ஆயுஷ்மான் குரானா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் நகைச்சுவைப் படம் ‘ட்ரீம் கேர்ள்’. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் முன்னோட்டம், சமூக ஊடகங்களில் நகைச்சுவையான மீம்களை உருவாக்க வைத்திருக்கிறது. இந்தப் படத்தில் மகாபாரத, ராமாயண நாடகங்களில் பெண் வேடமிட்டு நடிக்கும் கதாபாத்திரத்தில் ஆயுஷ்மான் நடித்திருக்கிறார். பெண் குரலில் பேசும் அவரது திறமையால், பூஜா என்ற பெயரில் டெலிபோன் ஆப்ரேட்டராகப் பேசி அனைவரையும் ஏமாற்றுகிறார்.
இவரது பெண் குரலுக்கு மயங்கி ஒரு ஊரே பூஜா யார் எனத் தேடி அலைவதாகச் செல்கிறதாம் கதை. ராஜ் ஷான்டில்யா இயக்கியிருக்கும் ‘ட்ரீம் கேர்ள்’ படத்தில், நுஸ்ரத் பருச்சா, அன்னூ கபூர், விஜய் ராஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
‘அந்தாதுன்’ படத்துக்காகச் சமீபத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றிருக்கும் ஆயுஷ்மான், தொடர்ந்து புதுமையான கதைக்களம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடித்துவருகிறார்.
மூன்று படங்கள்
பாலிவுட் கதாநாயகிகளில் ஒருவரான ஷ்ரத்தா கபூர் நடிப்பில் அடுத்தடுத்து ‘சாஹோ’, ‘சிச்சோர்’, ‘ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி’ என மூன்று படங்கள் வெளியாகின்றன. ‘சாஹோ’ திரைப்படம் ஆகஸ்ட் 30 அன்றும், ‘சிச்சோர்’ செப்டம்பர் 6 அன்றும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகின்றன. தனது படங்களின் தொடர்ச்சியான வெளியீடுகளால் உற்சாகத்தில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் ஷ்ரத்தா.
“இப்படி அடுத்தடுத்து எனது இரண்டு படங்கள் வெளியாவது இதுதான் முதல்முறை. இது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கான விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது கடினமாகவே இருக்கிறது. ஆனால், இந்த இரு படங்களையும் உற்சாகத்துடன் எதிர்பார்க்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.‘சாஹோ’ படத்தில், காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் பிரபாஸுடனும் ‘சிச்சோர்’ படத்தில், கல்லூரி மாணவியாக சுஷாந்த் சிங்குடனும் இணைந்து நடித்திருக்கிறார் ஷ்ரத்தா.
- கனி