இந்து டாக்கீஸ்

நாயகர்களின் புதிய சாகசம்!

கா.இசக்கி முத்து

காலத்துக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்ளத் தமிழ்த் திரைக் கதாநாயகர்கள் தயாராகிவிட்டார்கள். கால்ஷீட் சிக்கலுக்கும் கரன்சி சிக்கலுக்கும் முடிவுகட்டும் விதமாக இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளிப்பது, தங்களுடைய படங்களைத் தாங்களே தயாரிப்பது என்று துணிச்சலாகக் களமிறங்கிவிட்டார்கள்.

விஷால், சூர்யா, தனுஷ் ஆகியோர் தங்கள் படங்களைத் தாங்களே தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். கார்த்தியைப் பொறுத்தவரை அவருடைய உறவினர்களின் ஸ்டூடியோ க்ரீன் அல்லது ட்ரீம் வாரியர் நிறுவனங்கள்தான் அவருடைய தயாரிப்பாளர்கள். விஜயுடன் பணியாற்றிய செல்வகுமார்தான் ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை தயாரிக்க இருப்பது அவருடைய நண்பர் ராஜா. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தை அவருடைய விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

வெளியீட்டில் சிக்கல்

நடிகர்களே தயாரிப்பாளர்களாக மாறுவதற்கான அவசியம் என்ன? தற்போது தமிழில் இருக்கும் பெரிய கம்பெனிகள் பலவும் பொருளாதாரச் சிக்கலில் தவிக்கின்றன. பல நிறுவனங்களுக்கும் பல விதமான பிரச்சினைகள். ஒரு படம் வெளியாகும்போது எந்தத் திசையிலிருந்து எதிர்ப்பு கிளம்புமோ என்கிற பதற்றம் உருவாகிவிடுகிறது. சமீபத்திய உதாரணம் ‘பாபநாசம்’.

படத்தின் வெளியீட்டு தேதி முடிவாகி போஸ்டர் ஒட்டிய பிறகு, படத்தை வெளியிடக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியது. தனுஷின் ‘மாரி’ படம் வெளியானபோதும் அந்தப் படத் தயாரிப்பாளரின் பழைய பிரச்சினைகளால் படத்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்தப் பின்னணியில்தான் கதாநாயகர்கள் தயாரிப்பாளராக மாறுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தாங்களே தயாரித்து, உரிய தேதியில் உரிய விதத்தில் படத்தை வெளியிட நாயகர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

வெளியீட்டின்போது சிக்கல் வரக் கூடாது என்னும் எச்சரிக்கை உணர்வு ஒருபுறம் இருக்க, சம்பள விவகாரமும் கதாநாயகர்களின் முடிவுக்குக் காரணம் என்று தெரிகிறது. பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தம்முடைய வங்கிக் காசோலையை நிரப்பி நடிகர்களுக்குச் சம்பளம் கொடுப்பதில்லை. ஃபைனான்சியரின் காசோலைகளைத்தான் தருகிறார்கள்.

ஃபைனான்சியரிடம் நாமே பணம் வாங்கி, தயாரித்து நடித்து லாபம் பார்த்தால் என்ன என நடிகர்கள் நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்று மிகச் சில நிறுவனங்களே ஃபைனான்சியர்களிடம் பணம் வாங்காமல் படம் தயாரிக்கின்றன ஏ.ஜி.எஸ்., ரெட் ஜெயண்ட் ஆகியவை அத்தகைய நிறுவனங்கள்.

நடிகர்களின் சம்பள நிர்ணயம்

முன்பெல்லாம் ஒரு படம் 100 நாட்களைத் தாண்டி ஓடிப் பெரும் வெற்றி பெற்றால் நடிகரின் சம்பளம் கூடும். ஆனால், இப்போது நிலைமையே வேறு. எந்தப் படமும் 100 நாட்கள் ஒடுவதே இல்லை. ஆனால், நடிகர்களின் சம்பளம் மட்டும் படத்துக்கு படம் கூடிக்கொண்டே இருக்கிறது. காரணம் போட்டிதான். அந்த நடிகர் 12 கோடி சம்பளம் என்றால், உடனே எனக்கு 14 கோடி என்கிறார் இன்னொரு நடிகர். சம்பளத்தை ஏற்றிவிடுவதில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு இருக்கிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் “நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும்” என்று கோஷம் எழுப்பிவருகிறார்கள். ஆனால், அப்படி கோஷமிடுபவர்களே குறிப்பிட்ட நடிகரின் தேதி தனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து சம்பளத்தை அதிகமாகக் கொடுத்து தேதிகளைப் பெற்றுவிடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில், பெரிய நட்சத்திரம் நடிக்கவிருக்கும் படத்துக்காகத் தயாரிப்பாளர் ஒருவர் சம்பளம் பேசிவிட்டு வந்தார். அவர் பணத்தைத் தயார் செய்வதற்குள், மற்றொரு தயாரிப்பாளர் போய் அதைவிட சில கோடிகளை மேலே போட்டுக்கொடுத்து உடனடியாகக் கால்ஷீட் தேதிகளை வாங்கிக்கொண்டு வந்துவிட்டார். நட்சத்திரங்களின் தேதிகளை வாங்குவதில் நிலவும் இந்தக் கடுமையான போட்டி சம்பளத்தை ஏற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

சம்பளம் மட்டும்தானா?

பழம்பெரும் தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் கூறிய தகவல்கள் அதிர்ச்சி தந்தன. “யாருங்க சொன்னது நடிகர்கள் சம்பளம் மட்டும் வாங்குகிறார்கள் என்று? சம்பளம் என்று ஒரு தொகையைக் கொடுத்துவிடுவோம். அது போக படப்பிடிப்புக்கு வருவதற்கு பெட்ரோல் செலவு, சிகரெட் செலவு, தினமும் அவருடன் வருபவர்களுக்குக் கூலி, கேரவன், துணி துவைப்பதற்கு, மேக்கப் போடுபவர்களுக்குக் கூலி, சாப்பாட்டு செலவு என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.

இதனையும் நடிகர்களின் சம்பளத்தோடு சேர்த்தால் ஒரு நடிகரின் சம்பளம் என்பது நீங்கள் எதிர்பார்க்காத தொகை ஒன்று வந்து நிற்கும். எனக்குத்தான் சம்பளம் கொடுத்துவிட்டீர்களே, இதர செலவுகள் எல்லாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று எந்த ஒரு நடிகரும் சொன்னதாக சரித்திரம் கிடையாது. ஒரு நடிகர் ஐந்து வருடத்துக்கு முன்பு வாங்கிய சம்பளம் ஐந்து கோடி என்றால், அதே நடிகர் இப்போது வாங்குவது அதை விட 4 முதல் 5 மடங்கு அதிகம். இப்படி நிலைமை மாறிவிட்டபோது நான் எங்கே படம் தயாரிப்பது?” என்று பொறுமினார் நம்மிடம்.

தயாரிப்பாளர்களிடையே நிலவும் போட்டியால் ஒரு பக்கம் நடிகர்களின் சம்பளம் ஏறிக்கொண்டேபோக, இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்களின் நிதி நெருக்கடியால் பட வெளியீடு பாதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் நடிகர்களே தயாரிப்பாளர்களாகும் போக்கு அதிகரித்திருக்கிறது.

இதில் நடிகர்களுக்கு உள்ள சாதகங்களுடன், தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளைத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. படத்தின் வெற்றி/தோல்வி, தயாரிப்பாளர் என்னும் முறையில் நடிகர்களைப் பாதிக்கவே செய்யும். நடிகர்களின் சம்பளத்தை யதார்த்தமான முறையில் நிர்ணயிக்கும் சூழல் உருவாகலாம்.

தாங்கள் நடிக்கும் படத்தை மட்டுமே தயாரிக்கும்வரை இதில் பெரிதாக எந்தப் பிரச்சினையும் இருக்காது. அதுவும் படம் வெற்றிபெற்றால் பிரச்சினை இல்லை. படம் தோல்வியடைந்து முதலீடு நஷ்டமாகும்போது இந்த சாகசத்தின் மறுபக்கம் புரியும் என்று சொல்கிறார்கள் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள்.

SCROLL FOR NEXT