பாலிவுட் வாசம்
‘மார்கரிட்டா வித் ஏ ஸ்ட்ரா’ படத்தைப் பார்த்த ஆமிர் கான் நெகிழ்ந்துபோய் வெகுநேரம் அழுததாகச் சொல்கிறார் அப்படத்தின் நாயகி கல்கி கேக்கிலான். இந்தப் படத்தை மனைவி கிரண் ராவின் வற்புறுத்தலால் பார்த்திருக்கிறார் ஆமிர் கான்.
ஆமிர் கான் தன் நடிப்பைப் பாராட்டியதால் உற்சாகத்தில் இருக்கிறார் கல்கி. “ஆமிர் கான் இந்தப் படத்தை என் அருகில் அமர்ந்து பார்த்தது ஒரு கனவுபோல இருந்தது. ‘இந்தப் படத்தை அனைவரையும் பார்க்கவைக்க நான் என்ன செய்ய வேண்டும்’ என்று அவர் கேட்டது என்னை நெகிழ வைத்துவிட்டது” என்கிறார் கல்கி.
இந்தப் படம் ஏற்கெனவே சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளைப் பெற்றிருக்கிறது. மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இளம்பெண்ணின் பாலியல் உணர்வைப் பற்றிப் பேசியிருக்கும் இந்தப் படம் பல பிரபலங்களிடம் இருந்தும் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.
ஷாரூக் - காஜோல் மேஜிக்
பாலிவுட்டுக்கு எப்போதுமே பிடிக்கும் திரை ஜோடிகளில் ஷாரூக் கான் - காஜோல் ஜோடியும் ஒன்று. சொல்லப்போனால், இவர்கள் இருவரும்தான் பாலிவுட்டின் ‘நம்பர் ஒன்’ ஜோடி. அவர்கள் இருவரும் ரோஹி ஷெட்டியின் ‘தில்வாலே’ படத்துக்காக மீண்டும் இணைகிறார்கள்.
ஷாரூக்கும், காஜோலும் ‘பாஜிகர்’, ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே’, ‘கரண் அர்ஜூன்’, ‘கு கு ஹோதா ஹை’, ‘கபி குஷி கபி கம்’ போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் கரண் ஜோஹரின் ‘மை நேம் இஸ் கான்’ படத்தில் 2010-ல் இணைந்து நடித்திருந்தனர்.
“கஜோலுடன் மீண்டும் இணைந்து நடிப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. ஜூன் மாதம் ‘தில்வாலே’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். காஜோல் என்னுடைய சிறந்த தோழி. நாங்கள் இருவரும் சேர்ந்து நிறைய நல்ல படங்களில் நடித்திருக்கிறோம். அதே மேஜிக்கை ‘தில்வாலே’ படத்திலும் உருவாக்குவோம் என்று நம்புகிறேன்” என்கிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான்.
சோனாக்ஷியின் சினிமா அப்பா
சோனாக்ஷி சின்ஹா ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் இரண்டாவது படம் ‘அகிரா’. இந்தப் படத்துக்காக எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியில் நடித்தது உற்சாகமாக இருந்தாலும், தன்னை மிகவும் சோர்வடையவும் செய்துவிட்டதாகத் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
“ஒரு படத்துக்காகப் புது விஷயங்களைக் கற்றுக்கொள்வது படு உற்சாகமான அனுபவமாக இருந்தது. நான் கற்றுக்கொண்டதைச் சரியாகச் செய்வதற்காக எல்லா முயற்சிகளையும் எடுக்கிறேன்” என்கிறார் சோனாக்ஷி.
இந்தப் படத்தில் தன் தந்தை சத்ருஹன் சின்ஹாவுடன் முதன்முறையாகச் சேர்ந்து நடிக்கிறார் சோனாக்ஷி. திரையிலும் சோனாக்ஷிக்கு அவர்தான் அப்பாவாம்.