இந்து டாக்கீஸ்

இந்திய சினிமாவின் 40 ஆண்டு மவுனம்

தேவிபாரதி

நெருக்கடி நிலைப் பிரகடனம்: 40 ஆண்டுகள் நிறைவு- ஜூன் 26

புகழ்பெற்ற இந்தித் திரைப்பட இயக்குநரான குல்சார் 1975-ல் சர்ச்சைக்குரிய திரைப்படமொன்றை வெளியிட்டார். சூறாவளி என்னும் பொருள்படும் ‘ஆந்தி’ என்ற அந்தத் திரைப்படம்தான் இந்திய ஜனநாயகத்தின் கருப்பு அத்தியாயமாக வர்ணிக்கப்படும், 1975-77ஆண்டுகளில் அமலில் இருந்த 21 மாத கால நெருக்கடிநிலைக் காலத்தில் தடைசெய்யப்பட்ட முதல் திரைப்படம். நாயகன்- சஞ்சீவ் குமார், நாயகி- சுசித்ரா சென்.

கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்றுவிட்ட கணவனும், நாட்டின் புகழ்பெற்ற அரசியல்வாதியாக இருக்கும் மனைவியும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்க நேரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

‘ஆந்தி’ நேரடியான அரசியல் திரைப்படமல்ல. எனினும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியைச் சீண்டும்படியான காட்சியமைப்புகள் அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்ததாகவும், நாயகியாக நடித்த சுசித்ரா சென்னின் ஒப்பனையும் நடை உடை பாவனைகளும் இந்திரா காந்தியைப் போல இருந்ததாகவும் கருத்துகள் உருவாயின. தென்னிந்தியாவில் இப்படம் திரையிடப்பட்டபோது உங்கள் பிரதமரைத் திரையில் காணுங்கள் என்றுகூட விளம்பரம் செய்தார்கள்.

முதல் தடை

படம் வெளியாகி 20 வாரங்கள் சக்கைப் போடு போட்ட பிறகே இது பிரதமரின் கவனத்துக்குச் சென்றது. அப்படம் தடை செய்யப்பட வேண்டிய ஒன்றா என்று தனது ஆலோசகர்களிடம் கேட்டபோது, அதற்கு அவசியமில்லை என்றே அவர்கள் சொன்னார்கள். எனினும் நெருக்கடிநிலைக் காலத்தில் அரசியல் காரணங்களுக்காகத் தடை செய்யப்பட்ட முதல் படம் என்ற பெருமை அதற்குத்தான் கிடைத்தது. 1977-ல் ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தப் படத்தின் மீதான தடை நீக்கப்பட்டு நாடு முழுவதும் திரையிடப்பட்டது.

1977-ல் வெளிவந்த ‘கிஸ்ஸா குர்ஸி கா’ என்ற திரைப்படம் நெருக்கடி நிலையை விமர்சித்ததற்காகத் தடை செய்யப்பட்ட மற்றொரு இந்தித் திரைப்படம். இதன் இயக்குநர் அம்ரித் நஹாதா அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர். படத்தின் அரசியல் பகடிகள் காங்கிரஸுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தின. சஞ்சய் காந்தியின் தலைமையில் ஒன்றுதிரண்ட காங்கிரஸ் தொண்டர்கள் இப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளை அடித்து நொறுக்கினார்கள். படத்தின் பல பிரதிகளைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். படத்தின் இயக்குநர் தனது திரைப்படத்தைப் பாதுகாப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடினார். நீதிபதிகளுக்குத் திரையிட்டுக் காட்டுவதற்காகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பிரதி சஞ்சய் காந்தியின் கார்த் தொழிற்சாலையில் வைத்து எரிக்கப்பட்டது. நெருக்கடி நிலை முடிவுக்கு வந்த பிறகு இந்தச் செயலில் ஈடுபட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டது. அவர்களில் யாரும் தொழில்முறை குண்டர்கள் அல்ல. சஞ்சய் காந்தி தவிர, இந்திராவின் செயலாளர் ஆர்.கே. தவன், அவரது செய்தி ஒலி/ஒளிபரப்பு அமைச்சர் வி.சி. சுக்லா ஆகிய மூவரும் அப்போது இந்திய அரசியலின் நம்பிக்கை நட்சத்திரங்களாகக் கருதப்பட்டவர்கள்.

மவுனத்தின் பின்னணி

பிரபல பாலிவுட் நடிகரான சத்ருகன் சின்ஹாவின் எல்லாத் திரைப்படங்களுக்குமே நெருக்கடிநிலைக் கால இந்திரா அரசு ஏதாவதொரு வகையில் தொந்தரவு கொடுத்தது. இந்திராவின் எதேச்சாதிகாரப் போக்குக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணின் தீவிர ஆதரவாளராக சத்ருகன் இருந்ததுதான் காரணம். இந்திராவுக்கு ஆதரவாக இல்லாததால் பின்னணிப் பாடகர் கிஷோர் குமாரின் பாடல்களை ஒலிபரப்புவதை அகில இந்திய வானொலி நிறுத்திக்கொண்டது.

நெருக்கடி நிலையை எதிர்த்து 1975-ல் தனிக்கட்சி ஒன்றை உருவாக்கிய தேவ் ஆனந்த், ஐ.எஸ். ஜோகர் ஆகிய இருவரும் பல தொல்லைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. நெருக்கடி நிலைக்கு ஆதரவாகச் செயல்பட நிர்ப்பந்திக்கப்பட்டதால் 1975-க்கும் 1977-க்கும் இடைப்பட்ட காலத்தில் பல இந்தித் திரைப்பட இயக்குநர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடினார்கள்.

நமது ஜனநாயகத்தை ஒரே ஆணையின் மூலம் வெறும் கற்பனையாக மாற்றிய, சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வாகக் கருதப்படும் நெருக்கடி நிலையைப் பற்றி இந்திய சினிமா ஏன் பேசவில்லை என்ற கேள்வியை இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள முடியும்.

1977 தேர்தலில் தோல்வியடைந்த பிறகும் இந்திரா அதிகாரம் மிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராகவே இருந்தார். மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளை முற்றாக இழந்துவிடாத ஒரு கட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பதன் ஆபத்தைப் புரிந்துகொண்ட இந்திய சினிமா நெருக்கடி நிலைக் காலம் பற்றி இன்று வரையிலும் மவுனம் சாதித்தே வருகிறது. 2004-ல் ஜெயப்பிரகாஷ் நாராயண் பற்றிய ஒரு திரைப்படத்தை தூர்தர்ஷனில் ஒளிபரப்புவதற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு மறுத்ததை நாம் நினைவுகூர வேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு

முப்பதாண்டுகளுக்குப் பிறகு 2005-ல் சுதிர் மிஸ்ராவின் இயக்கத்தில் வெளிவந்த ‘ஹசாரோன் குவாய்ஷேய்ன் அய்ஸி’ என்ற இந்தித் திரைப்படம் நெருக்கடி நிலையின் சமூக- பொருளாதார- அரசியல் அடிப்படைகளை விரிவாக ஆராய்ந்த திரைப்படமாகக் கருதப்படுகிறது. 1989-ல் மலையாளத்தில் ஷாஜி எம். காரூன் இயக்கத்தில் வெளிவந்த ‘பிறவி’ என்னும் படமும் நெருக்கடி நிலை பற்றிய முக்கியமான திரைப்படமே.

கருணாகரன் தலைமையிலான அப்போதைய கேரள காங்கிரஸ் அரசு, நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. மாணவர்களில் பலர் கடத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் பொறியியல் மாணவரான ராஜன்.

ராஜனின் தந்தை ஈச்சர வாரியார் தனது மகனை மீட்கப் போராடினார். ராஜன், போலீசாரால் கடத்தப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாக்கிக் கொல்லப்பட்ட விஷயம் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்த பிறகு அம்பலமானது. இந்தப் பின்னணியில் உருவான மிகச் சிறந்த திரைப்படம்தான் ‘பிறவி’. பல விருதுகளைப் பெற்ற இந்தப் படம் நெருக்கடி நிலையின் அத்துமீறல்களை வலுவான கலை மொழியில் அம்பலப்படுத்தியது.

தமிழில் நெருக்கடி நிலை காலகட்டத்தைப் பற்றி மறைமுகமாகக்கூட எந்தவொரு திரைப்படமும் வெளிவந்ததாக நினைவில்லை. தனது திரைப்படங்களில் இந்திரா காந்தியைத் தொடர்ந்து கிண்டல் செய்துவந்த சோ, ‘முகம்மது பின் துக்ளக்’ என்னும் திரைப்படத்தை எடுத்தார். நெருக்கடி நிலைக்கு முன்பே பலமுறை மேடையேற்றப்பட்ட நாடகம் அது. இந்திராவின் எதேச்சாதிகார அரசியலைக் கிண்டல் செய்த அந்தத் திரைப்படம் ஒரு நகைச்சுவைப் படம் என்பதற்கு அப்பால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஒரு சாட்சியம்

2012-ல் கோவாவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட வந்தனா குப்தாவின் ஆவணப்படம் நெருக்கடி நிலை பற்றிய முற்றுப்பெறாத விவாதங்களுக்கான ஒரு சாட்சியம். 1971 - 1977 வரை சிறையில் இருந்த நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்த பிரபாத் குமார் சௌத்ரி, பத்திரிகையாளரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான ஜான் தயாள், வரலாற்றாய்வாளர் உமா சக்ரவர்த்தி, தெரு நாடக நடிகர் அவிஜித் தத் ஆகியோரின் நெருக்கடி நிலை அனுபவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த ஆவணப்படம், வரலாறு என்பது சாக மறுக்கும் ஒரு பிசாசு என்பதை நெருக்கடி நிலை பற்றிய நினைவுகள் கிட்டத்தட்ட மறைந்தொழிந்துவிட்ட ஒரு தலைமுறைக்குச் சொல்கிறது.

தொடர்புக்கு: devibharathi.n@gmail.com

SCROLL FOR NEXT