ஹாலிவுட்டில், கதாநாயகர்களுக்கு இணையாக வசூலில் மில்லியன்களைக் குவிக்கும் வல்லமை வில்லன் கதாபாத்திரங்களுக்கு உண்டு. டிசி காமிக்ஸின் முதன்மை வில்லன் கதாபாத்திரமான ஜோக்கரை மையமாகக் கொண்டு வெளியாகும் முதல் திரைப்படத்துக்கு ‘ஜோக்கர்’ என்றே பெயரிட்டிருக்கிறார்கள். சூப்பர் ஹீரோ பேட்மேனுக்குச் சவாலாகும் வில்லனாக ரசிகர்களைப் பெருவாரியாக ஈர்த்த கதாபாத்திரம் ஜோக்கர்.
1940-ல் டிசி காமிக்ஸ் புத்தகங்களில் ஜோக்கர் வில்லன் அவதரித்தது முதல், பேட்மேன் திரைப்படங்கள்வரை, ஜோக்கரின் வில்லத்தனம் படிப்படியாக விஸ்வரூபம் எடுத்தது. கிறிஸ்டோபர் நோலன் போன்ற இயக்குநர்கள் ஜோக்கரை அடுத்த தளத்துக்குக் கொண்டு சென்றார்கள்.
குரூர மதியூகத்துடன் சூப்பர் ஹீரோக்களுக்குச் சரி நிகராய் சமர் செய்யும் ஜோக்கருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கவே, ஜோக்கரை மையமாகக் கொண்ட முதல் திரைப்படத்தை டிசி பிலிம்ஸ் உருவாக்கி உள்ளது. ஜோக்கராக நடிக்க லியனார்டோ டிகாப்ரியோ முதலானவர்களைப் பரிசீலித்து கடைசியில் ஜோவாகின் ஃபீனிக்ஸ் (Joaquin Phoenix) தேர்வானார். இதர டிசி காமிக்ஸ் கதாபாத்திரங்களைப் போலவே ஜோக்கர் வரிசைத் திரைப்படங்களும் தொடர்ந்து வர இருக்கின்றன.
‘எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும், மனிதர்களை மாறாப் புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும்’ என்ற தாயின் அன்பான அறிவுரையுடன் வளர்க்கப்படுகிறான் ஆர்தர் ஃபிளக் என்ற சிறுவன். ஆனால், வீட்டுக்கு வெளியே அதற்கு முற்றிலும் எதிரான சமூகத்தைச் சந்திக்கிறான். எல்லோரையும் சிரிக்க வைத்து ‘ஸ்டாண்ட் அப் காமெடியனா’கும் அவனது ஆசை துருப்பிடிக்க வைக்கிறார்கள். கோமாளி வேடமேற்கும் இன்னொரு பணியிலும் அவனை அழவே வைக்கிறார்கள். சமூகத்தின் புறக்கணிப்பால் வெறுப்பின் விளிம்பு வரை செல்லும் அவன், அங்கிருந்து நகரை அச்சுறுத்தும் எதிர் நாயகன் ‘ஜோக்கர்’ ஆகப் பரிணமிக்கிறான்.
‘இப்படி உருவாகும் ஜோக்கரே பேட்மேனுக்கும் வில்லனாகிறான் என்றும், அதெல்லாம் கிடையாது இந்த ஜோக்கரின் பாதிப்பிலிருந்தே பேட்மேனுக்கான முதன்மை ஜோக்கர் உருவாகிறான்’ என்றும் பலவிதமாய் படத்தின் கதை குறித்த சேதிகள் உலா வருகின்றன.
ராபர்ட் டி நீரோ, ஸாஸி பீட்ஸ் உள்ளிட்டோர் உடன் நடிக்க டாட் பிலிப்ஸ் இயக்கியிருக்கும் ஜோக்கர் திரைப்படம் அக்டோபர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.