இந்து டாக்கீஸ்

திரையும் இசையும்: பிரம்மனே பிச்சை கேட்பான்!

எஸ்.எஸ்.வாசன்

மலருக்கும் நிலவுக்கும் மங்கையரை ஒப்பிடும் தமிழ், இந்தித் திரைப்படப் பாடல்கள் என்றும் மங்காத புகழ் கொண்டவை. காதலியைப் பற்றிய, இவ்வித வர்ணனையின் உச்சக்கட்டமாக, “உன்னைப் படைத்த இறைவனே உன் அழகைப் பார்த்து வியப்படைவான்” என்ற உணர்வை, இந்தி மற்றும் தமிழ் மொழியின் அழகிற்கேற்ப வெளிப்படுத்தும் இரண்டு பாடல்கள் இவை.

ராஜேந்திரகுமார் - வகிதா ரஹ்மான் நடிப்பில், சங்கர் ஜெய்கிஷன் இசை அமைப்பில், ஹஸ்ர ஜெய்பூரி எழுதிய அந்தப் பாடல் தர்த்தி (தாய்மண்) என்ற இந்திப் படத்தில் இடம்பெற்றது. இந்தத் திரைப்படம் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த சிவந்த மண் என்ற சிவாஜி நடித்த வெற்றிப் படத்தின் மறு ஆக்கப்படம். கல்யாணப் பரிசு என்ற தனது வெற்றிப் படத்தை நஜாரானா (பரிசு) என்ற பெயரில் இந்தியில் இயக்கியதன் மூலம், பாலிவுட்டில் நுழைந்த ஸ்ரீதர் தனது பல வெற்றிப் படங்களை இந்தியில் இயக்கி இந்தி பட உலகில் எஸ்.எஸ். வாசனுக்குப் பிறகு மிகப் பெரிய சாதனைகளைப் புரிந்தவர். தர்த்தி படத்தின் இயக்குநர் ஸ்ரீதர் என்பது மட்டுமின்றி, இப்படத்தில் சிவாஜி கணேசன் கௌரவ நடிகராக ஒரு முக்கிய வேடத்தில் நடித்துமிருக்கிறார்.

குதா பி ஆஸ்மான் ஸே ஜ ஜமீன் பர் தேகத்தா ஹோகா

மேரி மெஹூபா கோ கிஸ்னே பனாயா, சோஸ்த்தா ஹோகா

என்று தொடங்கும் அந்தப் பாடலின் பொருள்

இறைவன் வானிலிருந்து பூமியைப் பார்க்கும் பொழுது

என் காதலியைப் படைத்தது யார் என நினைக்கக்கூடும்.

ஓவியம் வரைந்தவனே குழம்புகிறான்

இது யாருடைய ஓவியம் என்று

உன் போன்ற அழகை உடமையாக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு உண்டு (என அந்த இறைவனே)

சில சமயம் (வயிறு) எரிந்துகொண்டிருப்பான்

சில சமயம் மகிழ்ந்துகொண்டிருப்பான்

உலகின் முழு வனப்பு உன் தோற்றத்தில் சுருட்டப்பட்டுள்ளது

மொட்டிலிருந்து இதழானது எத்தனை

எழிலான காட்சிகளால் சுற்றப்பட்டுள்ளது

உன்னைப்போல முன்னர் எவரும் இருந்ததில்லை

எவரும் இருக்கப் போவதும் இல்லை

தேவதைகளும் இங்கு வந்து

வட்டமடித்துக் கொண்டிருக்கும்

எங்கு நீ கால் வைக்கிறாயோ அந்த இடத்தை

முத்தமிட்டுக்கொண்டிருக்கும்

யாருக்கு என்ன உள்ளத்தைத் துளைக்கிறது என்பதை (துளைக்கும்) அவரே அறிவார்.

தூத்துக்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட (தமிழ் அறியாத) தமிழ்நாட்டு நடிகையான வகிதா ரஹ்மான் தன் அழகால் மட்டுமின்றி ஆழமான நடிப்பாலும் வட இந்திய ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர்.

இப்பாடலுக்கு இணையான பாடல் இடம்பெற்ற படம் ‘ஈரமான ரோஜாவே’. சிவா - மோகினி ஆகிய இளம் நட்சத்திரங்கள் நடித்திருந்த அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் ‘அதோ மேக ஊர்வலம்’. ஆனால், இங்கே ஒப்பிடும் இந்தி பாடலின் ஆழமான உணர்வுக்குச் சமமான கருத்துடைய பாடல் என்று இந்தப் பாடலை எடுத்துக் காட்டலாம்.

இப்பாடலை எழுதியவர் புலவர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆரால் ‘அரசவைக் கவி’ என்று அதிகாரபூர்வீகமாக அறிவிக்கப்பட்டு அப்பதவியை வகித்த ஒரே திரைப்பாடலாசிரியரான இவர், ‘விழியே கதை எழுது’ என்பது போன்ற இலக்கிய ரசனை மிகுந்த பாடல்களை எழுதியவர்.

இனி தமிழ்ப் பாடலைப் பார்க்கலாம்.

அதோ மேக ஊர்வலம்

அதோ மேக ஊர்வலம் அதோ

மின்னல் தோரணம் அங்கே

இதோ காதல் பூவனம்

இதோ காமன் உற்சவம்

இங்கே ஒரே நாள்

நிலவினில் முகம் பார்த்தேன்

இதோ நான் உயிரினில்

உனைச் சேர்த்தேன் வா

(அதோ)

உனது பாதம் அடடா இலவம் பஞ்சு

உதட்டைப் பார்த்துத் துடித்தது எனது நெஞ்சு

இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம்

நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்

தேகம் கொஞ்சம் மூடவே கூந்தல் போதும் போதுமே

ஆடை இங்கு வேண்டுமா நாணம் என்ன வா வா

(அதோ)

குழலைப் பார்த்து முகிலென

மயில்கள் ஆடும்

முகத்தைப் பார்த்து

அடிக்கடி நிலவு தேயும்

தென்னம்பாண்டி முத்தைப்

போல் தேவி புன்னகை

வண்டு ஆடச் சொல்லுமே

செண்டு மல்லிகை

உன்னைச் செய்த பிரம்மனே

உன்னைப் பார்த்து ஏங்குவான்

காதல் பிச்சை வாங்குவான்

இன்னும் என்ன சொல்ல

(அதோ)

‘உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான், காதல் பிச்சை வாங்குவான் இன்னும் என்ன

சொல்ல’ என்ற தமிழ் வரிகளின் ஆழமான உணர்வுகள் ‘உன் போன்ற அழகை உடமையாக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு (என அந்த இறைவனே) சில சமயம் (வயிறு) எரிந்துகொண்டிருப்பான், சில சமயம் மகிழ்ந்துகொண்டிருப்பான்’ என்ற இந்திப் பாடலின் பட்டவர்த்தமான உணர்வுகளைக் கண்ணாடி போலப் பிரதிபலிக்கின்றன.

SCROLL FOR NEXT