மூன்று நண்பர்கள். அவர்களது வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள அபார்ட்மெண்டில் மர்மமான ஒரு கேமராவுடன் இணைந்த மெஷின் ஒன்று அவர்களுக்குக் கிடைக்கிறது. அந்த கேமரா மெஷின் எதிர்காலத்தின் சம்பவங்களை 24 மணி நேரங்களுக்கு முன்னதாகவே ஒளிப்படம் எடுக்க உதவும் என்பதைத் தெரிந்துகொள்கிறார்கள்.
உதாரணத்துக்கு நாளை என்ன நடக்குமோ அதை இன்றே படமெடுத்துவிடும் இந்த கேமரா. இப்படி ஒரு மெஷின் கிடைத்தவுடன் நண்பர்கள் குஷியாகிவிடுகிறார்கள். இதை வைத்துப் பெரிய அளவில் பணம் பண்ணலாம் என நினைத்து உற்சாகம் கொள்கிறார்கள்.
ஆனால் இவர்களின் ரகசியத்தைப் பயங்கரமான குற்றவாளி ஒருவன் அறிந்துகொள்கிறான். நண்பர்களின் எண்ணத்துக்கு இவன் தடையாக மாறிவிடுகிறான். நண்பர்கள் மூவரும் மெஷினை வைத்துப் பணம் சம்பாதித்தார்களா, எதிர்காலத்துச் சம்பவங்களைக் கொண்ட ஒளிப்படங்களால் நிகழ்கால வாழ்வு என்ன ஆனது போன்ற பல திகிலூட்டும் கேள்விகளுக்குப் பதிலை அறிய நீங்கள் வரும் மே மாதம் 15-ம் தேதி டைம்லாப்ஸ் திரைப்படத்தைத் திரையரங்கில் கண்டுகளிக்க வேண்டும்.
சயின்ஸ் ஃபிக்ஷன் படத்துக்குத் தேவையான வேகம், சஸ்பென்ஸ், ஆக்ஷன் போன்றவற்றுடன் தத்துவம், நகைச்சுவை எனப் பிற அம்சங்களையும் கலந்து மேக்கிங்கில் கலக்கும் சுவாரஸ்யமான சினிமாவாக டைம்லாப்ஸைத் தந்திருக்கிறார் இயக்குநர் ப்ராட்லீ கிங். ஹிட்ச்காக், குப்ரிக், குரோசோவா, கோயான் பிரதர்ஸ் ஆகிய உலகப் புகழ்பெற்ற இயக்குநர்களின் படங்களை ரசித்துப் பார்த்து அவை தந்த ஊக்கத்தாலேயே தான் படமெடுப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் ப்ராட்லீ கிங்.
இந்தப் படத்துக்கு அடிப்படை ஹிட்ச்காக்கின் ரியல் விண்டோ என்கிறார் இவர். எனவே இந்த த்ரில்லர் பார்வையாளர்கள் ஊகிக்காத திருப்பங்களைக் கொண்ட காட்சிகளுடன் ரசிகர்களை சீட் நுனிக்கு வரவைத்துவிடும் என நம்பலாம். இந்த நம்பிக்கைக்கு உத்தரவாதம் தரும்வகையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரும் அமைந்துள்ளது.
லண்டனில் நடைபெற்ற சுதந்திரத் திரைப்படங்களுக்கான விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் இந்தப் படம் விருது பெற்றுள்ளது. இது தவிர்த்து, நார்வே, மெக்ஸிகோ, டொராண்டோ உள்ளிட்ட 65க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு திரைக்கதை, இசை உள்ளிட்ட பல தொழில்நுட்பப் பிரிவுகளில் 25 விருதுகளை டைம்லாப்ஸ் வாரிக் குவித்துள்ளது. ஆகவே இந்தப் படத்தைத் திரையில் காணும் நாளை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.