இந்து டாக்கீஸ்

சூழல் ஒன்று பார்வை இரண்டு: மாற்றத்தின் மீது மாறுபட்ட பார்வைகள்

எஸ்.எஸ்.வாசன்

தமிழ், இந்தி என்னும் மாறுபட்ட மொழிகள் வெளிப்படுத்திய ஒன்றுபட்ட உணர்வை இதுவரை இப்பகுதியில் கண்டோம். ஒரு சூழலை அல்லது தருணத்தை அணுகும் விதத்தில் இரு மொழிப் படைப்பாளிகளுக்கும் கணிசமான வேற்றுமைகளும் இருக்கின்றன.

அந்த வேற்றுமைகளின் அழகை இனிக் காண்போம். மேலெழுந்தவாறு பார்க்கும்போது எதிரெதிர் துருவ நிலைகளாகத் தோன்றினாலும் அடிநாதம் ஒன்றாக இருப்பதையும் உணர முடியும். அத்தகைய பாடல்களை இந்தப் பகுதியில் காண்போம்.

உலகத்தில் மாற்றம் ஒன்றுதான் மாறாத அம்சம் என்று சொல்லப்படுவதுண்டு. இந்த மாற்றத்தின் இயல்பை ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கே உரிய விதத்தில் அணுகுகிறார். “இயற்கை சக்திகளான, மலை, கடல் வானம் ஆகியவை எல்லாம் அப்படியே இருக்கும்போது மனிதனின் குணங்கள் மட்டும் வெகுவாக மாறிவிட்டதைப் பார்” என்று கூறுகிறது ஒரு தமிழ்ப் பாடல்.

“உலகத்தில் மனிதன் மட்டும் அல்ல, பகல்-இரவு, சூழ்நிலை, பருவம் ஆகிய இயற்கை எல்லாம் மாற்றத்துக்கு உட்பட்டவை. எனவே வீணாகக் கவலை கொள்ளாதே” என்று சொல்கிறது ஒரு இந்திப் பாடல். இந்த இரண்டு பாடல்களையும் பார்ப்போம்.

இந்திப் பாடல்:

திரைப்படம்: நயாசன்சார் (புதிய குடும்பம்) 1959-ல் வெளியான படம். பாடலாசிரியர்: ராஜேந்திரகிஷன்

பாடியவர்: ஹேமந்த்குமார். இசை: சித்ரகுப்த்.

பாடல்:

தின் ராத் பதல்த்தேஹைன்

ஹாலாத் பதல்த்தேஹைன்சாத்சாத்மௌசம் கீ

ஃபூல்அவுர் பாத் பதல்த்தேஹைன்

பொருள்:

பகல்-இரவு மாறுகிறது.

பக்கச் சூழல்கள் மாறுகின்றன.

பருவமும் அதன் பாதையும்

மலரும் மொட்டும் மாறுகின்றன.

எப்போதும் இருக்காது வெயில்

இருப்பதில்லை இருட்டும் எப்போதும்.

ஓர் இடத்தில் நிற்காது ஒருபோதும்

ஓடுகின்ற காலத்தின் கால்கள்.

எழுந்ததும் அழிந்ததுமாக எத்தனை ஊர்கள்

விழிகளில் விழுந்து இங்கே மாறின.

கடந்து போகும் இலையுதிர் காலம்

அடைவோம் உடனே வசந்த காலம்

இன்று தோன்றும் காய்ந்த கொடியே

எழிலுடன் நிற்கும் பூக்களுடன் நாளை

எவர்தான் கேட்பார் இயற்கையை நோக்கி

இரவுகள் இருக்கட்டும் இருள் இன்றி என

இந்த வாழ்க்கை ஒரு பாயும் நதி

இன்பம் துன்பம் இதில் ஓடும் புனல்

மலரைக் கொய்யும் மனதுடையோரே

குத்தும் முள்ளை முதலில் கொள்வீர்

எப்படி அறிவார் இன்பத்தின் மகிமை

தப்படி வைத்துத் துன்பத்தைத் தாண்டார்

பகல்-இரவு மாறுகின்றன.

பக்கச் சூழல்கள் மாறுகின்றன.

இதே கருத்தை மிக இனிமையான மெட்டில் கூறும் தமிழ்ப் பாடல் மிகவும் பிரபலம்.

திரைப்படம்: பாவ மன்னிப்பு (1961). பாடலாசிரியர்: கண்ணதாசன்.

பாடியவர்: டி.எம். சௌந்திரராஜன். இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி.

பாடல்:

வந்த நாள் முதள் இந்த நாள் வரை

வானம் மாறவில்லை

வான் மதியும் நீரும் கடல் காற்றும்

மலரும் மண்ணும் கொடியும்

சோலையும் நதியும் மாறவில்லை

மனிதன் மாறிவிட்டான்

நிலை மாறினால் குணம் மாறுவார்-பொய்

நீதியும் நேர்மையும் பேசுவார் தினம்

ஜாதியும் பேதமும் கூறுவார்-அது

வேதம் விதியென்றோதுவார்

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்

பாயும் மீன்களில் படகினைக் கண்டான்

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்

எதனைக் கண்டான் பணம்தனைப் படைத்தான்

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி

ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி

பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்

பாவி மனிதன் பிரித்து விட்டானே

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்.

SCROLL FOR NEXT