இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஷோ: 52 வயதிலும் அடங்காத டாம் குரூஸ்!

ரிஷி

ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் தவறாமல் இடம்பெறுவது மிஸன் இம்பாஸிபிள். ஆக்‌ஷன் படங்களில் அடுத்தடுத்த பாகங்களை விரும்பி எதிர்பார்க்க வைத்த இவ்வரிசையின் முதல் படம், சரியாக 19 ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் முழுவதும் வெளியாகி படத்தின் பட்ஜெட்டைவிடச் சுமார் ஆறு மடங்கு வசூலை வாரிக்குவித்தது.

இதன் ஐந்தாம் பாகம் டாம் க்ருஸ் நடிக்கும் ‘மிஷன் இம்பாஸிப்பிள்: ரப் நேஷன்’ இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் 7 அன்று வெளியாகிறது. இதே படம் மிஷன் இம்பாஸிப்பிள்: முரட்டு தேசம் என்ற பெயரில் தமிழிலும் வெளியாகவுள்ளது.

ஐ.எம்.எஃப்.ஐயை அழிக்கத் திட்டமிடுகிறது ஒரு சமூக விரோதக் கும்பல். அந்தக் கும்பலிடமிருந்து ஐ.எம்.எஃப்.ஐயைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் ஈத்தனும் அவரது குழுவினரும். கடுமையான சவால்கள் நிறைந்த இந்த அதிரடிப் போட்டியில் அவர்கள் எப்படி வெற்றிபெறுகிறார்கள் என்பதை இதயத் துடிப்பை நிறுத்தும் வல்லமை கொண்ட பிரம்மாண்ட ஸ்டண்ட் காட்சிகளுடன் ஆர்ப்பார்ட்டமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இப்படத்தில் ஈத்தன் ஹண்ட் என்ற ஸ்பெஷல் ஏஜெண்ட் வேடமேற்று ரசிகர்களைக் கவருகிறார் டாம் குரூஸ். 52 வயதாகிவிட்டாலும் இளவயது நடிகர்கள்கூடச் செய்யத் தயங்கும் ஆக்‌ஷன் காட்சிகளில் துணிந்து நடித்துள்ளார் டாம் குரூஸ்.

இன்னும் பத்துப் பாகங்களில் நடித்தாலும்கூட அவரது துடிப்பும் துள்ளலும் அடங்காதுபோலிருக்கிறது. அவருடன் சைமன் பெக், ஜெரமி ரென்னர், அலெக் பால்ட்வின், ரெபேக்கா ஃபெர்குசன் ஆகியோரும் படத்தை விறுவிறுப்பைக் கூட்டியுள்ளனர்.

மிஷன் இம்பாசிப்பில் பட வரிசையில் இதுவரை நான்கு படம் வெளிவந்து வெற்றிபெற்றுள்ளது. இப்போது வெளிவரும் ஐந்தாம் பாகமான இப்படத்தை கிறிஸ்டோபர் மெக்குவாரி எழுதி இயக்குகிறார்.

புகழ்பெற்ற பாராமவுண்ட் பிக்ஸர் தலைமைத் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை வயகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தியாவில் வெளியிடுகிறது.மீண்டும் ஒரு அதிரடி விருந்து ஆக்‌ஷன் விரும்பிகளுக்குக் காத்திருக்கிறது.

SCROLL FOR NEXT