இந்து டாக்கீஸ்

சூழல் ஒன்று பார்வை இரண்டு: என்னை மறந்ததேன் தென்றலே?

எஸ்.எஸ்.வாசன்

ஒன்றாய் இருக்கும்பொழுது உற்சாகமாகப் பாடும் திரைக் காதலர்கள், பிரிந்திருக்கும்போது பாடும் சோக கீதங்களும் பொருள் செறிந்தவை. இந்தியாவின் எல்லா மொழிகளிலும் இப்படிப்பட்ட சூழலுக்கான பாடல்கள் உள்ளன. காதலர்களுக்குப் பொதுவான இந்தச் சூழ்நிலையை வெவ்வேறு விதமாகக் கையாளும் கவித்துவமான பாடல்கள் இந்தியிலும் தமிழிலும் உள்ளன.

‘என்னை விட்டுத் தொலைவில் உள்ள காதலனுக்கு, என் நினைவு கட்டாயம் வரத்தான் செய்யும், நீ போய் என் நிலையைச் சொல்’என்று வண்ணத்துப் பூச்சியைத் தூது விடும் இந்திப் படக் காதலியையும் என்னை ஏன் அவர் மறந்து விட்டார் எனத் தென்றலையும் கற்சிலைகளையும் கடல் அலைகளையும் பார்த்துப் பாடி, அவற்றைத் தூது அனுப்பும் தமிழ்க் காதலியையும் பார்க்கலாம்.

இந்திப் பாடல்:

படம்: பதங்க் (பட்டம்).

பாடலாசிரியர்: ராஜேந்திர கிஷன்.

பாடியவர்: லதா மங்கேஷ்கர்.

இசை: சித்ரகுப்த்

பாடல்:

ரங்க் தில் கி தட்கன் பீ லாத்தி தோ ஹோகி

யாத் மேரி உன்கோ பீ ஆத்தி தோ ஹோகி

ஓ பியார் கீ குஷ்பு கஹான் ஆத்தி தோ கலியான் ஸே

ஹோ கே ஆயீ ஹை ஹவா பீ உன்கீ ஃகலியான் ஸே

சூகே உன் கே தாமன் கோ ஆத்தி தோ ஹோகி

ரங்க் தில் கி …

பொருள்:

இதயத்தின் துடிப்பை இவ்வண்ணங்களும் எடுத்தே காட்டும்

என் நினவு அவனுக்கும்

வரத்தான் செய்யும்

ஏ காதல் என்ற நறுமணமே,

நீ உள்ள பூங்காவனத்தில் வீசும்

இனிய காற்றும் அவன் மேலாடையை

முத்தமிட்டே வந்திருக்கும் (இதயத்தின் துடிப்பை)

இந்த வசந்தம் இந்த வனம் எல்லாம் அவன் வசம்

இருப்பது அவன் கொள்ளும் சிறு தயக்கம் என்னிடம் மட்டும்

இதனால் அவனது இதயம் கொஞ்சம் பதறவே செய்யும் (இதயத்தின் துடிப்பை)

செல் என் செல்ல

வண்ணத்துப் பூச்சியே

நன்கு நீ அறிந்த அவன் நகரத்துக்கு

மெல்ல உன் செய்திகளை அவனிடம் அளித்துவிட்டு வா

எப்படியும் அங்கு நீ போகத்தானே செய்கிறாய்

இதயத்தின் துடிப்பை இவ்வண்ணங்களும் எடுத்தே காட்டும்

என் நினைவு அவனுக்கும் வரத்தான் செய்யும்.

இந்த மெல்லிய ஏக்க உணர்வைச் சற்று ஆற்றாமையுடன் வெளிப்படுத்தும் தமிழ்ப் பாடலைப் பாருங்கள்:

படம்: கலங்கரை விளக்கம் பாடலாசிரியர்: கண்ணதாசன்

பாடியவர்: பி.சுசீலா இசை: எம்.எஸ் விஸ்வநாதன்

என்னை மறந்ததேன் தென்றலே?

சென்று நீ என் நிலை சொல்லுவாய்

காற்றோடு வளரும் சொந்தம்

காற்றோடு போகும் மன்னவா

கண்ணோடு மலரும் அன்பு

கவியாக மாறாதோ? (என்னை மறந்ததேன்…)

கலையாத காதல் நிலையாகவென்று

அழியாத சிலைகள் செய்தாயோ? ஒன்றும்

அறியாத பெண்ணின் மனவாசல் தொட்டுத்

திறவாமல் எங்கே சென்றாயோ?

நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில்

நீ ஆடும் நாளும் வருமோ? இந்த

நிலமாளும் மன்னன் நீயானபோதும்

நானாளும் சொந்தம் இல்லையோ?

கண்டாலும் போதும் கண்கள்

என் ஆவல் தீரும் மன்னவா

சொன்னாலும் போதும் நெஞ்சம்

மலராக மாறாதோ? (என்னை மறந்ததேன்)

தொடராமல் தொடரும் சுவையான உறவில்

வளராமல் வளர்ந்து நின்றாலும்

இன்று முடியாமல் முடியும் பனிபோன்ற கனவில்

எனை வாழ வைத்துச் சென்றாயே

வந்தோடும் அலைகள் என்றும்

என் காதல் பாடும் இல்லையோ?

எந்நாளும் எனது நெஞ்சம்

உனைத் தேடி வாராதோ? (என்னை மறந்ததேன்)

SCROLL FOR NEXT