இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஷோ: எறும்பை நசுக்க முடியாது!- ஆன்ட் மேன்

டி. கார்த்திக்

ஸ்பைடர்மேன் , எக்ஸ்-மேன், அயன் மேன், சூப்பர் மேன் என ஹாலிவுட்டில் கில்லியாடிய மார்வெல் ஸ்டூடியோ, அடுத்ததாகக் கையில் எடுத்திருக்கும் படம் ஆன்ட்-மேன். எறும்பு மனிதனாக அரிதாரம் பூசி தீயவர்களை அழிக்கும் சூப்பர் ஹீரோவின் கதை இது. ஹாலிவுட் படங்களில் சாகசத்துக்கும் பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுக்கும் பஞ்சமே இருக்காது. ஆன்ட்-மேனில் கிராபிக்ஸ் காட்சி அமைப்புகள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.

உலகை அழிக்கும் வில்லன்களைத் துவம்சம் செய்ய எறும்பு அவதாரம் எடுத்து உலகைக் காக்கிறார் நாயகன் பெளல் ரூட். எறும்பு உடையை அணிந்ததும் எறும்பு போலவே மாறி விடுகிறார் ஹீரோ ரூட். அதன் பின் நடக்கும் காட்சிகள் எல்லாம் அதிரி புதிரியாக திரையில் விரிகிறது.

நிஜ எறும்பு போலவே மாறி யானை சைஸ் வில்லன்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு சாய்க்கிறார் எறும்பு ஹீரோ. எறும்பு புற்றில் குதித்து ஆயிரக்கணக்கான எறும்புகளுடன் ஒன்றோடு ஒன்றாகக் கலந்து எறும்பு மனிதன் ஓடும் காட்சியில் கிராபிக்ஸ் மிரட்டல் ரகமாக உள்ளது.

எறும்பு மனிதனை அழிக்க, வித்தியாசமான உருவத்தில் வில்லனைக் களமிறக்கிச் சண்டை போட வைத்திருக்கும் காட்சிகள் பிரம்மாண்டத்தின் உச்சம். இதுவரை ஹாலிவுட் படங்களில் உலகை அழிக்க வரும் வில்லன்களை அழிக்க விதவிதமான உருவத்தில் வந்து வெற்றி கொள்ளும் சூப்பர் ஹீரோ கதைகள் வரிசையில், ஆன்ட்-மேன் வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

காட்சி அமைப்பில் படத்தின் இயக்குநர் பீட்டன் ரீட்டின் உழைப்பு தெரிகிறது. ‘நான் ஈ’ படம் பார்த்த வியந்த தமிழ் ரசிகர்களுக்கு ஆன்ட்-மேன் இன்னொரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்பது நிச்சயம். குறிப்பாகக் குழந்தைகளை மிகவும் கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

படத்தின் ட்ரெய்லருக்கே அமெரிக்காவில் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. லாஸ் ஏஞ்சலீஸ், கலிபோர்னியாவில் மட்டும் இப்படம் ஜூன் 29-ம் தேதி வெளியாகிவிட்டது. அமெரிக்காவின் பிற பகுதிகள் உள்பட உலகெங்கும் ஜூலை 14-ம் தேதி முதல் வெளியாக உள்ளது. இந்தியாவில் ஜூலை 17-ம் தேதி வெளியாகிறது.

SCROLL FOR NEXT