இந்து டாக்கீஸ்

சினிமா எடுத்துப் பார் 10- களத்தூர் கண்ணம்மா: பெருமையோ பெருமை!

எஸ்.பி.முத்துராமன்

இந்தத் தொடர் மூலம் கடந்த வாரம் பகிர்ந்துகொண்ட அனுபவங்களுக்கு நிறைய பாராட்டுகள் குவிந்தன. சில பேர் விமர்சனமும் செய்தனர். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தை இயக்கியவர் பீம்சிங். நீங்கள் பிரகாஷ் ராவ் என்று எழுதியிருந்தீர்கள். படத்தில் பணிபுரிந்த நீங்களே இப்படி எழுதலாமா?’ என்று கேட்டிருந்தனர். வாசகர்கள் கேள்வி கேட்பதில் மகிழ்ச்சி. பதிலை எழுதி விடுகிறேன்.

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தை பாதி இயக்கியவர், பிரகாஷ் ராவ். ஆனால், படத்தை முடித்தது பீம்சிங். திருப்தியாக வராத காட்சியை ஏவி.எம் செட்டியார் திரும்பவும் எடுக்கச் சொன்னபோது பிரகாஷ் ராவ், ‘படமாக்கி முடித்த காட்சியை மீண்டும் படமாக்குவதற்கு எனக்கு மனம் ஒப்பவில்லை. பாதி படத்திலேயே இப்படி சொன்னால், மீதமுள்ள காட்சிகளில் என்ன சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

அதனால் இந்தப் படத்திலிருந்து நான் விலகிக்கொள்கிறேன். நீங்கள் வேறு யாரை வேண்டுமானாலும் வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று தன் எண்ணத்தை செட்டியாரிடம் தெரிவித்தார். செட்டியாரும் ‘இனி அவர் எப்படி எடுத்தாலும் அது நமக்கு விருப்பமில்லாத மாதிரியே தெரியும். அவர் விருப்பப்படியே விட்டுவிடலாம்’என்று அவர் வேண்டு கோளை ஏற்றுக்கொண்டார்.

ஒரு இயக்குநருக்கும், தயாரிப் பாளருக்கும் இடையே பிரச்சினை; கருத்து வேறுபாடு… என்று எதுவுமே இல்லாமல் காதும் காதும் வைத்தது மாதிரி, ஒரு டேபிள் முன் இருவரும் உட்கார்ந்து பேசி, சுமூகமாக தீர்த்துக்கொண்டனர்.

சினிமாவாகட்டும், கணவன்- மனைவி வாழ்க்கையாகட்டும், குடும்பப் பிரச்சினையாகட்டும் நேரில் அமர்ந்து, மனம்விட்டுப் பிரச்சினை களை பேசினாலே எல்லாவற்றுக்கும் சுமூகத் தீர்வு காண முடியும் என்பதற்கு, இதெல்லாம் எங்களுக்கு ஒரு பாடம்!

‘நாம் இருவர்’ படத்தில் பாரதியார் பாடல்களுக்கு இசை கொடுத்து, பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கச் செய்த இசையமைப்பாளர் சுதர்சனம் தான் ‘களத்தூர் கண்ணம்மா’ படத்துக்கும் இசையமைத்தவர். ஏவி.எம்மில் மாதச் சம்பளத்துக்கு வேலை செய்த அவருக்கு உதவியாளர்களாக கோவர்த்தனம், செங்கன் போன்றோர் இருந்தனர்.

இசைக் கோப்பின்போது சுதர்சனத் துடன் ஏவி.எம்.குமரன் சாரும் அருகில் வந்தமர்வார். இசையின் மீது அலாதி யான ஆர்வமும், திறனும்கொண்ட அவர், சில சமயங்களில் விசில் அடித்தே சில டியூன்களை ஒலித்துக் காட்டுவார். அந்த அளவுக்கு இசை ஞானம் உடையவர். ஏவி.எம் படங் களின் பாடல்களுக்கு பக்கபலமாக இருந்தவர் குமரன்.

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களைத் தந்த சுதர்சனம்தான் பிரபல பின்னணிப் பாடகிகள் பி.சுசிலா, எஸ்.ஜானகி ஆகியோரை தமிழில் அறிமுகப் படுத்தியவர். எஸ்.ஜானகி சினிமாவுக்கு வந்தது ஒரு சுவையான நிகழ்ச்சி. ஏவி.எம் ஸ்டுடியோவுக்கு அஞ்சலில் ஒரு கார்டு வந்தது.

அதில், எஸ்.ஜானகி யின் அப்பா, ‘என் மகள் நன்றாகப் பாடுவாள். அவளுக்கு சினிமாவில் பாட வாய்ப்பு கொடுக்க வேண்டுகி றேன்’என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்த ஏவி.எம் ‘புதியவர்களிடம் திறமைகள் இருக்கும்’ என்று ஜானகியை வரவழைத்து வாய்ப்பு கொடுத்தார். ஒரே ஒரு கார்டிலேயே மிகப் பெரிய பின்னணிப் பாடகி யாகிவிட்டார் அவர்.

‘களத்தூர் கண்ணம்மா’படத்தில், ஆசிரமத்தில் வளரும் கமல்ஹாசன் பள்ளியில் படிப்பார். அங்கு ஆசிரியையாக வேலைக்கு சேரும் சாவித்திரி, அநாதை பையனான கமல் மதியவேளை சாப்பாடு இல்லாமல் தண்ணீர் குடிப்பதைக் கவனிப்பார். அப்போது இந்தப் பையன் தன்னுடைய மகன் என்பது சாவித்திரிக்குத் தெரியாது. கமலுக்கு அங்கே காலை, மாலை மட்டும்தான் சாப்பாடு என்கிற விஷயம் சாவித்திரிக்குத் தெரிய வர, ‘‘இனிமே நான் உனக்குச் சாப்பாடு கொடுக்கிறேன்’’ என்று தான் கொண்டுவந்த உப்புமாவை கமலுக்கு ஊட்டிவிட போகிற மாதிரி ஒரு காட்சி.

அந்தக் காட்சியை படமாக்கும் போது எவ்வளவோ சொல்லியும் கமல்ஹாசன் அந்த உப்புமாவை சாப்பிட மறுத்தார். கமலுடைய அண்ணன் சந்திரஹாசன் சொல்லிப் பார்த்தார். கேட்கவில்லை. செட்டுக்கு வெளியே தூக்கிக்கொண்டுபோய் ‘ஏன், சாப்பிட மாட்டேங்குறே’ என்று கேட்டால், ‘இதுக்கு முன்னால மாந்தோப்புல நடிச்சேன். அந்தத் தோப்புல தொங்கிய மாங்காயெல்லாம் பேப்பர் மாங்காய். இங்கே சுத்தி இருக்குற சுவரெல்லாம் அட்டை சுவர். இந்த உப்புமாவும் மண்ணாத்தான் இருக்கும். சினிமாவே பொய்; உப்புமாவும் பொய்’ என்றார்(ன்).

நான், சாவித்திரி, இயக்குநர், சந்திர ஹாசன் எல்லோரும் கமல் முன்னே அந்த உப்புமாவை சாப்பிட்டுக் காட்டி னோம். அதன் பிறகே கமல் அதை சாப்பிட்டார். அந்த வயதில் கமலுக்கு அப்படி ஒரு கேள்வி ஞானம்!

படப்பிடிப்புக்கு இடையே கொஞ்சம் பிரேக் கிடைத்தாலும் மற்ற குழந்தைகள் செட்டுக்கு வெளியே விளையாட ஓடிவிடுவார்கள். கமல் மட்டும் ஸ்டுடியோவுக்குள் உள்ள பிரிவியூ தியேட்டரில் படம் பார்க்க சென்றுவிடுவார். படம் பார்ப்பதோடு நின்றுவிடாமல், அங்கே பார்த்த காட்சிகளை செட்டுக்கு வந்து எங்களிடம் நடித்தும் காட்டுவார்.

‘களத்தூர் கண்ணம்மா’ படம் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்ட நாட்களில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு தியேட்டருக்கும் சென்று மக்கள் முன் ஆட்டம் பாட்டம் என்று தனியாளாக நடத்திக் காட்டி மக்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்த பெருமை கமலுக்கு உண்டு. நட்சத்திர அந்தஸ்தை குழந்தையிலேயே பெற்றவர் கமல்!

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் கமலை அறிமுகப்படுத்தியதில் ஏவி.எம்முக்குப் பெருமை.

கமலை தூக்கி வளர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெருமையிலும் பெருமை.

‘களத்தூர் கண்ணம்மா’ படப்பிடிப்பில் கமலை நான் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் புகைப் படத்தை கமல், பல ஆண்டுகள் பாதுகாத்து எனக்குப் பரிசாகக் கொடுத்தது பெருமையோ பெருமை!

- இன்னும் படம் பார்ப்போம்...

SCROLL FOR NEXT