இந்து டாக்கீஸ்

பாட்ஷாவின் ரசிகன் பாட்ஷா!

வினு பவித்ரா

ஒரு சூப்பர் ஸ்டார். அவனைப் போன்றே தோற்றமுடைய அந்தச் சூப்பர் ஸ்டாரின் ரசிகன். இருவரின் முக அடையாளமும் ஒன்றாக இருப்பதால் ஏற்படும் குழப்பங்கள். இதுதான் ஷாரூக் கான் நடித்துக்கொண்டிருக்கும் ‘ஃபேன்’ படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

இதில் ஷாரூக் கான் தனது நிஜக் கதாபாத்திரமாகவே நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. மும்பையில் ஷாரூக் கான் வசிக்கும் ‘மன்னத்’-ல் அவர் பிறந்தநாள் கொண்டாடுவதைப் போன்று ஏற்கெனவே காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஷாரூக் கான் தனது பிறந்த நாளை எவ்வளவு ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடுவாரோ அத்தனை பிரம்மாண்டத்துடன் ஃபேன் படக் காட்சிகள் எடுக்கப்பட்டன.

சமீபத்தில் ‘ஃபேன்’ படப்பிடிப்புக்காக இங்கிலாந்தில் உள்ள ப்ளென்ஹீம் மாளிகைக்கு வந்த ஷாரூக் கான், இளமைப் பொலிவுடன் இருந்ததாக படப்பிடிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்துக்காக ஷாரூக் கானுக்கு ஒப்பனை செய்பவர் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற க்ரெக் கேனம்.

இவர்தான் மிசஸ் டவுட்பயர் படத்தில் நடித்த ராபின் வில்லியம்சுக்கு ஒப்பனை செய்தவர். பிராட் பிட்டின் ஆஸ்தான ஒப்பனையாளர். இவர் மூன்று முறை ஆஸ்கர் விருது பெற்றவர். சூப்பர் ஸ்டார், அவரது ரசிகன் என்ற இரட்டைக் கதாபாத்திரங்களின் ஒப்பனைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் ஷாரூக். இதில் இரண்டு இளவரசிகள் ஷாரூக்கிற்கு இணைகளாக நடிக்கிறார்கள்.

ஒருவர் நம் தென்னக சினிமாவின் இலியானா. ‘ஆஹா கல்யாணம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கலங்கடித்த வாணி கபூர். இந்தப் பாலிவுட் படத்துக்கு பலம் சேர்க்கும் மற்றுமொரு தென்னிந்தியத் திறமை ஏ.ஆர்.ரஹ்மான்.

யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தினர் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் இயக்குநர் மனீஷ் சர்மா. ரசிகர்களை மிரட்டப்போவது ஹீரோவா, ரசிகனா என்பதைத் தெரிந்துகொள்ள செப்டம்பர் மாதம் வரவிருக்கும் பக்ரீத் பண்டிகை வரைக் காத்திருக்க வேண்டும்.

SCROLL FOR NEXT