இந்து டாக்கீஸ்

திரை நூலகம்: 08/05/2015

செய்திப்பிரிவு

திரைக்கதையின் இலக்கணம்

ஒரு திரைப்படத்தை வெற்றிப்படமாக்குவதில் திரைக்கதையின் தன்மை முக்கியப் பங்காற்றுகிறது. ஒரு கதையைத் திரைமொழியில் எழுதும் நுட்பத்தை அறிந்தவர் திரைக்கதையை எளிதில் எழுதிவிட முடியும். வார்த்தைகளில் சொல்லப்பட்ட கதையைக் காட்சிகளில் நகர்த்திச் செல்லும் தன்மையே திரைக்கதை அமைப்பில் பிரதானமாகச் செயல்படுகிறது.

ஆகவே தனது திரைக்கதை ஒரு கண்ணோட்டம் என்னும் நூலில், நல்ல கதை ஒன்றை எப்படித் திரைக்கதையாக்க வேண்டும் என்பதைச் சிறுபிள்ளைகளுக்குச் சொல்வது போல் எளிமையாக, விரிவாகச் சொல்லியிருக்கிறார் தர்மா.

கதாபாத்திரங்கள், கதைக் களங்கள், வசனங்கள் என ஒரு படத்தின் வெற்றியை, உருவாக்கத்தைத் தீர்மானிக்கும் பல அம்சங்களையும் விளக்கிக் கூறியுள்ளார். அதே போல் ஒரு கதையை உதாரணமாக எடுத்து அதை திரைக்கதையாக்கித் தந்துள்ளார். கதையை எப்படித் திரைக்கதையாக்க வேண்டும் என அறிய முயலும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு உதவும் நோக்கத்தில் அமைந்திருக்கிறது இந்நூல். ஒரு படம் பார்க்க ஆகும் செலவில் இந்தப் புத்தகத்தை வாங்கிவிட முடியும். ஆனால் திரைக்கதை என்பது இத்தகைய வரைமுறைகளை மீறிய ஒன்று என்ற புரிதலுடன் இந்த நூலை அணுகுவது நலம்.

திரைக்கதை ஒரு கண்ணோட்டம்

தர்மா, ஏ.டி.என். பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு-560016

தொலைபேசி: 080 25655290 விலை ரூ. 150

வணிகத்துக்கான கலை

சினிமா என்பது ரசனை அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும் அதன் பிரதான நோக்கம் வணிகம் எனும்போது அதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆக சினிமா என்னும் கலை சார்ந்த வணிகத்தை விரிவாகப் பேசும் நூலே கேபிள் சங்கர் எழுதிய சினிமா வியாபாரம். அதன் இரண்டாம் பாகம் இப்போது வெளிவந்துள்ளது. வலைப்பூவின் வழியே வாசகர்களுக்கு அறிமுகமாகிய கேபிள் சங்கர் எளிய நடையில் ஒரு நண்பருடன் பேசுவது போல் சினிமாவின் வர்த்தக நுணுக்கங்களை, பல்வேறு உதாரணங்களுடன் எடுத்துவைத்துள்ளார்.

சினிமா வியாபாரம் பாகம் 2

கேபிள் சங்கர், டிஸ்கவரி புக் பேலஸ்

சென்னை- 600078 தொலைபேசி: 044-65157525 விலை ரூ: 70

SCROLL FOR NEXT