இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: தோழிகள் சூழ தரிசனம்

செய்திப்பிரிவு

கோலிவுட்டிலிருந்து காஞ்சியின் அத்தி வரதரைக் காண நட்சத்திரங்கள் பலரும் படையெடுத்தனர். த்ரிஷா தனது தோழிகளுடன் காஞ்சியில் காணக் கிடைத்ததை படமெடுத்து ட்விட்டு செய்து இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இன்றும் தன்னுடன் நெருக்கமான தோழமையைத் தொடர்ந்துவரும் த்ரிஷா தனது பள்ளி, கல்லூரிக் காலத் தோழிகள் சிலருடனும் ‘பிகில்’ படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடனும் இணைந்து அத்தி வரதர் தரிசனத்துக்குச் சென்று வந்திருக்கிறார். நான்கு தமிழ்ப் படங்களில் நடித்துவரும் த்ரிஷாவுக்கு விரைவில் வெளியாகவிருக்கும் படம் ‘கர்ஜனை’.

கிடைக்காத விருது

ஆண்களின் விளையாட்டாகப் பார்க்கப்படுவது கிரிக்கெட். அதைத் தனது சுய ஆர்வத்தால் கற்றுத்தேர்ந்து, தேசிய பெண்கள் அணியில் இடம்பிடிக்கப் போராடும் கிராமத்துப் பெண்ணாக, ‘கனா’ படத்தில் கௌசல்யா முருகேசனாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரது நடிப்புக்குத் தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். விருது கிடைக்கவில்லை. ஆனால் விருது கிடைத்தது போன்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார். அவரது மாறுபட்ட நடிப்புக்கு பெயர்பெற்றுக்கொடுத்த ‘கனா’ படம், ‘கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி’ என்ற தலைப்பில் தெலுங்கில் மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அதன்மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். படம் இந்த மாத இறுதியில் டோலிவுட்டில் வெளியாகிறது.

மீண்டும் ஒரு திருட்டுக் கதை

இன்று வெளியாகும் ‘கோமாளி’ படத்தின் கதையில் உரிமை கொண்டாடி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறாராம் கிருஷ்ணமூர்த்தி என்ற உதவி இயக்குநர். மிக உஷாராகக் கதை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்ததால், இப்போது அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி கதைக்குரிய தொகையை செட்டில் செய்திருக்கிறதாம் படக்குழு. இதில் அதிக அக்கறை எடுத்து, கதைப் பஞ்சாயத்தை முடித்துவைத்திருக்கிறார் தமிழ்த் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பாக்யராஜ். அவரிடம் உதவி இயக்குநராகவும் சிலகாலம் பணியாற்றியவராம் கிருஷ்ணமூர்த்தி.

SCROLL FOR NEXT