இந்து டாக்கீஸ்

திரை விமர்சனம்: மாரி

இந்து டாக்கீஸ் குழு

தாதா சினிமாக்களுக்கான ஆகி வந்த களமான சென்னையின் நெருக்கடியான பகுதிதான் கதைக்களம். அங்கே மாமூல் வசூல் செய்யும் குட்டி தாதா மாரி (தனுஷ்). ரவுடியிசம் தவிர புறா பந்தயத்தில் அவருக்கு ஆர்வம் உண்டு. அந்தப் பகுதியில் நடக்கும் புறா பந்தயங் களை நடத்துவதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். மாரியின் இடத் துக்கு வரவேண்டும் என்று காய்களை நகர்த்துகிறார் மற்றொரு ரவுடியான பறவை ரவி (மைம் கோபி). அந்தப் பகுதியின் காவல்நிலையத்துக்குப் புதிய இன்ஸ்பெக்டராக வரும் அர்ஜுன் (விஜய் யேசுதாஸ்) ஒரு கெட்ட போலீஸ் என்பதை அறிந்து அவருடன் கூட்டணி அமைக்கிறார்.

அர்ஜுன் திட்டமிட்டு மாரியை ஜெயி லுக்கு அனுப்புகிறார். மாரி இல்லாத வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவரது மாமூல் வசூல், புறாப் பந்தயம் இரண்டையும் தங்கள் கட்டுக்குள் கொண்டுவருகிறார்கள். சிறையிலிருந்து வரும் மாரி தனது இடத்தை மீண்டும் எப்படி திரும்பக் கைப்பற்றுகிறார் என்பதுதான் கதை.

அழுத்தமான கதை இல்லாமல், துருவேறிய காட்சிகளை வைத்து மசாலா படம் ஒன்றைச் சமைத்திருக் கிறார் இயக்குநர் பாலாஜி மோகன். இன்ஸ்பெக்டர் அர்ஜுன், மாரியோடு சம்பந்தப்பட்ட பழைய கொலை வழக்கு ஒன்றைத் துருவ ஆரம்பிக் கும்போது அதுதான் கதையின் மைய இழையாக இருக்குமோ என்று பார்த் தால் அப்படி எதுவுமில்லை. தனது புறாவைக் கொன்றுபோட்டவனை மாரி கத்தியால் குத்திய விவகாரம் அது. அந்த அளவுக்கு அவர் தனது புறாக்களை நேசிக்கிறார் என்கிறார் கள். ஆனால் புறாக்களுக்கும் மாரிக்கு மான உறவு என்ன? அது எத்தனை அழுத்தமானது என்ற பின்னணி சில வார்த்தை வசனங்களிலேயே கடந்து போய்விடுகிறது.

புறாப் பந்தயம், அதற்கான விதி முறைகள். ரெஃப்ரி என்றெல்லாம் விரிவுரை தருகிறார்கள். ஆனால் புறாப் பந்தயத்தில் பங்கேற்பதில் இருக் கும் போதை, புறாக்களைப் பந்தயத் துக்கு தயார்படுத்துவது என்று எதுவும் அழுத்தமாகக் காட்டப்படவில்லை.

வணிக சினிமாவின் தவிர்க்க முடியாத நியதி ‘பில்ட்-அப்’புகள் நிறைந்த கதாநாயகனின் அறிமுகக் காட்சி. இந்தப் படத்தில் தனுஷ் வரு கிற எல்லாக் காட்சிகளும் அறிமுகக் காட்சிகள்போலவே இருக்கின்றன. பாலாஜி மோகன், தனுஷ் என்னும் நட்சத்திரத்தை எப்படிப் பயன்படுத்தி அப்ளாஸ் அள்ளுவது என்பதிலேயே கவனமாக இருந்திருக்கிறார். அதில் வெற்றியும் பெறுகிறார்.

சில காட்சிகள் அழுத்தமாக அமைந் திருக்கின்றன. போட்டி தாதா குழு தனு ஷிடம் மாமூல் வாங்க வரும் காட்சி, தொடக்கத்தில் விஜய் யேசுதாஸுக் கும் தனுஷுக்கும் இடையே நடக்கும். மோதல்கள் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. தீ விபத்துக்குப் பின் புறாக்கள் திரும்ப வரும் காட்சி மனதைத் தொடுகிறது.

தனுஷின் ‘பில்ட் அப்’ காட்சிகளில் இசையமைப்பாளர் அனிருத் காது ஜவ்வு கிழிய பின்னணி வாசித்துத் தீர்க்கிறார். அதேசமயம் பாடல்களை அக்மார்க் மாஸ் பாடல்களாகத் தந்திருக்கிறார்.

நையாண்டி, கெத்து ஆகியவற்றில் குறை வைக்காமல் செய்திருக்கிறார் தனுஷ்.

காஜல் அகர்வால் தொடங்கி யாருக் கும் அழுத்தமான பாத்திரம் இல்லை என்பதால் அவர்கள் நடிப்பு பற்றிச் சொல்ல எதுவும் இல்லை. விஜய் யேசுதாஸின் பாத்திர வார்ப்பில் இருக்கும் பிரச்சினையால் அவர் நடிப்பு எடுபடவில்லை.

தனுஷின் நண்பர்களாக வரும் ரோபோ ஷங்கர், கல்லூரி வினோத் ஆகிய இரண்டு பேரின் நகைச்சுவை வசனங்கள் ஆங்காங்கே குபீர் கிளப்புகிறது.

மசாலா படம் என்றாலும் அதற் கென்று ஒரு ஒழுங்கு இருக்க வேண் டும். இந்தப் படத்தில் அது இல்லை.

SCROLL FOR NEXT