‘நானும் ஒரு பெண்’ படத்தில் நாயகி விஜயகுமாரிக்கு ஒப்பனை செய்வது சவாலான விஷயமாக இருந்தது. கதாபாத்திரப்படி அவர் கருப்பாக இருக்க வேண்டும். திறமை மிகுந்த கினி என்பவர் அந்தப் படத்துக்கு ஒப்பனைக் கலைஞராக வேலை பார்த்தார்.
இவர்தான் ‘பராசக்தி’ படத்தில் சிவாஜிகணேசனுக்கு முதன் முதலாக பொட்டுவைத்து மேக்கப் போட் டவர். விஜயகுமாரியின் கருப்பு தோற்றம் தான் படத்தில் பிரதானம் என்பதால், மேக்கப்புக்காக பயன்படுத்தும் ‘பேன் கேக்’கில் இரண்டு மூன்று கலர்களை மிக்ஸ் செய்து புதுவிதமான ஒரு கருப்பு நிறத்தைக் கொண்டுவந்தார் கினி. அந்த வண்ணம் விஜயகுமாரிக்கு ரொம்ப பொருத்தமாக இருந்தது.
இப்படத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா முக்கிய பாத்திரத்தில் நடித்தார். குணச்சித்திர நடிகர் எஸ்.வி.ரங்காராவ் எப்போதும் படப்பிடிப்புக்கு காலை 11 மணிக்குத்தான் வருவார். இதைக் கவனித்துவந்த எம்.ஆர்.ராதா ஒருநாள், ‘‘ரங்காராவ், உங்க வருகைக்காகத்தான் நாங்க முதலாளி செலவில் டிபன், காபி எல்லாம் சாப்பிட்டுட்டு காத்திருக்கோம். நீங்க 11 மணிக்குத்தான் வர முடியும்னா, ஷூட்டிங்கையும் 11 மணிக்கு மாத் திடலாமே?’’ என்று அவரது பாணி யில் ரங்காராவிடம் கேட்டார். அப்போது ஏதோ சொல்லி அவர் சமாளித்தாலும், எம்.ஆர்.ராதா அப்படி கேட்டது ரங்காராவைக் கொஞ்சம் சங்கடப்படவே வைத்தது.
அந்தப் படத்துக்காக ஏவி.எம்.ராஜ னும், புஷ்பலதாவும் மாணவர்களுக்கான என்.சி.சி உடையில் நடனமாடி ‘ஏமாறச் சொன்னது நானோ’ என்று பாடும் டூயட் பாடல் பெங்களூரில் படமாக்கப்பட்டது. முழுப் படமும் முடிந்து சென்சாருக்கு அனுப்பப்பட்டது. சாஸ்திரி என்ற சென்சார் அதிகாரி, படத்தைப் பார்த்து விட்டு செட்டியாரை நேரில் வருமாறு அழைத்தார். செட்டியார் சாஸ்திரியைப் போய் பார்த்ததும், ‘டூயட் பாட்டில் என்.சி.சி உடையைப் பயன்படுத்தலாமா? அதுவும் உங்கள் படத்தில்?’ என்று கேட்டார்.
செட்டியாரும், இயக்குநரும் அந்த உடையை மாற்றி பாடல் காட்சியை வேறு எடுப்பதாக உறுதியளித்தனர். பெங்களூரில் இயற்கை காட்சிகளோடு அழகாக எடுக்கப்பட்ட அந்தப் பாட்டுக் காட்சியை, மறுபடியும் சென்னை விஜயா கார்டனில் ஒரே நாளில் எடுத்து சாஸ்திரி யிடம் காட்டப்பட்டது.
ஏவி.எம் தயாரிப்பில் நாகேஷ் நடித்த முதல் படம் ‘நானும் ஒரு பெண். நாகேஷை படத்தில் ஒப்பந்தம் செய்வதற்கு ஏவி.எம்.சரவணன் சார் சம்பளம் பேசினார்கள். ‘‘ஐயாயிரம் வைத்துக்கொள்ளலாமே’’ என்று நாகேஷிடம் கேட்க, அதற்கு நாகேஷ் ‘‘ஏழாயிரமாக இருக்கட்டுமே’’ என்றார். ‘‘உங்களுக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம். ஆறாயிரம் ரூபாய்’’ என்று பேசி முடித்தார்.
அப்போது நாகேஷ், ‘‘சரவணன் சார், இதை நான் திமிரோடு சொல்லலே. என் மீதுள்ள நம்பிக்கையால சொல்றேன். நான் கேட்குற சம்பளத்தை பேரம் பேசாம நீங்க கொடுக்கும் காலம் ஒருநாள் வரும்’’ என்றார். அதற்கு சரவணன் சார் ‘‘அந்த நாட்களில் நிச்சயம் நானும் உங்களுக்கு நிச்சயம் கொடுப்பேன்’ என்றார். அதைப் போல நாகேஷ் கேட்ட சம்பளம் கொடுக்கப்பட்டு அவர் கால்ஷீட்டுக்காக காத்திருந்த காலமும் வந்தது. அதற்கு காரணம் நாகேஷின் நடிப்பு… நடிப்பு… நடிப்பு!
படத்தில் விஜயகுமாரிக்கு சகோதர னாக நாகேஷ் நடித்தார். சகோதரி யின் துயரத்தை பார்த்து நாகேஷ் அழு வதுபோல ஒரு காட்சி. திருலோகசந்த ரிடம் ஓடிவந்த நாகேஷ், ‘‘நான் காமெடி யன். எனக்கு அழற சீன் செட் ஆகுமா?’’ என்றார். ‘‘கண்டிப்பா பொருந்தும். டயலாக்கை சரியா உள்வாங்கிட்டு, உங்க ஸ்டைல்ல உணர்வுபூர்வமா இயற்கையா பேசி நடிங்க’’ என்று சொன்னார். இயக்குநர் சொல்லியதைப் போலவே நாகேஷ் உணர்ச்சிபூர்வமாக நடித்தார்.
நாகேஷ் அழுது நடிப்பது சரி யாக இருக்குமா? மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற பேச்சு எழுந்த தைக் கேட்ட செட்டியார், இயக்குநர் திருலோகசந்தரிடம் ‘‘இந்தக் காட்சியை வைத்துக்கொள்வது சரியாக இருக் குமா?’’ என்று கேட்டார். ‘‘மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். நாகேஷுக் கும் இது ஒரு திருப்புமுனை யாக அமையும்’’ என்றார் திருலோக சந்தர். ‘‘இயக்குநரின் முடிவே முடிவு’’ என்று கூறிவிட்டார் செட்டியார். ஒரு தயாரிப்பாளருக்கு இயக்குநர் மீதிருந்த நம்பிக்கைக்கு இது ஒரு சிறந்த உதா ரணம். இந்தக் காட்சியைப் பார்த்துதான், இயக்குநர் பாலசந்தருக்கு நாகேஷைக் கதாநாயகனாக போட்டு ‘சர்வர் சுந்தரம்’ படம் எடுக்கலாம் என்ற எண்ணமே வந்தது என்பார்கள்.
‘நானும் ஒரு பெண்’ தமிழில் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடியது. எப்போதுமே ஏவி.எம் தயாரிப்பில் ஒரு படம் வெளிவரும்போது அந்தப் படக்குழுவினர் தமிழகம் முழுக்க ரிலீஸான தியேட்டர்களுக்குச் சென்று, படம் பார்க்கும் மக்களின் விமர்சனங் களை சேகரித்து வருவார்கள். பத்திரிகை களின் விமர்சனங்களையும் சேகரித்து வைத்துக்கொள்வார்கள். பிறமொழி களில் அந்தப் படத்தை எடுக்கும் போது அந்தத் தவறுகள் திருத்தப் பட்டு புதிய திரைக்கதையை உருவாக் கிக்கொள்வார்கள்.
அதன் அடிப்படை யில் ‘நானும் ஒரு பெண்’படம் தெலுங்கில் என்.டி.ராமாராவ், சாவித்திரி நடிப்பில் ‘நாடி ஆடஜென்மே’ என்ற பெயரில் வந்தது. ஹிந்தியில் மீனாகுமாரி, தர்மேந்திரா நடிக்க ‘மைன் பி லடிகி ஹூன்’ என்ற பெயரில் வெளியானது. தமிழைப் போலவே தெலுங்கு, ஹிந்தியிலும் படம் வெற்றிகரமாக ஓடியது.
அடுத்து ஏவி.எம் நிறுவனத் தயா ரிப்பில் திருலோகசந்தர் இயக்க, ‘காக்கும் கரங்கள்’ படத்தின் வேலைகள் தொடங்கியது. இந்தப் படத்தில் ‘நானும் ஒரு பெண்’படத்தின் வெற்றி ஜோடி எஸ்.எஸ்.ஆரும் விஜயகுமாரியும் நடித் தார்கள். படத்தில் எஸ்.எஸ்.ஆர் கடமை தவறாத ஒரு டாக்டராக நடித்தார். எப் போதும் ஏழையாக நடிக்கும் எஸ்.வி.சுப்பையா இதில் பெரும் பணக்காரர். இந்தப் படத்தில் ஒரு நடிகர் அறிமுகமானார்.
அவர் நடித்த முதல் நாள் படப்பிடிப்பில் நாயகியின் கையைப் பிடித்து நடிக்க வேண்டும். நாயகியின் கைகளைப் பிடிக்கும்போது நடிகரின் கைகள் நடுங்கத் தொடங்கின. இயக்கு நர் திருலோகசந்தர் நாயகியிடம் ‘‘அவரது கைகளை நீ கெட்டியாக பிடித்துக் கொள்’’ என்று கூற, நாயகி அவர் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். நாயகி அவரது கையைப் பிடித்ததும் அவருடைய கைகள் இன்னும் நடுங்க ஆரம்பித்துவிட்டது. நாயகி தொட்டதும் கைகள் நடுங்கிய அந்த நடிகர் யார்? அடுத்த வாரம் சொல்கிறேன்.
- இன்னும் படம் பார்ப்போம்…
முந்தைய அத்தியாயம்: >சினிமா எடுத்துப் பார் 17- கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள்!