இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஷோ: மர்மப் பிரதேசத்தில் ஒரு சாகசப் பயணம்- டுமாரோலேண்ட்

ரிஷி

அது ஒரு மர்மமான பிரதேசம். அதைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. காலத்தாலும் தூரத்தாலும் அளவிட முடியாத, கனவில் மட்டுமே உணர்ந்துகொள்ள முடிகிற மாய லோகம். அறிவியலில் ஆர்வம் கொண்ட துடிப்பான பருவப் பெண் ஒருத்தியும் ரோபோவைக் கண்டறிந்த முன்னாள் அறிவியலாளர் ஒருவரும் இணைந்து அந்தப் பிரதேசத்தின் ரகசியங்களை அறிந்துகொள்ளப் புறப்படுகிறார்கள்.

அவர்கள் நினைவில் உள்ள அந்தப் பிரதேசம் டுமாரோலேண்ட். அபாயங்கள் சூழ்ந்த அந்தத் தேவலோகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள், சொப்பனத்திலும் தென்படாத அதிசயங்கள், நாளைய உலகுக்கான போர் அது.

அடுத்தது என்ன என்ற ஆவலை ஏற்படுத்தும் அந்தப் பயணத்தின் அனைத்துக் காட்சிகளும் ஊகத்துக்கு அப்பாற்பட்டவையாகவே இருக்கும். சுவாரசியமான அந்தப் பயணம் உங்கள் இதயத்தில் கிலி ஏற்படுத்தும், உங்களைக் காற்றில் மிதக்கவைக்கும், நெருப்பில் நீந்தவிடும். ஒரு அமானுஷ்ய உலகத்துக்குள் அகப்பட்டுக்கொண்ட பிரமையை உங்களுக்கு ஏற்படுத்தும். ஏனெனில் ஆறேழு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அந்தப் படத்தின் டிரைலரே இவையனைத்தையும் அங்கங்கே தொட்டுக் காட்டியுள்ளது.

டுமாரோலேண்ட்டில் அவர்கள் மேற்கொள்ளும் அந்தத் திகில் பயணத்தை நீங்கள் பார்க்க விரும்பினால் இன்று திரையரங்குக்குச் சென்று வால் டிஸ்னி வெளியிட்டிருக்கும் டுமாரோலேண்ட் என்னும் அமெரிக்கப் படத்தைக் காணலாம்.

ரசிகர்களால் ஒருபோதும் கற்பனை செய்ய இயலாத கனவுக் காட்சிகளை, சாகசங்களை உள்ளடக்கிய சயின்ஸ் ஃபிக்ஸன் படமான இது ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை என்று நம்புகிறார்கள் படக் குழுவினர். அறிவியலாளர் வேடமேற்றிருப்பவர் ஜார்ஜ் க்ளூனி. கிராவிட்டி ஓஸன்ஸ் 11 ஆகிய படங்கள் மூலம் ரசிகர்கள் மனத்தில் தனியிடம் பிடித்திருப்பவர். பருவப் பெண்ணாக வலம் வருகிறார் ப்ரிட்டனி ராபர்ட்சன். படத்தை இயக்கியிருப்பவர் ப்ராட் பேர்டு.

தன் வாழ்க்கையை ஒரு அனிமேட்டராகத் தொடங்கியவர் அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் ப்ராட் பேர்டு. அதன் பின்னர் டிஸ்னி நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றிவிட்டு வெளியேறினார். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் இயக்கத்தில் வெளியான தொலைக்காட்சித் தொடரில் பணியாற்றினார். 2004-ல் வெளியான இவரது த இன்கிரடிபில்ஸ் என்னும் அனிமேஷன் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதும் இப்படத்துக்குக் கிடைத்தது. அனிமேஷனில் ப்ராட் பேர்டு வெற்றிக்கொடி நாட்டியவர், தேர்ந்த திரைக்கதையாசிரியர், வால் டிஸ்னியின் தயாரிப்பைப் பற்றியோ சொல்லவே வேண்டாம். இரண்டும் இணையும்போது ரசிகர்களுக்குக் காட்சிகள் மூலம் கிடைக்கும் பரவசத்துக்கு எந்தப் பஞ்சமும் இருக்காது என நம்பலாம்.

SCROLL FOR NEXT