்திரத்துக்கு முன்னர், ‘ஆபாச எழுத்துகள்’ என்று குற்றம் சாட்டப்பட்டு எழுத்தாளர்கள் மண்டோவும் இஸ்மத் சுக்தாயும் லாகூர் நீதிமன்றத்தில் எதிர்கொண்ட விசாரணையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருந்த சிறு நகைச்சுவை நாடகமும் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது.
மண்டோவின் ‘பு’ (வாசனை) நாடகத்தில் நடித்த அங்குர் விகாலின் நடிப்பும் வெளிப்பாடுகளும் அநாயசமாக இருந்தன. அவரால் தனது அனுபவத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்த முடிந்தது. நாடகத்தின் பெயரையொப்ப பாலுணர்ச்சி யின் சுகந்தமான அனுபவத்தை அங்குர் விகாலின் ‘தன் உரையாடல்’ ஏற்படுத்தியது.
இன்னொரு நாடகமான ‘டிட்வால் கா குத்தா’ (டிட்வாலின் நாய்), போலியான நாட்டுப்பற்றைக் கேலி செய்யும் அங்கத நாடகமாகும். சுய அடையாளமில்லாமல் வாழும் ஒரு உயிரின் படிமமாக, ஆனால் எப்போதும் விசுவாசத்தை நிரூபித்துக் கொண்டேயிருக்கும் கட்டாயத்தில் உள்ளதாக நாய் இருக்கிறது. விசுவாசம் என்ற குணத்தோடு நாம் அதிகம் அடையாளம் காணும் நாய் தான் இந்த நாடகத்தின் மையம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போடப்பட்டிருக்கும் வேலியின் இருபுறமும் காப்பவர்களால் கேள்வி கேட்கப்பட்டு துயரகரமான மரணத்தை அந்த நாய் சந்திக் கிறது. இந்த நாடகத்தில் நடித்த ராகேஷ் சதுர்வேதியின் நடிப்பு அசாதாரணமானது. முடிவில் குற்றவுணர்வு நம் மீதும் படர்கிறது.
இஸ்மத் சுக்தாயின் ‘லிஹாஃப்’ (மெத்தை), தனது ஓரினப் பாலுறவுத் தேர்வு சார்ந்து, ஒரு வளரிளம் பெண் தெளிவுக்கு வரும் கதை. தான் சந்திக்கும் அனுபவங்களின் வழியாக, ஓரினப் பாலுறவுத் தேர்வும் தனது பாலியல் அடையாளத்தின் ஓர் அங்கம்தான் என்ற முதிர்ச்சியை அடைகிறாள். நடிகை ஹீபா ஷா சிறப்பாக அக்கதாபாத்திரத்தை ஏற்று நிகழ்த்தியிருந்தார்.
‘உன் பியாஹதாவோன் கே நாம்’ என்ற நகைச்சுவை நாடகம், ‘ஆபாச எழுத்துக்கள் என்ற குற்றச்சாட்டை’ சாதத் ஹசன் மண்டோவோடு தான் எதிர்கொண்ட நீதிமன்ற விசாரணையை அடிப்படையாக வைத்து இஸ்மத் சுக்தாய் எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது. இந்திய சுதந்திரம், இந்தியப் பிரிவினைக்கு முன்னரான காலகட்டத்தில் நீதிமன்ற விசாரணையின் போது நடக்கும் நிகழ்ச்சிகளை தர்ஷன் கண்டாஸ், இம்ரான் ரஷித் உள்ளிட்ட நடிகர்கள் நகைச் சுவை ததும்ப நிகழ்த்திக் காட்டினர். இந்த விசாரணை நடைபெற்ற ஆண்டு 1942.
நாடகத்தைப் பார்த்துவிட்டு வெளியே வருகிறேன். நாடகத்தின் கதை நடக்கும் காலத்திலிருந்து எத்தனையோ ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் மத அடிப்படைவாதமும், பழைமைவாத நம்பிக்கைகளும் கலைஞர்களை, அவர்களது சுதந்திரமான கலைவெளிப் பாட்டை விசாரணைகளுக்கு இன்னும் இழுத்துக்கொண்டேதான் இருக்கின்றன. அவர்களை நீதிமன்றத்துக்கு இழுப்பதற்குக் காரணமான நாமும் சங்கடத்துடன் சுயபரிசீலனை செய்தபடி நிற்கிறோம். அங்கே மண்டோவும் இஸ்மத் சுக்தாயும் மட்டுமல்ல; நாமும்தான் குற்றவாளிகள்.
இந்த நாடகங்களை தற்காலப் பொருத்தத்துடன் இயக்கிய நசீருத்தின் ஷாவையும் வழங்கிய ரத்னா பதக் ஷாவையும் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
- எம். சோமசுந்தரம்