இந்து டாக்கீஸ்

நடிகர்களின் தொழிற்சாலை!

ஜெய்

நடிகர் கலாபவன் மணியின் பெயருக்கு முன்னால் உள்ள கலாபவன் என்பதற்கு அர்த்தம் என்ன? அது அவரது குடும்பப் பெயரோ, ஊர்ப் பெயரோ அல்ல. கழுத்தையும் உடலையும் வளைத்துப் பலவிதமாக மிமிக்கிரி செய்ய அவருக்குக் கற்றுக்கொடுத்த கலைப் பள்ளிதான் கலாபவன். சென்னை கோடம்பாக்கத்துக்குக் கூத்துப்பட்டறை என்றால் கொச்சிக்குக் ‘கலாபவன்’.

லட்சுமனணை ஏமாற்ற மாயமான் ராமனை மிமிக்கிரி செய்கிறது. மகாபாரதத்திலும் மிமிக்கிரி வருகிறது. மிமிக்கிரி என்பது இல்லாத ஒன்றை நம் கண் முன்னே உருவாக்கிக் காண்பிக்கும் ஒரு மாய வித்தைதான். கலாபவன் அங்கத்தினர்கள் மிமிக்கிரி என்பதை நிகழ்த்துக் கலை வடிவமாகக் கொண்டாடுகிறார்கள். மலையாள சினிமாவின் தலைநகரான கொச்சியில் இருக்கிறது கலாபவன் பயிற்சிப் பள்ளி.

மிமிக்கிரியில் தொடங்கி கராத்தே, யோகா, பரதநாட்டியம், மோகினியாட்டம் எனப் பல்வேறு கலைகளைக் கற்றுக்கொடுக்கிறது இந்தக் கலை மையம். அது மட்டுமல்லாமல் கதாநாயகன், இயக்குநர், திரைக்கதையாசிரியர், வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் என மலையாள சினிமாவின் ஒரு தலைமுறை நடிகர் கூட்டத்தையே உருவாக்கித் தந்துள்ளது.

பாதிரியார் ஏபல், 1969-ல் கானமேளா என்ற பெயரில் எமில் ரெக்ஸ் சகோதரர்களுடன் இணைந்து இசைக் குழுவாக இதைத் தொடங்கினார். இன்று இது பெரும் விருட்சமாக ஆகியுள்ளது. கலாபவனில் கால் வைக்காத மூன்றாம் தலைமுறை நடிகர்கள் இல்லை எனலாம். அந்த அளவுக்கு மலையாள சினிமாவில் கலாபவன் கோலோச்சுகிறது.

கலாபவனில் முக்கியமான பயிற்சி மிமிக்கிரி. ஜெயராம், மலையாள இளம் சூப்பர் ஸ்டார் திலீப், லால், கலாபவன் மணி, கலாபவன் சஜோன், கொச்சி ஹனீபா, கோட்டயம் நசீர், கலாபவன் நவாஸ், சலீம் குமார் என நடிகர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

ஜெயராம், கலாபவனில் இருந்து வெளிவந்த முதல் தலைமுறைக் கலைஞர். அவர் மூலமாக கலாபவன் நடிகர்கள் பலரும் சினிமாவுக்கு வந்தார்கள். ஜெயராம், மலையாள குணசித்திர நடிகர் லாலு அலெக்ஸின் குரலை மிமிக்கிரி செய்வதில் திறன் பெற்றவர்.

மலையாளத்தின் முதல் தலைமுறை நட்சத்திர நடிகர்களான பிரேம் நசீர், மது, ஜெயன் ஆகியோர்களது குரல்களையும் தத்ரூபமாகப் பேசக்கூடியவர். ஜெயராம் மிமிக்கிரி ஷோ என்றால் ரஜினி, கமல்ஹாஸன் குரல்கள் இல்லாமல் இருக்காது. குரல்கள் மட்டுமல்லாது உடலையும் அந்தந்த நடிகர்களின் உடல் அசைவுகளுக்கு ஏற்ப மாற்றி ரசிகர்களைக் கவர்ந்துவிடுவார்.

ஜெயராம் மூலம் திரைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் மலையாள நடிகர் தீலீப். மலையாளத்தின் முன்னணி நகைச்சுவை நடிகர் இன்னஸண்டின் குரலை மிமிக்கிரி செய்யும் திறன் பெற்றவர். இந்தத் திறனுடன் சினிமாவுக்குள் நுழைந்தவர் உதவி இயக்குநராக, நகைச்சுவை நடிகராக வளர்ந்து இன்று மலையாள சினிமாவின் புதிய சக்தியாகவே மாறியிருக்கிறார். மம்மூட்டி, மோகன்லாலுக்கு அடுத்தபடியாக இந்தத் துறையில் பெரிய ஆளுமை திலீப். அவரை விஞ்ச வேறு நடிகர்கள் இன்னும் உருவாகவில்லை. இன்றளவும் அவர் மிமிக்கிரியைத் தொடர்ந்து செய்துவருகிறார்.

சாலகுடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மணி, கலாபவன் மணியாக மாறி தென்னிந்திய சினிமாவில் அறியப்பட்ட முகமாக, கலாபவன் கலைப்பள்ளிதான் காரணம். மிருகங்களின் குரல்களை மிமிக்கிரி செய்வது கலாபவன் மணியின் சிறப்பு. ‘ஜெமினி’ படத்தில் அவர் பாம்பையும், பல்லியையும் மிமிக்கிரி செய்து காண்பித்ததை மறந்திருக்க மாட்டோம். மலையாளாத்தின் புகழ்பெற்ற இரட்டை இயக்குநர்களான

லால்-சித்திக் இருவரும் கலாபவனைச் சேர்ந்தவர்கள்தான். இதில் லால் பின்னால் முக்கியமான நடிகராக உருவானார். ‘சண்டக்கோழி’ ‘தீபாவளி’ போன்ற படங்களில் வெளிப்பட்ட இவரது அபாரமான நடிப்பு நமக்குப் பரிச்சயமானது.

இந்த நடிகர்களின் நடிப்புத் திறனுக்கு கலாபவனின் பயிற்சி ஒரு காரணம். குரலை மட்டுமல்லாது, குரலுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நடிகரின் உடல் அசைவையும் கலாபவன் கற்றுத் தருகிறது. இந்தப் பயிற்சியால் பட்டைத் தீட்டப்பட்டு அவர்கள் வெள்ளித் திரையில் ரத்தினங்களாக மின்னுகிறார்கள்.

SCROLL FOR NEXT