கடந்த மே1-ம் தேதி தனது 44-வது பிறந்தநாளைக் கொண்டாடி முடித்திருக்கும் அஜித் மகன் பிறந்த சந்தோஷத்திலிருந்து இன்னும் மீளவில்லை. தற்போது சிவா இயக்கத்தில் நடித்துவரும் அவர், அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் என்கிறார்கள்.
‘என்னை அறிந்தால்’ படத்தின் சத்தியதேவ், விக்டர் கதாபாத்திரங்களை ரசிகர்கள் இன்னும் கொண்டாடிவரும் நிலையில், அஜித் விருது மற்றும் பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிடுவதால் அவரை நேரில் பார்க்க முடியவில்லையே என ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறார்களாம் அவருடைய ரசிகர்கள்.
சமீபத்தில் தனது செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திராவின் மகள் திருமணத்துக்கு வந்து சென்ற அஜித் தனது படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருவதையும் முற்றாக நிறுத்திவிட்டார். முக்கிய விஷேச நாட்களில் அம்மா அப்பாவை அழைத்துக் கொண்டு திருப்பதி தரிசனத்துக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் அஜித், சாமி தரிசனத்துக்குச் செல்லும்போது காட்டன் வேட்டி சட்டைகள் அணிகிறார்.
தனக்கு நெருக்கமானவர்களின் திருமணங்களில் கலந்து கொண்டால் பட்டு வேட்டி சட்டை அணிகிறார். மகளுடன் குட்டி பொம்மை விமானங்களை ஓட்டி விளையாடச் செல்லும்போது பிளைன் டி- சர்ட் ஜீன்ஸ் அணிந்து ஸ்லீவ்லெஸ் ஓவர் ஜாக்கெட் அணிவதை வழக்கமாக வைத்திருக்கும் அஜித் பருத்தி ஆடைகளின் பிரியர்.
தனக்கு நெருக்கமான நண்பர்களைச் சந்திக்கச் சென்றால் ரவுண்ட் காலர் ஷார்ட் காட்டன் ஜிப்பாக்களை அணிந்து செல்வார். உயர்தர சன் கிளாஸ் அணிவதில் அலாதிப் பிரியம் கொண்ட அஜித், விதவிதமான ப்ளைன் கிளாஸ்களை இண்டோரில் அணிந்துகொள்வார்.
நேரம் அமையும்போதெல்லாம் புகைப்படங்களை எடுத்துத் தள்ளும் அஜித்துக்கு கண்ணாடி முன்நின்று தன்னைச் செல்ஃப் போர்ட்ரைட் புகைப்படம் எடுத்துப் பார்த்துக் கொள்வது ரொம்பவே பிடிக்கும்.