இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஜன்னல்: மண விழா உடைக்கும் மர்மங்கள்

செய்திப்பிரிவு

சுமன் 

ஹாலிவுட் திரைப்படங்கள் பிற மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்படுவது போலவே, பிற மொழிகளில் பெரும் வெற்றிபெரும் திரைப்படங்கள் ஹாலி வுட்டில் மறுஆக்கம் செய்யப்படுவதும் நடக்கிறது. அந்த வரிசையில் அழுத்த மான திரைக்கதையுடன் வருகிறது ‘ஆஃப்டர் தி வெட்டிங்’ திரைப்படம்.

கொல்கத்தாவில் செயல்படும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லத்தின் நிறுவனர்களில் இஸபெல்லாவும் ஒருவர். திடீரென நேரிடும் கடும் நிதி நெருக்கடியால் ஆதரவற்றோர் இல்லமும் அங்கு அடைக்கலமான குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. நெருக்கடியிலிருந்து மீள நியூயார்க் புரவலரான ஒரு பெண் தொழிலதிபரைச் சந்திக்க இஸபெலா அனுப்பப்படுகிறார். அங்கே அதிர்ச்சிகள்,  ஆச்சரியங்கள் அவருக்காக காத்திருக்க, தான் பிறந்து வளர்ந்த நியூயார்க் நகரத்தில் பல வருட இடைவெளியில் மீண்டும் கால்வைக்கிறார் இஸபெலா.

அங்கே தன் மகள் திருமணத்துக் கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கும் தொழிலதிபர் தெரஸா, விழாவில் பங்கேற்குமாறு இஸபெலாவை அழைக்கிறார். அந்த வைபவத்தில் இருபதாண்டு களுக்குப் முன்னர் தனது வாழ்க்கையில் பிரதானமாக இருந்த நபரை தெரஸாவின் கணவராக எதிர் கொள்கிறார். கூடுதலாக சில குடும்ப ரகசியங்களை மணப்பெண்ணே பகிரங்கமாக உடைக்கிறார். அடுத்து வரும் நாட்களில் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையின் பழைய பிரச்சினைகள் புதிய வடிவெடுப்பதை இஸபெலா - தெரஸா என இரு பெண்கள் தம் தரப்பு நியாயங்களுடன் எதிர்கொள்வதே மீதி திரைப்படம்.

2006-ல் டேனிஷ் மொழியில் வெளியாகி வெற்றிபெற்றதுடன், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங் களுக்கான பிரிவில் ஆஸ்கருக்கு போட்டியிட்ட டென்மார்க் திரைப்படம் ‘ஆஃப்டர் தி வெட்டிங்’. கூடுதல் சுவாரசியத்துக்காக முதன்மை கதாபாத்திரங்களை ஆண் – பெண்ணாக பரஸ்பரம் பால் மாற்றம் செய்ததுடன், தற்போது அதே தலைப்பில் ஹாலிவுட்டில் மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

ஜூலியன் மூர், மிஷைல் வில்லியம்ஸ், பிலி க்ருடப், ஆபி குய்ன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படத்தை பார்ட் ஃபிரான்ட்லிச் இயக்கி உள்ளார். ‘ஆஃப்டர் தி வெட்டிங்’ திரைப்படம் ஆகஸ்ட் 9 அன்று வெளியாக உள்ளது.

முன்னோட்டத்தைக் காண: 

SCROLL FOR NEXT