‘ஆரண்ய காண்டம்’ படத்தில் அறிமுகமானாலும் ‘ஜிகர்தண்டா’, ‘ஜோக்கர்’ படங்களே குரு சோமசுந்தரத்தை பிஸியான நடிகராக்கின. தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன்’ உட்படப் பல படங்களில் நடித்துவரும் இவர், கதையின் நாயகன் கதாபாத்திரங்களிலும் ஆர்வம் காட்டுகிறார். அந்த வரிசையில் ‘டாப்லெஸ்’ என்ற தமிழ் இணையத் தொடரில் கதாநாயகன் ஆகியிருக்கிறார்.
ஜீ5 நிறுவனமும் ஜெய், அஞ்சலி ஜோடியாக நடித்து, விமர்சகர்கள் மத்தியில் பாராட்டப்பெற்ற ‘பலூன்’ படத்தின் இயக்குநர் சினீஷும் இணைந்து தயாரிக்க, தினேஷ் மோகன் இயக்குகிறார். குரு சோமசுந்தரத்துடன் ‘பாண்டிய நாடு’ படத்தில் வில்லனாக நடித்த ஹரிஷ் உத்தமன், ‘கோலமாவு கோகிலா’, ‘மாநகரம்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அருண் அலெக்சாண்டர், ‘சென்னை டு சிங்கப்பூர்’ படத்தில் நாயகனாக நடித்த கோகுல் ஆனந்த் என பெரிய நடிகர்கள் பட்டாளம் தொடரில் இணைந்திருக்கிறது.
நடிப்புக்கு விருது!
இசையமைப்புக்காக ஜி.வி.பிரகாஷ் பல விருதுகள் பெற்றிருக்கிறார். ஆனால், முழுநேர நடிகராக மாறியபிறகு, ‘சர்வம் தாள மயம்’ படத்தில் தனது நடிப்புக்காக விருதொன்றை முதல்முறையாகப் பெற்றிருக்கிறார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் உணர்ச்சிகரமாகப் பதிவிட்டிருக்கும் அவர், தனக்கு வாய்ப்பு வழங்கிய இயக்குநர், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்திருந்த ‘சர்வம் தாளமயம்’ படத்தில் ஜி.வி பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினித், குமரவேல் ஆகியோர் நடித்திருந்தனர். இசைஞானம் மனிதரின் பிறப்பு பார்த்து வருவதில்லை என்ற கதைக் கருவை அடிப்படையாகக் கொண்ட இப்படம் விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்றது.
விருதுக்காகக் கருத்தா?
‘ஆடை’ படத்தில், ஆடையின்றி நடிக்க வேண்டிய காமினி கதாபாத்திரத்தைத் துணிச்சலாக ஏற்று நடித்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார் அமலா பால். தற்போது நடப்பு அரசியல் குறித்துக் கருத்துச் சொல்வதிலும் துணிவு காட்டியிருக்கிறார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படுவது என மத்திய அரசின் நடவடிக்கை குறித்து, தென்னிந்திய நட்சத்திரங்கள் பலரும் வாய் திறக்காமல் மௌனம் காத்துவருகின்றனர்.
ஆனால், அமலா பால் தடாலடியாக மத்திய அரசைப் பாராட்டியும் பிரதமர் மோடியைப் புகழ்ந்தும் தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். ‘ஆடை’ படத்தில் தனது நடிப்புக்காக அரசு விருதை எதிர்நோக்கியே அமலா பால் இப்படிச் செய்திருப்பதாக நெட்டிசன்கள் தங்கள் ஊகங்களைப் பற்ற வைத்துவிட்டார்கள். இதற்கிடையில் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளில் நடந்துவந்த பத்துக்கும் அதிகமான இந்தி, தென்னிந்தியத் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவிட்டன.
பைரசியை ஒழிக்க புது வழி!
திரையுலகத்துக்குப் பெரும் சவாலாக விளங்கி வருகிறது ‘சினிமா பைரசி’. திரையரங்குகளில் கேமரா வைத்து திரையில் ஓடும் படத்தை ஒளிப்பதிவு செய்யும் ‘கேமரா பைரசி’யே புதிதாக வெளியாகும் படங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. தற்போது இதை, ‘பைரசி ப்ளாக்கர்’ என்ற புதிய தொழில்நுட்பம் வழியாக சீன நாட்டினர் திறம்பட சமாளித்து வருவதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அது தொடர்பான விளம்பர வீடியோ ஒன்றையும் வெளியிட்டு, “பைரசியைக் கட்டுப்படுத்த புதிய வழி” என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
வலுவான கூட்டணி!
ஆண்,பெண் பேதமின்றி சக நடிகர்களுக்குப் போதிய முக்கியத்துவம் தரப்பட்ட கதைகளைத் தேர்வுசெய்வதில் முன்னோடியாக இருப்பவர் விஜய் சேதுபதி . அந்த வகையில் பார்த்திபனுடன் இவர் இணைந்து நடித்த ‘நானும் ரவுடிதான்’ படம் வெற்றிபெற்றது. தற்போது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார், வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் பார்த்திபனுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார்.
அதிதி ராவ், மஞ்சிமா மோகன் ஆகியோர் கதாநாயகிகளாக இணைந்திருக்கும் இந்தப் படத்தில் இரண்டு இயக்குநர்களை இணைத்து கூட்டணியை மேலும் வலுவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுத, ‘96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்ய முன்வந்திருக்கிறார்கள். படத்தில் இணைந்திருக்கும் மூன்றாவது பிரபலம் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா.