நயன்தாராவுக்கு முன் தென்னிந்திய சினிமாவின் ஒரே லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி. தீவிர அரசியலில் ஈடுபட்டு பின்னர் விலகி அமைதி காத்த விஜயசாந்தி, படங்களில் நடிப்பதை முற்றாக நிறுத்தியிருந்தார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என வருணிக்கப்படும் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சரிலேறு நீகேவ்வறு’. 13 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜயசாந்தி.
ஹாலிவுட்டுக்கான பதில்
சமீபத்தில் வடிவேலுவின் ‘நேசமணி’ கதாபாத்திரம் ட்விட்டரில் திடீர் பிரபலம் அடைந்தது. அதைப்போல 'பாகுபலி 2' படத்தின் காட்சி ஒன்று பகிரப்பட்டுப் பரபரப்பாகியிருக்கிறது. கார்லோஸ் என்கிற ட்விட்டர் பயனர், ‘பாகுபலி 2' படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் நாயகன் பாகுபலியும் அவனது படை வீரர்கள் சிலரும், பனை மரத்தை ஏணிபோல் பயன்படுத்தி எதிரியின் கோட்டைக்குள் தாவும் துண்டுக் காட்சி ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அத்துடன், "இதுவரை நான் பார்த்ததில் மிகச்சிறந்த காட்சி இதுதான் எனத் தோன்றுகிறது" என்று குறிப்பிட்டிருந்தார். இதை கவனித்த இந்திய ரசிகர் ஒருவர், 'லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்' போன்ற படங்களுக்கு இந்தியாவின் பதில் இது என்று கார்லோஸுக்கு பதிலளித்திருந்தனர்.
கோடிகளில் ஹீரோக்கள்
நூறு கோடி வசூல் சந்தை மதிப்பு கொண்ட முன்னணி தெலுங்குப்பட கதாநாயகர்கள் ஒரு படத்துக்கு குறைந்தது 25 கோடி ஊதியம் பெறுகிறார்கள் என்று தெரிகிறது. மகேஷ்பாபு 25 கோடி ஊதியம் பெற்றுவந்ததாகவும் ‘மகரிஷி’ படத்துக்குப்பின் இது 45 கோடியாக உயர்ந்துவிட்டது என்றும் சொல்கிறார்கள். அல்லு அர்ஜுன், நானி, ஜுனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகிய நால்வரும் ஒரு படத்துக்கு தலா 20 கோடி சம்பளமாகப் பெறுகிறார்களாம்.
இந்நிலையில் ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் ‘சாஹோ’ படத்துக்கு பெற்றிருப்பதாகக் கூறப்படும் சம்பளம் பற்றி டோலிவுட்டில் தகவல்கள் பரபரக்கின்றன. பிரபாஸின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தரப்பு தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்காக அவருக்கு 85 கோடி ரூபாய் ஊதியம் கொடுக்கப்பட்டிருப்பதாக டோலிவுட் பரபரக்கிறது.