என். கௌரி
தேசிய நுழைவுத் தேர்வுகள் சமூக நீதிக்கு எதிரானவை என்று போராடிவருகிறது தமிழ்நாடு. இந்தச் சமகாலத்தில், நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றால், வாழ்க்கையில் வெற்றிபெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையை விதைக்கும் வகையில் வெளியாகியிருக்கிறது ‘சூப்பர் 30’. இயக்குநர் விகாஸ் பஹல் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படம், பிஹாரைச் சேர்ந்த கணிதவியலாளர் ஆனந்த் குமார் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது.
மூன்றாம் உலக நாடான இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான் உலகின் பெருநிறுவனங்களின் தலைவர்களாக இருக்கிறார்கள் என்ற இளம் விஞ்ஞானி ஃபுகா குமாரின் (விஜய் வர்மா) உணர்வுபூர்வமான உரையுடன் தொடங்குகிறது படம். பிஹாரில் காவலாளியாகப் பணியாற்றிவந்த ஃபுகா குமார், சமூகத்தில் பின்தங்கிய, வாய்ப்புகளற்ற மாணவர்களுக்காக ஆனந்த் குமார் (ஹ்ரித்திக் ரோஷன்) நடத்தும் ஐஐடி நுழைவுப் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து விஞ்ஞானியானவர். ஒரு மாணவரின் பார்வையில், ஆசிரியர் ஆனந்த் குமாரின் வாழ்க்கை திரையில் விரிகிறது.
ஆனந்த் குமார், சர்வதேசப் பத்திரிகையில் கட்டுரை எழுதி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்புப் பெறுகிறார். ஆனால், எதிர்பாராத வாழ்க்கைத் திருப்பங்களால் அவரால் மேற்படிப்பைத் தொடர முடியாமல் போகிறது. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அப்பளம் விற்கும் அவரை அடையாளம் கண்டுபிடித்து ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுப் பயிற்சி மையத்துக்கு ஆசிரியாக்குகிறார் லல்லன் சிங் (ஆதித்ய வஸ்தவா). ஆனந்த் குமாரின் வாழ்க்கை மாறுகிறது. ஒருநாள் ஒரு ரிக்ஷாகாரரிடம் அவர் மகனைப் படிக்கவைக்கும்படி அறிவுறுத்துகிறார் ஆனந்த். அதற்கு அந்த ரிக்ஷாகாரர், “அவனைப் படிக்க வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்துவிட்டேன்.
அவன் கேட்பதில்லை. துரோணாச்சாரியார்கள் அர்ஜுனன்களைத்தான் உருவாக்க விரும்புவார்கள். ஏகலைவன்கள் படித்தால், அவர்கள் விரல்களை வெட்டிவிடுவார்கள் என்று அவனுக்கு இன்னும் புரியவில்லை” என்று சொல்கிறார். ரிக்ஷாகாரரின் வார்த்தைகள் ஆனந்த் குமாரின் மனத்தில் மாற்றத்தை உருவாக்குகின்றன. வாய்ப்புகளற்ற மாணவர்களுக்காக இலவசமாக சூப்பர் 30 என்ற ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையம் தொடங்குகிறார். அவர் தேர்ந்தெடுத்த முப்பது மாணவர்களுக்குப் பல்வேறு தடைகளைத் தாண்டி ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் வெற்றிபெறப் பயிற்சி வழங்குகிறார் அவர். அவரும் அவருடைய மாணவர்களும் தேர்வில் வெற்றிபெற்றார்களா என்று நகர்ந்து செல்கிறது திரைக்கதை.
ஆனந்த குமார் என்ற தனிநபரின் வாழ்க்கைக் கதை ஊக்கமளிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால், அவரின் வாழ்க்கைக் கதையை இயக்குநர் விகாஸ் பஹல் திரையில் முழுமையாகக் கையாளவில்லை. கதாநாயகனைப் போற்றும் ஒரு படத்தை இயக்குகிறோம் என்ற நோக்கத்திலேயே தொடக்கத்திலிருந்து இறுதிவரை இந்தப் படத்தை அணுகியிருக்கிறார். அத்துடன், அவரின் கதாநாயகத் தேர்வான ஹ்ரித்திக் ரோஷன், ஒரு பிஹாரி இளைஞர் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான தேர்வாக இல்லை. அவரது மோசமான பிஹாரி உச்சரிப்பும் ஆர்வமற்ற நடிப்பும் தொடக்கத்திலேயே கதையுடன் ஒன்ற முடியாத அந்நியத்தன்மையை உருவாக்கிவிடுகின்றன. படத்தின் ஆறுதலான அம்சமாக இருக்கிறார் கதாநாயகி மிருணாள் தாகூர்.
ஆனந்த் குமாரின் காதலி கதாபாத்திரத்தில் வசீகரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். உதித் நாராயண், ஸ்ரேயா கோஷல் குரலில் ‘ஜக்ராஃபியா’ காதல் பாடல் கவர்கிறது. படத்தின் வசனம் சில இடங்களில் கவனம் ஈர்க்கிறது. ஆனால், பாலிவுட்டின் பெரும்பாலான இயக்குநர்களைப் போல, விகாஸ் பஹலுக்கும் நாட்டின் உயர்கல்வியைப் பற்றிய எந்த அடிப்படைப் புரிதலும் இல்லை என்பது படத்தின் காட்சிகளில் தெளிவாகத் தெரிகிறது. கணிதம், இயற்பியலை எல்லாம் நிஜ வாழ்க்கைச் சம்பவங்களுடன் பொருத்திப் பார்த்தால் எளிமையாகக் கற்றுகொள்ளலாம் என்ற பிம்பத்தை உருவாக்கும் காட்சிகள் சினிமாத் தனமாகவே இருக்கின்றன.
நுழைவுத் தேர்வுக்கான கற்றலை, வாழ்வா சாவா பிரச்சினையைப் போலக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். ஒரு தேசம், ஒரே நுழைவுத் தேர்வு என்ற கருத்தாக்கத்தில் சமூக நீதிக்கு எப்போதும் இடமிருக்கப் போவதில்லை. ஆனால், இயக்குநர் வசதியாக, நாட்டின் உயர்கல்வி வாய்ப்புகள் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுக்கப்படுவதன் பின்னணியில் இருக்கும் சாதியப் பிரச்சினையைப் பேசாமல் அதை வர்க்கப் பிரச்சினையாக மட்டும் காட்ட முயன்றிருக்கிறார். மாணவர்களை வில்லன்களுடன் மோதவைக்கும் கிளைமேக்ஸ் காட்சியும், வழக்கமான பாலிவுட் பாணியிலே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் ஐ.ஐ.டியில் கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்று யோசித்த சாமானியர் ஒருவரின் வாழ்க்கைக் கதையைப் பல போதாமைகளுடன் திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் விகாஸ் பஹல்.