இந்து டாக்கீஸ்

தரைக்கு வந்த தாரகை 27: யார் அந்தக் கதாசிரியர்?

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்க் கவிராயர்

லட்சுமிகாந்தன் கொலை வழக்கால் சிறைக்குச் சென்ற பாகவதரும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் விடுதலையான செய்திகேட்டுத் தமிழ்ப்பட உலகம் நிமிர்ந்து உட்கார்ந்தது. அவர்களை வைத்துப் படமெடுத்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்பது தயாரிப்பாளர்களின் எண்ணமாக இருந்தது. பாகவதரிடம் கால்ஷீட் கேட்டு அவரை மொய்த்தார்கள்.

“இதை பாகவதர் நன்றாகவே புரிந்துகொண்டார்” என்று கூறி நிறுத்திய பானுமதி தொடர்ந்தார். “இவர்கள் என்னை வைத்துப் படமெடுப்பதற்குப் பதிலாக என்னை வைத்து நானே ஏன் படமெடுக்கக் கூடாது?” என்று எண்ணினார் பாகவதர். இந்த எண்ணமே ‘ராஜமுக்தி’ என்ற அவரது சொந்தப்பட முயற்சி. இதில் திருமதி. வி.என்.ஜானகி (எம்.ஜி.ஆரின் இரண்டாம் மனைவி) தான் கதாநாயகி. (இதற்கு முன் ‘சந்திரலேகா’ படத்தில் ஒரு குழு நடனத்தில் ஆடியிருந்தார் இவர்). எம்.ஜி.ஆர் இன்னொரு கதாநாயகர். எனக்கு இந்தப் படத்தில் பாட்டும் நடனமும் பரிமளிக்கும் ஒரு முக்கிய வேடம். எம்.ஜி.ஆரின் உடன்பிறந்த அண்ணனான எம்.ஜி.சக்கரபாணி இதில் எனக்கு அண்ணனாக நடித்தார்.

படப்பிடிப்பு, சென்னையில் அல்ல, பூனாவில் உள்ள பிரபாத் ஸ்டுடியோவில் என்ற செய்தி அறிந்தேன். உடனே உற்சாகம் என்னைத் தொற்றிக்கொண்டது. ஏனென்றால் பிரபாத் ஸ்டுடியோ என்றாலே, எனக்கு சாந்தாராம்தான் நினைவுக்கு வருவார். சாந்தாராம் தனது திரைப்படங்களை உருவாக்கிய அதே ஸ்டுடியோவில் நடிக்கப் போகிறேன் என்பதே என் மகிழ்ச்சிக்குப் போதுமானதாக இருந்தது. அப்போது அவர் பிரபாத்தைவிட்டு வெளியேறி சொந்தமாக ராஜ்கமல் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார்.

கலைவாணர் எனும் அறிவுஜீவி

அதேவேளையில், கலைவாணரும் அவருடைய மனைவி டி.ஏ.மதுரமும் எடுக்கவிருக்கும் ‘நல்லதம்பி’ படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தனர். கலைவாணர் படங்களில் கோமாளி வேடமிட்டு நடித்தாலும் நிஜவாழ்வில் அவர் ஒரு கம்பீரமான மனிதர். சொல்லப்போனால் அவர் ஒரு கிரியேட்டிவ் ஜீனியஸ். சில மனிதர்கள் வாழ்வில் என்னதான் சுகபோகங்களையும் சந்தோஷங்களையும் அனுபவித்தாலும் அவர்கள் முகத்தில் எள்ளளவும் புன்னகை என்பதே இருக்காது. ஆனால், கலைவாணர் ‘ரியல்’, ‘ரீல்’ இரண்டிலுமே கலகலப்பு வாணர். பிறரையும் சிரிக்க வைத்து தானும் மனம்விட்டுச் சிரிப்பார்.

அவர் முகத்தில் தவழும் மந்தஹாசமே தனி. அவர் என்னவிதமான கஷ்டங்களை அனுபவிக்கிறார் என்பதை முகத்தை வைத்து யாராலும் கண்டுபிடிக்க முடியாது. எல்லோரையும் மரியாதையாக நடத்துவார். சக கலைஞர்கள் மீது மதிப்பும் பிரியமும் கொண்டிருப்பார். நியூடோன் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்ட ‘நல்லதம்பி’ படத்தில் ஒரு நாடகக் காட்சி வரும். அதில் கிளியோபாட்ரா கதாபாத்திரம் ஏற்று ஆங்கிலப் பாடல் ஒன்றைப் பாடியபடி (சி.ஆர்.சுப்புராமன் இசையமைப்பில்) ஆடுவேன்.

அதுவும் சரியாக நினைவில் இல்லை. இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லி விடுகிறேன் நான் எத்தனையோ தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நான் நடித்த பெரும்பாலான படங்களை நானே பார்த்தது இல்லை. எனக்கு அவற்றைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பமும் இருந்ததில்லை. ஆகவே, படங்களின் பெயரைச் சொல்லி விவரங்கள் கேட்டால் எனக்குச் சொல்லத் தெரியாது. நான் சொல்லிக்கொண்டு வருகிற விஷயங்களில் ஏதாவது விடுபட்டிருந்தால் அதற்கு அலட்சியம் காரணமல்ல. எனக்கு ஈடுபாடு இல்லாததுதான் காரணம். இன்னொன்றும் தோன்றுகிறது. இப்படி ஈடுபாடு, பற்று இல்லாமல்தான் காரியங்களைச் செய்ய வேண்டுமோ? அதுதான் நமது செய்கைகளுக்கு ஒரு விதமான தனித்தன்மையைத் தருகிறதோ, என்னவோ? போகட்டும்.

மகாத்மாவின் படுகொலை

‘ராஜமுக்தி’ படத்துக்காக பூனா புறப்பட்டோம். ராஜா சந்திரசேகர்தான் படத்தின் இயக்குநர். பிரபாத் ஸ்டுடியோவில் படத்துக்குப் பூஜைபோடப்பட்டுத் தொடங்கப்பட்டது. மிஸ்டர் டாம்லே, பத்தேலால் இன்னும் சில முக்கியஸ்தர்கள் – பங்குதாரர்கள்-வந்திருந்தார்கள். அப்போது கமலா கோட்னிஸ் ‘கோகுல்’ என்ற படத்தை அந்த ஸ்டுடியோவின் வேறொரு தளத்தில் படமாக்கிக் கொண்டிருந்தார்.

‘ராஜமுக்தி’ படப்பிடிப்பு இடைவேளையில் என் கணவர் என்னிடம் வந்து ‘கோகுல்’ படத்துக்காக ஒரு பெண் பாடுகிறது; எவ்வளவு அழகான குரல் தெரியுமா? வந்து பாரேன் சீக்கிரம்’ என்றார். கமலா கோட்னிஸ் ரிகார்டிங் தியேட்டரில் பாடிக்கொண்டிருந்த அந்தப் பெண் பாடுவதைச் சற்றுத் தொலைவில் நின்று பார்த்தாலும் அவள் பாடியதை வெகுவாக ரசித்தேன். அந்தப் பெண் வேறு யாருமல்ல பின்னாளில் மிகவும் பிரபலமான வட இந்தியப் படவுலகின் கானக்குயிலாகிவிட்ட லதா மங்கேஷ்கர்தான்.

‘ராஜமுக்தி’யின் கடைசிகட்டப் படப்பிடிப்பும் முடிந்தது. நாங்கள் புறப்படத் தயாரானபோதுதான் வானொலியில் இடிபோன்ற செய்தி ஒலிபரப்பானது. மகாத்மா காந்தியை கோட்ஸே என்பவன் சுட்டுக் கொன்றுவிட்டான். எங்கு பார்த்தாலும் துக்கத்தின் கருமேகங்கள் சூழ்ந்தன. கோட்ஸே பூனாவைச் சேர்ந்தவன். செய்தி ஒலிபரப்பான ஒரு மணி நேரத்தில் காவல்துறை கோட்ஸே குடும்பத்தார் அனைவரையும் கைதுசெய்துவிட்டது. வெறிக் கூச்சலுடன் ஓடிவந்த கட்டுக்கடங்காத கூட்டமொன்று கோட்ஸேவின் வீட்டுக்குத் தீ வைத்தது. மூண்டெழுந்த கோபக்கனலையும் வன்முறையையும் யாராலும் அடக்க முடியவில்லை. நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே எங்களைச் சுற்றித் தீச்சுவாலைகள் உயர்ந்து கொண்டேபோயின.

கோட்ஸேவின் வீடு நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு அருகில்தான் இருந்தது. ஒருபக்கம் தாவி எரியும் தீச்சுவாலைகள் மறுபுறம் கலவரக் கும்பல். ‘நைட்மேர்’ (Nightmare) என்று சொல்வார்களே அப்படி ஒரு பயங்கரமான கொடுங்கனவு அந்தச் சம்பவம். அன்றைய தினம் நடந்தவை எல்லாம் இன்றும் என் நெஞ்சில் துல்லியமாகப் பளிச்சென்று நினைவில் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பயணம் செய்வது உசிதமல்ல என்பதால் எங்கள் பயணம் ரத்து செய்யப்பட்டது.

மறக்க முடியாத கண்கள்

மறுநாள் மிகச் சிறிய அளவில் அமைதி திரும்பி இருந்தது. ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். ஓட்டலில் இருந்து யாரையோ கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு சற்றுத் தொலைவில் நின்ற காரில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். என் பக்கத்தில் நின்றவர் அவரைச் சுட்டிக்காட்டி ‘அவர்தான் அம்மா நம்ம படத்தின் கதை வசனகர்த்தா’ என்றார். நான் பதறிப்போய் ‘அடடா அவர் உடம்புக்கு என்னவாம்?’ என்றேன்.

அவர் சற்றுக் குரலைத் தாழ்த்திக்கொண்டு ‘காசநோய். மிகவும் முற்றிப் போயிட்டுது. அவர் வீடு திரும்புகிறார்’ என்றார். ஏற்கெனவே காந்தி மகான் கொல்லப்பட்ட துக்கம் நெஞ்சை அழுத்திக் கொண்டிருக்க, இப்போது நம் படத்தின் எழுத்தாளர் நோய் முற்றி வீடு திரும்புகிறார் என்றதும் இனம்புரியாத வருத்தம் மனதைச் சூழ்ந்தது. ‘அவரது வீடு எங்கே இருக்கு?’ என்றேன். ‘தமிழ்நாட்டில் திருநெல்வேலிப் பக்கம் கிராமத்தின் பெயர் தெரியவில்லை’ என்றார். ‘அவரை இப்படியேவா அனுப்புவது? இத்தனை நாள் காச நோயோடு போராடிக்கொண்டா கதை வசனம் எழுதினார்? சரி, நியாயப்படி கம்பெனிதானே அவர் வியாதியை சொஸ்தப்படுத்தி அனுப்பணும்? இது அவங்க கடமை இல்லையா?’ என்று பொரிந்து தள்ளிவிட்டேன்.

காரில் ஏறும் முன் அவர் எங்களைப் பார்த்து இரண்டு கையும் கூப்பி வணக்கம் சொன்னார். எலும்பில் தோல் மட்டுமே போர்த்தியிருந்த குச்சியான விரல்கள். ஐயோ! அந்தக் கண்களை என்னால் மறக்கவே முடியாது. உடம்பில் உள்ள உயிரையெல்லாம் திரட்டி ஒரே இடத்தில் பிரகாசிக்க வைத்தது போன்ற கண்கள். அந்தக் கண்களைப் பார்த்த கணத்தில் அவருக்கு ஏதாவது உதவ வேண்டுமென்று மனம் பதைபதைத்தது. என் உதவியாளரைத் தேடி விரைந்தேன். அவரிடம்தான் என் பணப்பை இருந்தது. அதைப் பெற்றுத் திரும்புவதற்குள் அந்தக் கார் சென்று விட்டிருந்தது. மறுநாள் புறப்படுகிற களேபரத்தில் அவரைப் பற்றி மறந்தேபோனேன்.

வாழ்க்கை ஒரு ரயில் பயணம். சிறியதும் பெரியதுமாய் எத்தனையோ ஸ்டேஷன்கள் வழியில் குறுக்கிடுகின்றன. சின்ன ஸ்டேஷன்களில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வருவதற்குக்கூட நேரம் இருக்காது. ரயில் சட்டென்று புறப்பட்டு விடும். பெரிய ஸ்டேஷன்களில் நின்று நிதானமாகச் சாப்பிட்டு செல்லலாம். வாழ்க்கையிலும் எத்தனையோ சம்பவங்கள். சிலவற்றை மறந்து விடுகிறோம். சிலவற்றை நினைவில் வைத்திருக்கிறோம். அப்படித்தான் அந்த கதை வசனகர்த்தாவைச் சந்தித்த சம்பவத்தையும் மறந்துவிட்டேன்.

சென்னை திரும்பி சில மாதங்கள் கழித்து ஒரு தமிழ் நாளிதழைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ‘பிரபல எழுத்தாளர்’ மறைந்துவிட்டார் என்ற செய்தியை, சிறிதாக ஓர் ஓரமாக வெளியிட்டிருந்தார்கள். புகைப்படத்தில் அந்தக் கண்களைப் பார்த்தேன். பார்ப்பவரை ஊடுருவும் அந்தப் பிரகாசமான கண்கள். ‘ராஜமுக்தி’ படத்தின் கதை வசனகர்த்தா அல்லவா இவர்? ‘அவர் பெயர் என்னவென்று போட்டிருந்தது தெரியுமா?’ என்று உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்த என்னிடம் கேட்டார் பானுமதி. நான் பதில் கூறும்முன், அவரே சொன்னார், முகத்தில் நிஜமான வருத்தம் இழையோட அவர் சொன்னார்.

“புதுமைப்பித்தன்!”
(தாரகை ஒளிரும்)
தொடர்புக்கு:-
thanjavurkavirayar@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT