பத்தாண்டுகளைக் கடந்து கதாநாயகியாகத் தாக்குப்பிடிப்பவர் களின் பட்டியலை அலட்டல் இல்லாமல் அலங்கரிக்கிறார் காஜல் அகர்வால். தற்போது மாஸ் நாயகர்களின் மனம் கவர்ந்த நாயகி.
தமிழில் அதிகப் படங்களில் நடிக்கும் அதேநேரம் தெலுங்கு, இந்தியிலும் பிடியை விடவில்லை. ஆடை அணிவகுப்பில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்கும் காஜல், தேசத்தின் சிறு நகரங்களில் தொடக்க விழா என்றாலும் பிகு பண்ணாமல் ஒப்புக்கொள்கிறார்.
நகைக்கடை திறப்பு விழா என்றால் ஸ்லீவ்லெஸ் ப்ளீட்ஸ் டிசைனர் ப்ளவுஸ் அணிந்து, தழையும் பட்டுப் புடவையில் தலை நிறைய மல்லிகைப் பூவுடன் வருகை தருவார். விழா முடிந்ததும் வெளியே கூடியிருக்கும் ரசிகர்கள் மத்தியில் மைக் பிடித்துப் பேசுவார். ஆடை மையத் திறப்பு விழா என்றால் இறுக்கமான நவீன ஆடைகளை அணிந்து வந்து கலக்குவார். திரை விழாக்களுக்கு முழங்காலைத் தாண்டி நீளும் அனார்க்கலி சல்வார் அணிந்து வருவார்.
விருது விழாக்களுக்கு இவர் அணிந்துவரும் யூகிக்க முடியாத ஃபரீக் அவுட் டிசைனர் ஆடைகளைப் படம்பிடிக்கக் காத்திருப்பார்கள் ஒளிப்படக் கலைஞர்கள். எல்லா வகை ஆடைகளுக்கும் மாடலிங் செய்யும் இந்த ஃப்ரி ஹேர் ப்ரியைக்கு அதிக நகைகள் அணிவது பிடிக்காது.