இந்து டாக்கீஸ்

மலையாளக் கரையோரம்: ஒரு படம் ஓஹோ புகழ்!

செய்திப்பிரிவு

பெரிய கதாநாயகர்களின் படங்கள், யதார்த்த வகைப் படங்கள் ஆகிய இரு வகையான போக்குகளுக்கு நடுவே பள்ளிக் கூட மாணவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களும் மலையாளப் படவுலகில் பெருகிவருகின்றன. கடந்த ஆண்டு வெளியான ‘ஒரு அடார் லவ்’ என்ற ஒரே படத்தின் மூலம் ஓஹோவென்று பிரபலமானர் பிரியா வாரியர்.

அந்த வரிசையில் தற்போது அனஸ்வரா ராஜன் இணைந்திருக்கிறார். கடந்த ஜூலையில் வெளியாகி கேரளத்தின் இளம் ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் படம் ‘தண்ணீர் மாதன் தினங்கள்’. இந்தப் படமும் பள்ளி வாழ்க்கையின் கேலி, கிண்டல், குறும்புகளை மையப்படுத்திய படமே. இதில் ‘கும்பளாங்கி நைட்ஸ்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற மேத்யூ தாமஸும் ‘உதயஹர்ணம் சுஜாதா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அனஸ்வரா ராஜனும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

தற்போது 11-ம் வகுப்பு படித்துவரும் அனஸ்வரா ராஜனுக்கு மலையாளத்தில் புதிய வாய்ப்புகள் அணிவகுக்கத் தொடங்கியிருக்கின்றன. இவரைத் தமிழுக்கும் அழைத்துவரும் வேலைகளைப் பல புதுமுக இயக்குநர்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டார்கள்.

துரத்தும் வேடங்கள்

‘களவானி 2’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியாத நிலையில், ஓவியா தமிழில் நடித்துவரும் ஒரே படம் ‘ராஜபீமா’. அதிலும் அவருக்கு கௌரவக் கதாபாத்திரம்தான். தமிழில் வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் தற்போது சொந்த தேசமான மலையாள சினிமாவுக்குத் திரும்பியிருக்கிறார். அங்கே ‘பிளாக் காஃபி’ என்ற படத்தில் விளம்பர மாடலாக நடித்துவருகிறார். விளம்பர உலகில் பல ஆண்களின் காதல் வலையில் விழுந்து விழுந்து எழுந்துகொண்டே இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கைக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறாராம். எங்குபோனாலும் ஓவியாவை சர்ச்சைக் கதாபாத்திரங்கள் துரத்திக்கொண்டேதான் இருக்கும் போலிருக்கிறது.

தொகுப்பு: ரசிகா

SCROLL FOR NEXT