அறிமுகப் படத்துக்கு பாஸ் மார்க் கிடைக்க வேண்டும் என்ற பதைபதைப்புடன் வணிகத் திரைப்படம் இயக்க வருபவர்களுக்கு மத்தியில் அனந்தகிருஷ்ணன் வித்தியாச மானவர். விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட ‘அமீர்’ என்ற இந்திப் படத்தை விதார் நடிக்கத் தமிழில் ‘ஆள்’ என்ற தலைப்பில் மறு ஆக்கம் செய்தவர். மதத் தீவிரவாதத்துக்கும் - தேசப்பற்று மிக்க ஒரு எளிய இஸ்லாமிய இளைஞனுக்கும் இடையிலான உணர்வுப் போராட்டம்தான் கதைக்களம். அதை அடர்த்தியான காட்சிகள் கொண்ட துணிச்சலான இயக்கம் மூலம் சிறப்பான படமாக மாற்றிக்காட்டிப் பாராட்டுப் பெற்றவர்.
தற்போது பாபி சிம்ஹா நடிக்கும் ‘மெட்ரோ’படத்தை இயக்கி முடித்திருக்கிறார்… “ஆள் படத்தைப் பார்த்துப் பாராட்டிய பலரே முதலீடு செய்யவும் முன்வந்தார்கள். தற்போது மீண்டும் ஒரு சமூக அக்கறை மிக்க க்ரைம் த்ரில்லர் கதையைப் படமாக்கியிருக்கிறேன்” என்று பேசத் தொடங்கினார்.
பாபி சிம்ஹா இந்தப் படத்தில் தாதாவாக நடிக்கிறார் என்று செய்தி வெளியானதே?
தாதா என்று சொல்ல முடியாது. நம் கண்ணுக்குத் தெரியாமல் இயங்கிக்கொண்டிருக்கும் ஆனால், நமக்கு மத்தியில் நடமாடிக்கொண்டிருக்கும் ஒரு பகீர் கதாபாத்திரத்தில் வருகிறார். சீரியஸான, ஆனால் சிரிக்கவும் வைக்கிற கதாபாத்திரம். இந்தப் படத்தில் ஐந்து முக்கியக் கதாபாத்திரங்கள் கதையை நகர்த்திச் செல்கின்றன. பாபி சிம்ஹா, சென்ராயன், சிரிஷ், சத்யா ஆகிய ஐந்து பேர் நடித்திருக்கிறார்கள். சிம்ஹா கதாநாயகனாக வளர்ந்துவரும் தருணம். அவருக்கும் இது முக்கியமான காலகட்டமானாலும் தயங்காமல் இதை ஏற்று நடித்தார். இந்தக் கதாபாத்திரத்தைப் பிரபலமான, நடிக்கத் தெரிந்த ஒரு நடிகர் நடித்தால்தான் எடுபடும். திரைக்கதை எழுதி முடித்ததுமே மனதில் பட்டவர் பாபி சிம்ஹாதான். ஒப்புக்கொள்வாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், கதையைக் கேட்டு முடித்த அடுத்த நிமிடம் “ இந்த கேரக்டரை நான் கண்டிப்பாகச் செய்கிறேன்” என்று ஒப்புக்கொண்டார். அவருக்குக் கடுமையான கால்ஷீட் பிரச்சினை இருந்தாலும் எங்களுக்காகத் தேதிகள் ஒதுக்கித் தந்தது மட்டுமல்ல, இரவுபகலாக நடித்தும் கொடுத்தார்.
கதாநாயகி இல்லாத படமா?
இது பெண்களை மையப்படுத்திய படம். ஆனால் கதாநாயகி தேவைப்படாத படம். சிரிஷின் கேர்ள் ஃபிரெண்டாக ப்ரித்தி என்பவர் ஒரு கிளைக்கதையில் வந்து செல்வார். உடல்ரீதியாகப் பலவீனமானவர்கள் என்ற சமூகத்தின் பார்வையைப் பெண்கள் நினைத்தால் மாற்றமுடியும் என்பதை ப்ரித்தி கதாபாத்திரம் வழியாகச் சொல்லியிருக்கிறோம்.
மெட்ரோ என்று படத்துக்குத் தலைப்பு வைத்திருக்கிறீர்கள்... இது சென்னை பற்றிய கதையா?
சென்னை மாநகரத்தின் வாழ்வியல் சார்ந்த கதைகள் நிறையவே படமாகிவருகின்றன. இந்தக் கதை மாநகரங்களில் அதிகமாக நடந்துவரும் ஒரு முக்கியமான குற்றத்தையும் அதன் பின்னணியையும் முழுமையாகப் பேச வருகிறது. அதனால்தான் படத்துக்கு மெட்ரோ என்று தலைப்பு வைத்தோம்.
கொஞ்சம் விரிவாகச் சொல்ல முடியுமா?
படத்தின் தொடக்கத்தில், “ஒரு பொருள் இருக்கு… நாட்டோட வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அதுதான் காரணம்; அதுதான் தங்கம்” என்ற வசனம் வரும். இந்தியா மட்டுமல்ல, ஒவ்வொரு நாடும் எவ்வளவு தங்கத்தைக் கையிருப்பு வைத்திருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அந்த நாட்டின் பொருளாதார ஸ்திரத் தன்மையை மதிப்பிடுகிறார்கள். இன்றைய கணக்குப்படி உலகில் இருக்கும் மொத்தத் தங்கத்தில் அமெரிக்கா விடம்தான் 71 சதவீதம் இருக்கிறது. அதாவது 8 ஆயிரம் டன். தங்கக் கையிருப்பில் உலகில் பத்தாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. ஆனால் கறுப்புச் சந்தையில் இந்தியாவிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு மற்ற நாடுகளை அச்சுறுத்தக் கூடியது என்று தகவல்கள் சொல்கின்றன. கறுப்புப் பணம் நமது பொருளாதாரத்தைப் பாதிப்பதைவிடக் கறுப்புச் சந்தையில் பளபளக்கும் தங்கம் இன்னும் அதிகமாகப் பாதிக்கிறது.
இந்தச் சிக்கலின் வேரைப் பிடித்து ஆராய்ந்தபோது நூற்றுக்கணக்கான உண்மைச் சம்பவங்கள் என் கவனத்துக்கு வந்தன. அவற்றின் துணையோடுதான் கதாபாத்திரங்களை வடிவமைத்துக் கதை சொல்லியிருக்கிறேன். கடத்தி வரப்படும் தங்கம், திருடப்படும் தங்கம் இரண்டும் எப்படிப் பயணப்பட்டு உருமாறி ஜூவல்லரிக் கடைகளுக்கு வருகின்றன. அது எப்படிச் சட்டபூர்வமான தங்கமாக மாறுகிறது. இந்தக் குற்றத்தின் பின்னணியில் நடக்கும் குரூரங்கள் எப்படிப்பட்டவை என்பதைத்தான் இந்த ஐந்து கதாபாத்திரங்கள் வழியாகச் சொல்லியிருக்கிறேன். மனித வரலாற்றில் தங்கத்துக்கான போராட்டம் சாதாரணமானதல்ல. அந்தக் கோணத்தில் பார்த்தால் தங்கத்தின் நிறம் மஞ்சள் அல்ல; சிவப்பு.
இதில் ரசிகர்களுக்கு எது புதிதாக இருக்கும்?
நிழல் உலகில் குற்றச்செயல்களில் ஈடுபடும் எல்லோரும் அடிப்படைத் தேவைகள் இல்லாத பின்தங்கிய பகுதிகளிலிருந்து உருவாகி வருபவர்கள்; அவர்கள் பார்ப்பதற்குக் கொடூரமாகவும் பரட்டைத் தலையோடும் இருப்பார்கள்; கொடூரமான ஆயுதங்களால் தாக்குவார்கள் என்றுதான் தமிழ் சினிமா இதுவரை சொல்லி வந்திருக்கிறது. அது பழைய பொய்களில் ஒன்று. அதை இந்தப் படத்தில் உடைத்திருக்கிறேன்.
பெற்றோர்களின் கண்காணிப்பில் நல்ல குடும்பப் பின்னணியில் வளர்ந்த சில படித்த இளைஞர்கள் இதுபோன்ற குற்ற உலகுக்கு எப்படி வந்து சேர்கிறார்கள். அதிலிருந்து அவர்களால் மீள முடிகிறதா என்ற போராட்டம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கும்.