இந்து டாக்கீஸ்

மலையாளக் கரையோரம்: பழைய மோகன்லால்!

செய்திப்பிரிவு

குறும்பு, குறுகுறுப்பு, நகைச்சுவை உணர்வு இழையோட, மோகன்லால் வெளிப்படுத்தும் முத்திரை முகபாவங்களை மலையாள ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வந்திருக்கிறார்கள். சமீப காலமாக அவர் நடித்துவரும் ஆக்‌ஷன் நாயகன் படங்களில், ‘வெட்கப்படுவது’ உள்ளிட்ட அவரது ‘விண்டேஜ்’ நடிப்பைக் காணமுடியாமல் இருந்தார்கள். இதனால், ‘லாலேட்டனின் பழைய நடிப்பைக் காண வேண்டும்’ என்று ரசிகர்கள் அவரிடம் கோரிக்கை வைத்தார்கள். அதை ஏற்றுக்கொண்ட மோகன்லால், தற்போது ‘இட்டிமணி மேட் இன் சைனா’ என்ற படத்தில் தனது பாணி நகைச்சுவையுடன் கூடிய பழைய முத்திரை நடிப்பை வழங்கியிருக்கிறார்.

அடுத்த மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில், திருச்சூர் மாவட்ட வட்டார மலையாளப் பேச்சு வழக்கைப் பேசி நடித்திருக்கிறாராம் மோகன்லால். தவிர மோகன்லாலுக்குச் சரிக்குச் சமமான கதாபாத்திரத்தில் சீன மொழி பேசி நடித்திருக்கிறாராம் கே.பி.ஏ.சி.லலிதா. (இவர் ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்தவர்). “இவர்கள் இருவரும் தோன்றும் காட்சிகளில் ரசிகர்கள் வயிறு நோகச் சிரிக்கப்போவது உறுதி” என்று கூறியிருக்கிறார்கள் படத்தை இணைந்து இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர்கள் ஜிபி – ஜோஸ்.

- ரசிகா

SCROLL FOR NEXT