பாலிவுட்டில் வணிக சினிமாவுக்கு இணையாக ‘ஆஃப் பீட்’படங்களுக்கும் ரசிகர்கள் அமோக ஆதரவளிக்கத் தொடங்கிவிட்டார்கள். இன்று வெளியாகும் ‘பிக்கு’ இந்திப் படம் மாறுபட்ட நட்சத்திரக் கலவையுடன் வெளியாகிறது.
ஷூஜித் சர்க்கார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ‘லஞ்ச் ஃபாக்ஸ்’ படத்தின் புகழிலிருந்து இன்னும் விடுபடாத இர்ஃபான் கான், பிக் பி அமிதாப், பாலிவுட்டின் நம்பர் ஒன் நாயகி என்று சொல்லப்படும் தீபிகா படுகோன் ஆகிய மூவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். “தனக்கு இந்தப் படத்தின் இயக்குநர் ‘காதல் ஹீரோ’ கதாபாத்திரம் வழங்கியதாக” மகிழ்ச்சியில் இருக்கிறார் இர்ஃபான் கான்.
தீபிகா படுகோனுக்கும் தனக்குமான காதல் கதை அருமையான தருணங்களுடன் அமைந்திருந்ததாகச் சிலிர்த்துக்கொள்ளும் இர்ஃபான், கேப் சர்வீஸ் நடத்தும் ‘ரானா சவுத்ரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். “ ‘பிக்கு’படத்தில் முக்கியமான அம்சமாக மனிதர்களின் அன்பு காட்டும் பண்பு இருக்கும். நான் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என நீண்ட காலமாக நினைத்திருந்தேன்.
அதுவும் இந்தப் படத்தில் நிறைவேறிவிட்டது. இந்தப் படத்தில் நடித்தது ஓர் உணர்வுபூர்வமான அனுபவமாக எனக்கு அமைந்துவிட்டது” எனும் இர்ஃபான், தன்னைப் போலவே உடன் நடித்த அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோரும் இந்தப் படத்தை உணர்வுபூர்வமாகவே பார்த்தார்கள் என்கிறார்.
“குஜராத் நெடுஞ்சாலையில் காரில் பயணிக்கும் ஒரு காட்சியில் எனக்கும் இயக்குநருக்கும் பேச வேண்டிய அவசியம் இல்லை. நீண்ட நேரமாகப் பயணிப்பதால் நான் தீபிகாவை ஒரே ஒரு பார்வை பார்க்க வேண்டும். அந்த ஒரு பார்வை படத்தில் மிகவும் அழகான காட்சியாக விரியும்.
இந்தக் காட்சியை எடுத்துவிட்டுப் பார்க்கும்போது இயக்குநர் ஷூஜித் நெகிழ்ந்துவிட்டார். இப்படிப் படம் முழுக்கவே புதுமையான கதை சொல்லும் பாணியைப் பின்பற்றியிருக்கிறோம்” என்கிறார் இர்ஃபான்.