மீண்டும் காட்சிப் பிழை
காட்சிப்பிழை தமிழ் வணிக சினிமாவைச் சமூக, பண்பாட்டுப் பின்னணியில் நின்று விமர்சித்துவந்த திரைப்பட ஆய்வு மாத இதழ். கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிர சினிமா பார்வையாளர்கள் விரும்பும் கட்டுரைகளையும் நேர்காணல் களையும் தாங்கி வெளிவந்தது இவ்விதழ். ஆனால் எதிர்பாராத காரணங்களாலும் சூழலாலும் கடந்த சில மாதங்களாக வெளியாகவில்லை.
இந்நிலையில் பாஃப்டா திரைப்பட கல்லூரி சார்பாக பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் எழுத்தாளருமான கோ. தனஞ்ஜெயன் முன் முயற்சியில் காட்சிப்பிழை இதழ் வரும் மே 15 முதல் மீண்டும் வெளியாக உள்ளது. இதழின் பொறுப்பாசிரியராக வி.எம்.எஸ். சுபகுணராஜன் தொடர இருக்கிறார்.
நூறாண்டு கண்ட தமிழ் சினிமா
தமிழ் சினிமா குறித்த தகவல்களும் செய்திகளும் வாசகர்களைக் கவர்ந்திழுப்பவை. சினிமா தொடங்கிய நாள் முதல் இன்றுவரை அதைச் செழுமைப்படுத்திய ஆளுமைகள் பற்றிய தகவல் ஒரே இடத்தில் கிடைத்தால் வாசகர்களுக்குப் பிடித்தமானதாகவே இருக்கும்.
அந்த வகையில் நாற்பதாண்டு கால அனுபவம்பெற்ற மூத்த பத்திரிகையாளர் பி.எல்.ராஜேந்திரன் எழுதியிருக்கும் புத்தகம் தமிழ் சினிமா: சில குறிப்புகள். நூலின் தலைப்புக்கேற்ற வகையில் ஆளுமைகள் குறித்த சில சுவாரசியமான குறிப்புகளைக் கொண்டே ஆளுமைகளை பற்றிய விவரங்களைத் தந்துள்ளார் நூலாசிரியர்.
சினிமாவின் நூறாண்டு காலப் பயணத்தில் பங்குகொண்ட பட அதிபர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், கதை ஆசிரியர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள் எனப் பல்வேறு பட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். எல்லிஸ் ஆர் டங்கன் தொடர்பான கட்டுரையுடன் தொடங்கும் இந்நூலில் 99 ஆளுமைகள் பற்றிய ஆச்சரியகரமான பல குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
நூலின் உள்ளடக்கம் வாசகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்தபோதும், நூலின் உருவாக்கம் சிறப்பாக அமையவில்லை. சினிமா புத்தகத்தில் அதிகப்படியான படங்களை எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு முழுத் திருப்தி கிடைக்காது. நூலின் வடிவமைப்பிலும் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் அவற்றைப் புறந்தள்ளிவிட்டுத் தன்னுள் கொண்ட விவரக் குறிப்புகளால் இந்தப் புத்தகம் வாசகர்களை ஈர்த்துவிடும்.
தமிழ் சினிமா: சில குறிப்புகள்
பி.எல். ராஜேந்திரன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
தி.நகர், சென்னை-17 தொலைபேசி: 24342771
விலை ரூ. 285