‘எனிபடி கேன் டான்ஸ் 2’ படத்தில் நடனக் கலைஞராக நடித்தது உற்சாகமான அனுபவமாக இருந்தது என்று சொல்கிறார் ஷ்ரத்தா கபூர். நடன இயக்குநர் ரெமோ டி’சோஸா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் வருண் தவான், பிரபு தேவா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். “இந்தப் படத்தில் நடனக் கலைஞராக நடித்தது உற்சாகமான அனுபவமாக அமைந்தது.
படத்தில் பிரபு தேவா எங்கள் குருவாக நடித்திருக்கிறார். அவரோடு சேர்ந்து நடனமாட வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது” என்கிறார் ஷ்ரத்தா. இதற்கு அடுத்து நடிக்கப்போகும் ‘ராக் ஆன் 2’ படத்தில் பாடகியாக நடிப்பதால், ஷ்ரத்தா இப்போது பாடுவதற்காகத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.
‘டைம்பாஸ் காதல் நல்லது’
கங்கனா ராணாவத், இம்ரான் கான் நடிப்பில் ‘கட்டி பட்டி’ திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் அதன் டிரைலர் வெளியீட்டில் பேசிய கங்கனா, டைம்பாஸ் காதலில்தான் தனக்கு நம்பிக்கையிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
‘கட்டி பட்டி’ படத்தில் வரும் கங்கனாவின் கதாபாத்திரம் காதலை நம்பாமல், ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’பை விரும்பும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. “ ‘கட்டி பட்டி’ படம் வழக்கமான காதல் படமாக இருக்காது. எனக்கும், இம்ரானுக்கும் இந்தப் படத்தில் சமமான முக்கியத்துவம் இருக்கும். இருவரது கதாபாத்திரங்களும் வலிமையாக அமைக்கப்பட்டிருக்கின்றன” என்கிறார் கங்கனா.
ஹிட்டடிக்கும் ‘பிரதர்ஸ்’
அக்ஷய் குமார், சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘பிரதர்ஸ்’ திரைப்படத்தின் டிரைலர் யூ ட்யூபில் பெரிய ஹிட். ‘பிரதர்ஸ்’ டிரைலர் வெளியான முதல் நாளே பத்து லட்சத்துக்கும் அதிகமான ஹிட்டடித்திருக்கிறது.
ஹாலிவுட்டின் ‘வாரியர்ஸ்’ படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் மல்யுத்த வீரர்களான அண்ணன், தம்பி இருவருக்குள் நடக்கும் சண்டையைப் பற்றியது. கரண் மல்ஹோத்ரா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். ஆகஸ்ட் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.