இந்து டாக்கீஸ்

டிஜிட்டல் மேடை: சாம்ராஜ்யம் சரிந்த கதை!

செய்திப்பிரிவு

எஸ்.எஸ்.லெனின்

வரலாற்றின் தடங்களைத் திரும்பிப் பார்ப்பது, பலவகையான பாடங்களைக் கற்க உதவும். நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டிருக்கும் ‘தி லாஸ்ட் ஜார்ஸ்’ என்ற வலைத்தொடர், ஏராளமான வரலாற்றுப் படிப்பினைகளைக் கோடிட்டுக் காட்டுகிறது. முதலாம் உலகப் போர், தொழிலாளர் சாதித்த யுகப்புரட்சி, ரஷ்ய ரோமனோவ் வம்சம் சரிந்த கதை, அந்த வம்சத்தின் கடைசி ‘ஜார்’ மன்னரின் குடும்பம் கூண்டோடு கொல்லப்பட்ட புதிரான சம்பவம் எனப் பலவகையான பின்னணி கதைக் களங்களைக் கொண்டிருப்பதால், வரலாற்றுக்கு அப்பால் சுவாரசியமான பொழுதுபோக்குக்கும் ‘தி லாஸ்ட் ஜார்ஸ்’ (The Last Czars) உத்தரவாதமளிக்கிறது.

மூன்று நூற்றாண்டுகளாக ரஷ்யாவை ஆண்டு வந்த ரோமனோவ் வம்சம், முதலாம் உலகப்போரின்போது நிறைவுக்கு வந்தது. அதன் கடைசி மன்னரான இரண்டாம் நிக்கோலஸ், தந்தை மூன்றாம் அலெக்சாண்டர் உடல் நலக் குறைவால் இறந்ததையடுத்து, தனது 26-ம் வயதில் அரியணை ஏறினார். ஆட்சிப் பொறுப்புக்கு எந்த வகையிலும் தயாராகாத நிக்கோலஸ் தடுமாற்றத்துடனே மகுடம் சூட்டிக்கொள்கிறார். அந்தத் தடுமாற்றமும் தயக்கமும் அவரது ஆட்சிக்காலம் முழுவதும் தொடர்வதுடன் தேசத்தின் போக்கையும் தவிப்புக்குள்ளாக்குகிறது.

ஜெர்மானிய இளவரசியான அலெக்சான்ட்ரா, நிக்கோலஸ் கரம் பற்றி ரஷ்யாவின் ராணியாகிறார். அரச தம்பதியின் முதல் கடமையான ஆண் வாரிசை உருவாக்குவதில் இருவரும் தொடர் ஏமாற்றத்துக்கு ஆளாகின்றனர். நான்கு பெண் குழந்தைகளை அடுத்து ஐந்தாவதாக மகன் பிறக்கிறான். ஆனால், ரத்தம் உறையாமல் போகும் ‘ஹீமோஃபீலியா’ பாதிப்பால் நித்தம் அவன் ரத்தம் சிந்துகிறான். ராஜ குடும்பத்தின் கவலையைப் போக்க வினோத சாமியாரான கிரிகோரி ரஸ்புடின் அரண்மணைக்குள் நுழைகிறான். அப்படியே அரசியுடனான நெருக்கத்தால் ஆட்சியில் தலையிடவும் தொடங்குகிறான்.

உணவுத் தட்டுப்பாடு, தொழிலாளர், விவசாயிகள் உரிமைப் போராட்டம் என அரண்மனைக்கு வெளியே முளைக்கும் பொதுமக்களின் தலையாய பிரச்சினைகளை நிக்கோலஸ் அசிரத்தையாகக் கையாள்கிறான். போதாதென்று நாட்டு நிர்வாகத்தை மனைவி கையில் ஒப்படைத்துவிட்டு போருக்குச் செல்லும் நிக்கோலஸின் அபத்த வியூகங்களால் லட்சக்கணக்கான ரஷ்ய வீரர்கள் மடிகிறார்கள். இங்கே அரசி அலெக்சான்ட்ராவை முன்வைத்து அரச நிர்வாகத்தில் தலையிடும் ரஸ்புடினால் வெறுப்புக்குள்ளாகும் ராஜ குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் திட்டமிட்டு அவனைக் கொல்கின்றனர்.

தொடர்ந்து உலகை உலுக்கும் விதமாக ரஷ்யாவில் யுகப் புரட்சி வெடிக்கிறது. அரண்மனை திரும்புவதற்குள் நிக்கோலஸ் அதிகாரத்தை இழக்கிறான். சைபீரியாவின் ரகசிய இருப்பிடத்துக்கு ராஜா ராணியும், ஐந்து வாரிசுகளுமாகக் கடத்தப்படுகின்றனர். புரட்சி நிறைவுற்றாலும் செம்படைக்கு எதிராக அயல்நாட்டினர் ஆதரவுடன் திரளும் வெண் படையினரால் உள்நாட்டுப் போர் மூள்கிறது. வெண்படையினரால் மீட்கப்படும் வாய்ப்பைத் தடுக்க, நிக்கோலஸ் குடும்பத்தினரைக் கிளர்ச்சியாளர்கள் கூண்டோடு படுகொலை செய்கிறார்கள். இம்மட்டில் பரவலாக வெளியுலகம் அறிந்த கதையினூடே நெருக்கமாகவும், உணர்வுப் பெருக்குடனும் அலசும் ‘சித்தரிப்பும் ஆவணமும்’ கலந்த படைப்பனுபவத்தை ‘தி லாஸ்ட் ஜார்ஸ்’ வலைத்தொடர் தருகிறது.

உலகப்போர், ரஷ்ய களேபரங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்த சில ஆண்டுகள் கழித்து, பெர்லின் மருத்துவமனை ஒன்றில் நிகோலஸின் வாரிசு என்று சொல்லிக்கொள்ளும் ஓர் இளம்பெண்ணின் பின்புலத்தை ஆராய்பவர் வாயிலாக வலைத்தொடரின் கதை தொடங்குகிறது. அங்கிருந்து நிக்கோலஸ் பதவியேற்பு, திருமணம், குழந்தைகள் எனக் கடந்த காலத்துக்குத் தாவுகிறது. நிக்கோலஸின் தடுமாற்ற இயல்பு, ரஸ்புடினின் அரசியல் தலையீடு, ரஷ்ய வீதிகளில் புரட்சிக்கான முன்னோட்டம் போன்றவை வரலாற்று ஆய்வாளர்களின் விவரணையாக விரிகின்றன. அதிலும் நிகோலஸ் கதைக்கு இணையாக ரஸ்புடினின் கதையும் அதன் நதிமூலம் தொட்டு விவரிக்கப்படுவது, பின்னாளில் அரண்மனைக்குள்ளும் அரசு விவகாரங்களிலும் சித்து விளையாடும் சிக்கலான ரஸ்புடின் கதாபாத்திரத்தை உள்வாங்க உதவுகின்றன.

நாடகச் சித்தரிப்புகள் போன்ற காட்சிகளுடன், சமூகப் பொருளாதார, அரசியல், உளவியல் மாற்றங்களை ஊடுருவி ஆராயும் வரலாற்றாளர்களின் பேட்டியும் கறுப்பு வெள்ளையிலான நிஜ ஒளிப்படத் துணுக்குகளும் வலைத்தொடருக்குக் கனம் சேர்க்கின்றன. நீலக்கண் நிக்கோலஸாக வந்து தடுமாற்றத்தையும் தைரியக் குறைவையும் துல்லியமாக வெளிப்படுத்தும் ராபர்ட் ஜாக், மகன் மீதான பாசத்தில் நாட்டு நலத்தைப் புறந்தள்ளும் தாய் அலெக்சான்ட்ராவாக வரும் சுசானா ஹெர்பர்ட், ரஸ்புடின் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் பென் கார்ட்ரைட் ஆகியோருடன் அரச குடும்பத்தினரின் ஆடையலங்காரம், தத்ரூபமான ஒளிப்பதிவு போன்றவையும் தொடரில் கவனம் ஈர்க்கின்றன.

முன்னோட்டம் காண:

SCROLL FOR NEXT