இந்து டாக்கீஸ்

மும்பை கேட்: அந்த மூன்று பேர்!

செய்திப்பிரிவு

கரண் ஜோஹர் இயக்கத்தில் 21 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘குச் குச் ஹோதா ஹை’ இந்திப் பட வரலாற்றில் ‘காதல் கிளாசிக்’ ஆகிவிட்டது. அதன் இயக்குநர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் அந்தப் படத்தை மறுஆக்கம் செய்தால், அதில் யாரெல்லாம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சமீபத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

1998-ல் வெளியான ‘குச் குச் ஹோதா ஹை’, ராகுல் (ஷாருக் கான்), டீனா (ராணி முகர்ஜி), அஞ்சலி (காஜோல்) ஆகியோரின் நட்பும் அதைத் தொடர்ந்து உருவாகும் முக்கோணக் காதலையும் அழகுறப் பேசியிருந்தது. “ரன்வீர் ராகுலாக நடித்தால் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், ஷாருக்கிடம் இருந்த ஒரு தீவிரமான பைத்தியக்காரத்தனம் ரன்வீரிடம் இருக்கிறது. ஆலியா அஞ்சலியாகவும் ஜான்வி டீனாவாகவும் நடித்தால் நன்றாக இருக்கும்” என்று தனது தேர்வைச் சொல்லி யிருக்கிறார் கரண்.

தேவை பெண் இயக்குநர்கள்!

நடிகை டிஸ்கா சோப்ரா, ‘தாரே ஜமீன் பர்’, ஓஎம்ஜி - ஓ மை காட்’, ‘அங்கூர் அரோரா மர்டர் கேஸ்’ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தற்போது ஒரு திரில்லர் படத்தை இயக்கும் பணியில் அவர் மும்மரமாக ஈடுபட்டுவருகிறார். அதற்கு அவர், “ஒரு நடிகராக வேறு யாரோ ஒருவரின் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருந்தேன். இப்போது என் கனவை நனவாக்கும் நேரமாக இதைக் கருதுகிறேன். பல ஆண்டுகளாக இந்தத் துறையில் பணியாற்றிவருகிறேன். நடிப்பில் திருப்தியை உணர்ந்த பிறகு, இயக்குநராகச் சாதிக்க வேண்டும் என்று நினைப்பதை இயல்பானதாகவே உணர்கிறேன்” என்கிறார் டிஸ்கா.

பாலிவுட்டில் பெண்களின் பங்களிப்புப் போதுமான அளவுக்கு இல்லை என்ற பிரச்சினையைச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், “பாலிவுட்டில் போதுமான அளவுக்கு மாற்றங்கள் இல்லை. பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. பெண் தொழில்நுட்பக் கலைஞர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்தச் சூழல் மாறாமல் பெண்மையப் படங்களுக்கான சமத்துவமான பட்ஜெட், சம ஊதியம் பற்றியெல்லாம் நம்மால் பேச முடியாது” என்றிருக்கிறார்.

தொகுப்பு: கனி

SCROLL FOR NEXT