இந்து டாக்கீஸ்

2 ஸ்டேட்ஸ்: பகடி என்ற போர்வையில்...

மோ.அருண்

பொதுவாக இலக்கியம் சினிமாவாக மாறும்போது, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியான அளவுகோல் அல்ல. காரணம் இரண்டுமே, வெவ்வேறு வடிவத்தினாலான கலை. அதனதன் தளத்தில், அதது உயர்ந்தே இருக்கும்.

ஆனால் சிறுகதை, அல்லது நாவல் ஒன்றைத் திரைப்படமாக எடுக்கும்போது மனத்தில் நிறுத்த வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. நாவலின் எந்தப் பகுதி, அல்லது நாவலின் எந்தக் கூறுகள் காட்சிமொழிக்கு உவப்பாக இருக்குமோ, அவற்றை எக்காரணம் கொண்டும் நிராகரிக்கக் கூடாது. நாவலில் இருக்கும் சின்னச் சின்ன அம்சங்கள், ஒரு படைப்பின் அடிநாதமாக இருக்கும். 2 ஸ்டேட்ஸ் புத்தகத்தை மறந்துவிட்டு, இதனை வெறும் படமாகப் பார்க்கும்போது கூட மனத்தில் பெரிதாக ஒட்டவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதி முழுக்க, பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன காட்சிகள்தான்.

தமிழ்நாட்டைப் பற்றி ஹீரோ சொல்லும்போது, பஞ்சாபில் திருடப்பட்ட ஒரு வீட்டில் இருக்கும் பர்னிச்சர்களைப் போலத்தான், தமிழ்நாட்டின் வீடுகளில் பர்னிச்சர்கள் இருக்கின்றன என்பார். ஒரு மாநிலத்தின் கலாச்சாரம் என்ன என்பதைக்கூட தெரிந்துகொள்ளாமல், கறுப்பு நிறத்தில் தோலால் செய்யப்பட்ட மெத்தைகள்தான் இந்தியாவின் கலாச்சாரம் என்று இயக்குநர் நினைத்துவிட்டார் போல, மூங்கில்களால் பின்னப்பட்ட இருக்கைகள் இருக்கும் வீட்டைப் பார்த்துதான் ஹீரோ இப்படி வசனம் பேசுவார். இதற்குப் பெயர்தான், இனத்துவேசம். உடனே தமிழர்களுக்கு பகடி தெரியவில்லை, நகைச்சுவை உணர்வு இல்லை என்றெல்லாம் யாரும் பேசவேண்டிய தேவையில்லை. நகைச்சுவை உணர்வுக்கும், ஒரு குறிப்பிட்ட இனக்குழுவை, வேண்டுமென்றே திட்டமிட்டுத் தாக்குவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இத்தனைக்கும் இப்படியான ஒரு வசனம் சேத்தன் பகத்தின் புத்தகத்தில் இல்லை. மாறாக, இதேபோல், பஞ்சாபிகளின் கலாச்சாரத்தைத் தமிழர்கள் பகடி செய்வதாக ஒரு காட்சியை அமைத்திருக்க வேண்டியதுதானே. படம் முழுக்கத் தமிழ் இனக்குழுவை வஞ்சிக்கும் இப்படியான காட்சிகள் நிறையவே இருக்கின்றன.

இதைவிட இன்னும் மோசமான ஒரு உதாரணம், பொதுவாகத் தமிழ்ப் பெண்கள் கறுப்பாக இருப்பார்கள் என்று ஹீரோவின் தாயார் பேசும்போது சொல்ல.. “இல்லையே, இந்தப் பெண் கலராக இருக்கிறாளே!” என்று ஹீரோ சொல்வார். கலராக இருக்கும் தமிழ்ப் பெண்களை நம்பக் கூடாது என்று எதிர் வசனம் பேசுவார், ஹீரோவின் தாயார். இதன் நுட்பமான அரசியலைப் பார்க்காமல், இந்தப் படம் சிறப்பாக இருக்கிறது என்று தமிழர்களே கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தப் படம், தமிழ்நாட்டிலும் திரையிடப்படும், தமிழர்களும் பார்ப்பார்கள் என்கிற எந்தவித உணர்வும் இன்றி, வேண்டுமென்றே நிறைய தேவையில்லாத, தமிழர்களைக் காயப்படுத்தும் காட்சிகளைச் சேர்த்துள்ளார்கள். இவையெல்லாம் பகடி என்றால், படத்தில் வரும், தமிழ்க் குடும்பம், இதே மாதிரி பஞ்சாபிக் குடும்பத்தையும் இரண்டு மூன்று முறை பகடி செய்திருக்கலாம் அல்லவா?

நான் கலாச்சாரக் காவலன் எல்லாம் கிடையாது. ஆனால் ஒரு படைப்பு எல்லாருக்கும் பொதுவானது, அதில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் கலாச்சாரத்தை, கேலி செய்வதாக நினைத்துக்கொண்டு, அந்த இனக்குழுவைக் காயப்படுத்தக் கூடாது. அது ஒரு நல்ல படைப்பிற்கு அழகல்ல. அப்படி பகடி செய்வது என்று இயக்குநர் முடிவெடுத்துவிட்டால், இரண்டு இனக்குழுவிலும் உள்ள, பிற்போக்குத் தனங்களைச் சுட்டிக் காட்டியிருக்கலாம். எடுப்பது ஒரு மசாலாக் குப்பைதான் என்றாலும், அதில் நுட்பமான அரசியலையும் நுழைத்து தருவதில் வட இந்திய சினிமாக்களும், ஊடகங்களும் வெற்றிகரமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

SCROLL FOR NEXT