ஆர்.சி.ஜெயந்தன்
தெருக்களும் பெரிய சாலைகளும் ஒற்றையடிப் பாதைகளாகப் பிறந்தவை. வீடுகளும் வணிகமும் பெருகியபோது காலந்தோறும் வரலாற்றை உண்டு வளர்ந்தவை. ஊர்களின் ரத்த நாளங்கள் போன்றவை. சென்னை எனும் மீனவ கிராமம், ஆங்கிலேயர்களால் வாங்கப்பட்டு, அவர்களது வணிக, அரசியல் கேந்திரமாக உருமாறத் தொடங்கிய 1600-களில் ஜார்ஜ் கோட்டையை ஒட்டி உருவான பகுதியே கறுப்பர் நகரமாக இருந்தது. அதுவே, இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூடியபோது, அவரது பெயரால் ஜார்ஜ் டவுன் ஆனது.
ஜார்ஜ் டவுன் பகுதியின் இதயமாக, அங்கே மிக நீளமானதும் நகரை மற்ற பகுதிகளுடன் இணைப்பதுமான தங்க சாலை (Mint Sreet), தொடக்கக் காலச் சென்னை யின் மிகப் பழமையான சாலை. அதன் காரணமாகவே சென்னையின் சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்வை வளர்த்தெடுத்ததில் பெரும்பங்கு வகித்து வந்திருக் கிறது. இச்சாலையின் இருமருங்கிலும் கிளை பரப்பும் தெருக்கள் ஒவ்வொன் றும் தனி வரலாறு கொண்டவை.
இறுதியில் நிலைத்த பெயர்
தங்க சாலை என்ற பெயர் எடுத்த எடுப்பிலேயே கிடைத்துவிடவில்லை. இது காலம் அதற்குக் கொடுத்த பெயர். 1800-களில் தங்களது துணி வணிகத்தை வளர்க்கும் நோக்குடன் கிழக்கிந்திய கம்பெனியினர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சலவைத் தொழிலாளர்களையும் சாயம் தோய்ப்பவர்களையும் இங்கே குடியமர்த்தினர். அவர்களே இதற்குச் சலவைத் தொழிலாளர் தெரு (Washers street) என்று பெயரிட்டு அழைத்தனர்.
வெகு விரைவில், தொழிலாளர்களுக்கும் ஆங்கி லேயர்களுக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றிய துபாஷிகள் (இரு மொழி அறிந்தவர்கள்), வட்டி, துணி வணிகத்தில் ஈடுபாடு காட்டிய கோமுட்டி, பெரி செட்டியார்கள், நூல், துணி வியாபாரம் செய்ய குஜராத்தின் சௌராஷ்ட்ராவிலிருந்து வந்த பிராமணர்கள், அடகு வணிகத்தில் ஆர்வம் காட்டிய ராஜஸ்தான் மார்வாரிகள் ஆகியோர் இதே தெருவில் குடியேற, சலவைத் தொழி லாளர்கள் தெருவின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது.
பலமொழிகள் பேசும் பகுதியாக விளங்கிய இந்தத் தெருவில் 1841-ல் நாணயங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்தது கிழக்கிந்தியக் கம்பெனி. அதுமுதல், நாணயப் பரிமாற்றம், நாணயத் தயாரிப்பு என்பதை அர்த்தப்படுத்தும்விதமாக மிண்ட் தெரு என மாறி, அதுவே இன்றுவரை நிலைத்துவிட்டது. ஆங்கிலேயர் நிறுவிய இந்த நாணயத் தொழிற்சாலையில் தங்க நாணயங்களும் தயாரிக்கப்பட்டதால், தமிழில் தங்க சாலை என்று அழைக்கப்பட்டது.
அச்சும் ஆன்மிகமும்
நாணயத் தொழிற்சாலை ஒரு கட்டத்தில் ஆங்கில அரசாங்கத்தின் அச்சுக் கூடமாகவும் மாறியபோது இந்தச் சாலையின் கலை, கலாச்சார முகம் புதிய பரிமாணத்தை எட்டியது. தமிழ் உரைநடையை அச்சில் ஏற்றிய முன்னோடியான ஆறுமுக நாவலர், தங்க சாலையில் ‘வித்தியானுபாலன இயந்திர சாலை’ என்ற பெயரில் தமிழ் அச்சகம் ஒன்றை 1860-ல் தொடங்கி திருக்குறளை முதன்முதலில் அச்சிட்டார். அதன் பின்னர் தங்க சாலையில் அச்சகங்கள் பெருகி் அத்தொழிலுக்குப் பெயர்பெற்ற கேந்திரமாக மாறியது. சைவ சமயத் தமிழறிஞரான ஆறுமுக நாவலர், சங்கத் தமிழ் நூல்களுக்கு அப்பால், சிவாலய தரிசன விதி, சைவசமய சாரம், திருமுருகாற்றுப்படை உரை, பெரியபுராணம் உள்ளிட்ட சமய நூல்களையும் அச்சிட்டார்.
ஆன்மிக அறிவின் அச்சுக் கேந்திரமாக தங்க சாலை மாறியதால் இங்கே 1889-ல் 1889-ல் இந்து இறை யியல் பள்ளி (The Hindu Theological School) தொடங்கப்பட்டது. மேலும், பல பள்ளிக் கூடங்கள் இங்கே பெருகின. பள்ளிகள், கர்னாடக இசை வழியே பக்தியைப் பயிற்றுவித்த அதேநேரம், இசைக் கச்சேரிகளை நடத்தும் சபாக்களையும் தொடங்கி நடத்தின. 1909-ல் இந்து இறையியல் பள்ளியில் சி. சரஸ்வதி பாய் என்ற பெண்மணி தனது முதல் ஹரிகதை நிகழ்ச்சியை நடத்தினார். ஒரு பெண் ஹரிகதை நடத்துவதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது.
கச்சேரிக்களுக்குக் கட்டணம் செலுத்தி டிக்கெட் கொடுக்கும் முறையைத் தங்க சாலையில் இயக்கிவந்த தொண்டைமண்டலம் சபா முதன் முதலில் மதராசப் பட்டினத்துக்கு அறிமுகப்படுத்தியது. அச்சுத் தொழில், ஆன்மிகப் பணி, கல்விப் பணி என விரிந்த தங்க சாலையிலிருந்துதான் ‘ஆனந்த விகட’னும் ‘தி இந்து’வும் அச்சாகி வெளிவந்தன. அன்று பிரபலமாக இருந்த நூற்றுக்கணக்கான தமிழ், தெலுங்கு பருவ இதழ்கள் இங்கே அச்சாகி தென்னகமும் முழுவதும் சென்று சேர்ந்தன.
மேடையும் திரையும்
அச்சு ஊடகம் வளர்த்த தங்க சாலை, அரங்கக் கலையான நாடகத்தையும் திரையரங்குகளையும் சுவீகரித்துக்கொண்டதில் ஆச்சரியமில்லை. ஆங்கிலேய அரசின் அச்சகத்தை ஒட்டியே ரகுபதி வெங்கையா தனது ‘கிரவுன்’ திரையரங்கைத் தொடங்கினார். ஆனால் அவருக்கு முன்பாக நாடகங்கள் நடத்துவதற்கு என்றே அரங்கமொன்றை இத்தெருவில் அமைத்தவர் முருகேச முதலியார். பொன்னேரியைச் சேர்ந்த இவர் மிண்ட் சாலையின் கிளைத் தெருவான புனித சேவியர் தெருவில் 10 கிரவுண்ட் நிலத்தை வாங்கி பலபொருள் அங்காடி ஒன்றைக் கட்டினார்.
பொருட்களை வாங்க, அடிக்கடி பம்பாய்க்குச் சென்றுவந்த முருகேசன், அங்கே நடத்தப்பட்ட நாடகங்களைக் கண்டு வியந்தார். மதராஸ் திரும்பி, பலபொருள் வணிகத்தைக் கைவிட்டு, தனது அங்காடியை 1910-ல் ஒரு நாடக அரங்கமாக மாற்றி அமைத்து அதற்கு ‘மெஜஸ்டிக்’ தியேட்டர் என்று பெயரிட்டார். அந்த அரங்கில் எஸ்.ஜி.கிட்டப்பா தொடங்கி, டி.கே.சண்முகம் சகோதரர்கள், காளி என்.ரத்னம் வரை பல முன்னோடிக் கலைஞர்கள் நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார்கள்.
பின்னர் சலனப் படங்கள் அறிமுகமானபோது மும்பையிலி ருந்து திரையிடல் கருவிகளை வாங்கிவந்த முருகேசன், அவற்றை நாடக அரங்கில் பொருத்தி, அதைத் திரையரங்காக மாற்றினார். சலனப் படங்களைக் காணக் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோத, ‘மெஜஸ்டிக்’ திரையரங்க வளாகத்திலேயே ‘பிரின்ஸ்’ என்ற புதிய திரையரங்கைக் கட்டினார். ஆனால் ஆங்கில அரசு அதற்கு உரிமம் தர மறுத்துவிட்டதால், தொடங்கிய வருடத்திலேயே மூடப்பட்டது.
1931-ல் சினிமா பேசத் தொடங்கியபோது மெஜஸ்டிக் திரையரங்கம் ‘கினிமா சென்ட்ரல்’ என்று பெயர் மாற்றப்பட்டது. இந்தியாவின் முதல் பேசும்படமான ‘ஆலம் ஆரா’, தமிழின் முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’ தொடங்கி பேசும்படங்களைத் திரையிடத் தொடங்கிய கினிமா சென்ரல் மதராசப்பட்டினத்தின் கனவுக் கூடங்களில் ஒன்றாக மாறிப்போனது. ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் வரை இத்திரையரங்கில் ஓடி சாதனை படைத்த படங்கள் பல.
முருகேச முதலியாரின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் பரமசிவ முதலியார் தன் தந்தையின் நினைவாக முருகன் டாக்கீஸ் என கினிமா சென்ட்ரலுக்கு பெயர் மாற்றினார். இன்று முருகன் டாக்கீஸ் மட்டுமல்ல; பழம்பெரும் சென்னையின் கனவுக் கூடங்கள் அனைத்தும் வணிக வளாகங்களாகவும் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறி நிற்பது காலத்தின் கோலம்.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in