தீபிகா படுகோன் நடிப்பில் எந்தப் படமும் இந்த ஆண்டு வெளியாகவில்லை. ஆனால் ஏதாவது ஒரு காரணத்துக்காக தீபிகா சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறார். தற்போது பத்திரிகை ஒன்றுக்காக எடுக்கப்பட்ட மேக்-அப் இல்லாத அவரது படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி இருக்கின்றன. சமீபத்தில் அவர் அளித்திருக்கும் பேட்டியில்
“எந்தப் பயிற்சியும் நான் எடுக்கவில்லை. வழிகாட்டிகளும் கிடையாது. எல்லாவற்றையும் என் சொந்த முயற்சியில் தெரிந்துகொண்டேன். அதனால், தனிப்பட்ட வாழ்க்கை, திரையுலகம் இரண்டிலுமே தோல்விகளைச் சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனது மனஉறுதி மட்டும்தான் என்னை வழிநடத்தியது” என்று சொல்லியிருக்கிறார் தீபிகா.
அத்துடன், கணவர் ரன்வீர் சிங் பற்றி
“அவருக்கு எதையும் மூடி மறைத்து பேசத் தெரியாது. அதனால் அவரை வெறுப்பவர்களும் இருக்கிறார்கள். நேசிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அதுதான் அவர். தன் உணர்வுகளை வெளிப்படுத்தத் தயங்கியதில்லை. அழுவதற்குப் பயந்ததில்லை. அதுதான் என்னை அவருடன் என்னை இணைத்தது” என்று கூறியிருக்கிறார் தீபிகா.
பிஸியான நடிகை பூமி பெட்னேகர் பாலிவுட்டில் தற்போது பிஸியான நடிகர்.
அடுத்த நான்கு மாதங்களில் அவரது ஐந்து படங்கள் வெளியாக இருக்கின்றன. இவற்றில், ‘பாலா’, ‘சான்ட் கி ஆங்க்’ ஆகிய படங்கள் பெரிதும் எதிர்பார்க்கப் படுகின்றன. இயக்குநர் அமர் கௌஷிக் இயக்கியிருக்கும் ‘பாலா’ படத்தில், தன் தோற்றத்தின் மீது நம்பிக்கையில்லாத பெண்ணாக நடித்திருக்கிறார்.
“எனது கதாபாத்திரங்கள் தட்டையாக இல்லாமல், எல்லா குணபாவங்களுடன் தீவிரமாக இருக்க வேண்டும் என்று விரும்புவேன். ‘பாலா’ திரைப்படத்தில் அப்படியொரு கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளேன். அந்தக் கதையுடன் உங்களால் இயல்பாக என்னை இணைத்துபார்க்க முடியும்” என்று சொல்லியிருக்கிறார் பூமி.
தொகுப்பு: கனி