இந்து டாக்கீஸ்

திரைப் பார்வை: மதுபான வண்டி கவிழ்ந்த கதை (சத்யம் பறஞ்சா விஷ்வசிக்குவோ - மலையாளம்)

செய்திப்பிரிவு

ஆர்.ஜெய்குமார் 

2017-ல் வெளிவந்து திரைக்கதைக்காக தேசிய, மாநில விருதுகள் பெற்ற படம் ‘தொண்டிமுதலும் திருக்சாட்சியும்’. இதன் திரைக்கதை ஆசிரியர் சஜீவ் பாழூர். 2015-ல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் ‘ஒரு வடக்கன் ஸெல்ஃபி’. இதன் இயக்குநர் ஜி.பிரஜித். இந்த இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ள படம்தான் ‘சத்யம் பறஞ்சா விஷ்வசிக்குவோ’.

கட்டுமானத் தொழில்செய்து ‘குடி’யும் ‘குடி’த்தனமுமாக இருக்கும் யதார்த்த மனிதர்கள் ஐந்தாறு பேரின் வாழ்க்கைக்குள் விஸ்கி, ரம், ஸ்காட்ச் எனப் பலவகை மது பாட்டில்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்துவிடுகிறது. அதன் பிறகு நடப்பதைச் சிறிய விறுவிறுப்புத்தன்மையுடன் சொல்கிறது இந்தப் படம். வண்டி கவிழ்வது வரையிலான அவர்களது வாழ்க்கையை, சுதி என்ற கூலித் தொழிலாளியின் அன்றாட ஜீவிதத்தை உதாரணமாகக் கொண்டு வெகு யதார்த்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

எண்பது, தொண்ணூறுகள் வரையிலான மலையாள சினிமாவில் யதார்த்தம் தலை தூக்கியிருந்தது. நாயக பிம்பங்களால் இடையில் மலையாள சினிமா யதார்த்தத்தைவிட்டு விலகிவிட்டது. கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்குப் பிறகு மலையாள சினிமா, இப்போதுதான் யதார்த்தத்துக்குத் திரும்பியிருக்கிறது. மலையாள சினிமாவை மீண்டும் யதார்த்தத்தை நோக்கித் திருப்பியுள்ள படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று எனலாம்.

ரஞ்சன் பிரமோதின் ‘ரக்‌ஷாதிகாரி பைஜூ’வைப் பல விதங்களில் நினைவூட்டும் இந்தப் படத்தின் நாயகன் பிஜூ மேனன். கட்டுமான வேலைக்குப் போன இடத்தில் அந்த வீட்டின் உரிமையாளரின் மகளைக் கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறார். பிறகு அவர்கள் ஒரு அறை வீட்டில் ஹோட்டல் சாப்பாட்டில் ஜீவிதம் தொடங்குகிறார்கள். சொந்த இடத்தில் அரைகுறையுமாகத் தன் சகாக்களைக் கொண்டு ஒரு வீட்டைக் கட்டுகிறார். இதெல்லாம் மாண்டேஜ் காட்சிகளாக முன்னும் பின்னும் வந்துபோகின்றன. தான்தோன்றியாக இருக்கும் நாயகன், காதல் உத்வேகத்தில் கடனை உடனை வாங்கி வீட்டைக் கட்டுகிறார்.

ஆனால், காதல் நிறைவேறியதும் தன் சகாக்களுடன் குடியும் கும்மாளமுமான வாழ்க்கைக்குத் திரும்பிவிடுகிறார். வீடு கட்ட வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடன் தவணையைக் கட்டத் தவறுகிறார். முடிந்த இடத்தில் எல்லாம் கை நீட்டிக் காசு வாங்கி, ஊருக்குள்  ‘நல்ல பெயர்’ சம்பாதித்துள்ளார். ஊரின் பாலியல் தொழிலாளியிடம்கூடக் கடன் வாங்கியிருக்கிறார். தவறுகளைச் செய்துவிட்டு, ‘சத்யம் பறஞ்சா விஷ்வசிக்குவோ? (உண்மையைச் சொன்னா நம்புவியா?)’ எனத் தன் மனைவியிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறார். இந்தப் படத்தில், இந்தக் கேள்வி பல இடங்களில் தொடர்ந்து வருகிறது. படமும் இறுதிக் கட்டத்தில் சத்தியத்தைத் தேடி மூர்க்கம் கொள்கிறது.
இந்த வாழ்க்கையைச் சொல்லப் பின்னணியில் உள்ள சிறு சிறு பொருட்களையும் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் வீட்டின் ஜன்னல்களுக்குக் கதவுகள் இல்லை.

ஒரு மரக்கூழ் பலகைதான் (பிளைவுட்) வாயிற்கதவாக இருக்கிறது. வீட்டுக்குத் தளமும் இடவில்லை. மின்விசிறி இல்லை. நிறமிழந்த பழைய குளிர்பதனப் பெட்டி அடுக்களையில் இருக்கிறது. ‘ஹாலோ ப்ளாக்’ கற்கள் கொண்டு கட்டப்பட்டு மேல் பூச்சு செய்யப்படாத அந்த வீட்டை தரவாடியான (பெரிய குடும்பத்து) நாயகி செடிகொடிகளால் அழகாக்குகிறார். முன்பு ஒரு காட்சியில் அவளது வீடும் பின்னணியும் வந்துபோகின்றன. அவள் வீட்டின் முற்றத்தில் பசுங்குடிலுக்குள் காளான் வளர்த்து வருவாய் ஈட்டுகிறாள். இவற்றின் மூலம் அவளது குணாதிசயம் பார்வையாளர்களுக்கு எடுத்துக்காட்டப்படுகிறது.

எளிமையும் தரவாட்டுத் தன்மையும் வெளிப்படத் தனது தோற்றம், நடிப்புத் திறன் ஆகியவற்றின் மூலம் தாம் ஏற்ற கதாபாத்திரத்துக்கு ஜீவன் தந்திருக்கிறார் சம்ருதா சுனில். மதுபானங்கள் ஏற்றிவந்த வண்டி கவிழ்வதற்கு முன்புவரை, படத்தின் கதாபாத்திரங்களான கட்டுமானத் தொழிலாளர்களின் பொருள் தேவையைப் பார்வையாளர்களுக்குப் படம் ஓரளவுக்குப் புரியவைத்துவிடுகிறது. வண்டி கவிழ்ந்த பிறகு படத்துக்குள் போலீஸ் வருகிறது. பாலியல் தொழிலாளி காணாமல் போகிறாள். கொலைக் குற்ற விசாரணையும் தொடங்குகிறது.

அதுவரை சத்யன் அந்திக்காடின் சினிமாவாக இருந்த படம் திடீரென கே.ஜி.ஜார்ஜின் படமாக விறுவிறுப்பை அடைகிறது. இதற்கு இணையாகக் கிராம பஞ்சாயத்துச் சபை அரசியல் தில்லுமுல்லும் படத்தில் வருகிறது. போலீசும் கட்டுமானத் தொழிலாளர்களும் ஒரு இடத்தில் சந்தித்துக்கொள்வதுபோல் பஞ்சாயத்துச் சபைப் பகுதி படத்தில் சந்தித்துக்கொள்ளவில்லை.

கதையோட்டத்தில் பாதிப்பையும் விளைவிக்காமல் எங்கோ திசை மாறிப் பயணிக்கிறது.
இதுபோல் சில இடங்களில் படம், போகுமிடம் மறந்து வழியில் நின்று பலரிடமும் பேச்சுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்தத் தன்மை படத்தின் முடுக்கத்தை நீர்த்துப் போகச் செய்கிறது. இம்மாதிரியான சில அம்சங்கள் மூலம் படம் யதார்த்தத்தைத் தத்ரூபமாகச் சித்தரிக்க முயன்றுள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் படம், யதார்த்தத்துக்குச் சிரமம் எடுத்துச் சொல்லவந்த சத்யத்தின் கதையைச் சுவாரசியம் இல்லாமல் ஆக்கிவிட்டது.

SCROLL FOR NEXT