இந்து டாக்கீஸ்

ஆறு மணி நேர ஒப்பனை: பூஜா குமார் சிறப்புப் பேட்டி

கா.இசக்கி முத்து

உத்தம வில்லன் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறீர்கள் போல இருக்கிறதே என்று கேட்டதும் ‘அப்படியே நைஸாகப் பேசிக் கதையைத் தெரிந்துகொள்ளலாம் என்று திட்டமா? அதெல்லாம் என்கிட்ட நடக்காது’ என்று திணறடித்தார் பூஜா குமார்.

கமல் ஹாசனுடன் தொடர்ச்சியாக மூன்றாவது படத்தில் நடித்து முடித்திருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?

கொடுத்து வைத்திருக்க வேண்டும். சினிமா மீது அவருக்கு இருக்கும் காதல், ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய நடிப்பு, ஒவ்வொரு நாளும் புதிதாக அவர் கற்றுக் கொடுக்கும் விஷயங்கள் என எல்லாமே மறக்கமுடியாத அனுபவம்.

திரையில் உங்களுடைய வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரு நடிகையாக ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்கள் பண்ண வேண்டும் என்ற ஆவலோடு இருக்கிறேன். இதுவரை பண்ணிய படங்களில், எனது பணியைச் சரியாகச் செய்திருக்கிறேன் என்பதே என் எண்ணம். ‘உத்தம வில்லன்’ படத்தின் ட்ரெய்லர் பர்த்திருப்பீர்கள், ஆனால் உண்மையான பிரம்மாண்டத்தைத் திரையில் பார்க்க இருக்கிறீர்கள். ஏனென்றால் ஒவ்வொரு காட்சிக்கும் அனைத்து நடிகர்களும் அவ்வளவு உழைத்திருக்கிறோம். ‘விஸ்வரூபம்' படத்தின் பூஜா குமாரை நீங்கள் ‘உத்தம வில்லன்’ படத்தில் காண முடியாது.

இந்தப் படத்தில் இரணியன் நாடகப் பகுதிக்கு நீங்கள் கடுமையாகப் பயிற்சிகள் மேற்கொண்டீர்கள் என்று கேள்விப்பட்டோம்..

அந்த நாடகத்தில் வரும் நடனத்துக்காக இருபது நாட்கள் அனைவருமே பயிற்சி எடுத்தோம். பயிற்சி எடுக்கும்போதுகூட எளிதாகத்தான் இருந்தது. ஆனால், மேக்கப், உடை எல்லாம் போட்டு விட்டு நடனத்தைப் பண்ணும்போது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. அது என்னுடைய வேலை, ஆகவே அந்தக் கடினமும் எனக்குச் சுகமாகத்தான் இருந்தது. காலையில் வந்தவுடன் ஒப்பனை, உடை எல்லாம் போட ஆறு மணி நேரமாகும். அதற்குப் பிறகு படப்பிடிப்பு நடக்கும். அந்தளவுக்கு மிகவும் கடினமாக இரணியன் நாடகத்துக்காக உழைத்திருக்கிறோம்.

என்னோடு ஊர்வசி, பார்வதி, ஆன்ட்ரியா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

மொத்தக் கதையிலும் உங்கள் கதா பாத்திரத்தின் பங்களிப்பு எத்தகையதாக இருக்கும்?

என்னுடைய வேடம் மட்டும்தான் முக்கியமானது என்று சொல்லிவிட முடியாது. இப்படத்தின் கதைச் சூழல் வித்தியாசமானது. படத்தில் இருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் ஏதாவது ஒரு இடத்தில் கைத்தட்டல் வாங்கி விடுவார்கள். அந்தளவுக்கு ஒவ்வொரு பாத்திரத்தின் வடிவமைப்பும் அமைந்திருக்கிறது. இப்படத்தில் எனக்கு இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய பாத்திரப் படைப்பு அமைந்திருக்கிறது. அதுதான் இப்படத்தை நான் ஒப்புக்கொள்ள முக்கியக் காரணம்.

கமல் ஹாசன் படங்களில் மட்டும்தான் நடிப்பேன் என்பது உங்களுக்கு வேண்டுதலா?

கமலுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று சொல்ல வில்லையே. அனைத்து நடிகர்களுடன் நடிக்க ஆசை. என்னுடைய பாத்திரத்தின் முக்கியத்துவம் அறிந்து எந்த வித வேடத்திலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். விரைவில் என்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அப்படத்தின் நாயகன் கமல் அல்ல.

படங்களில் நடிக்கும்போது கமல் உங்களை எப்படி வழிநடத்தினார்?

கமலுடன் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஏனென்றால் அவரிடம் இருந்து இன்னும் நான் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல மனிதர், ஒரு காட்சி சரியாக வரும்வரை விட மாட்டார். திரைத்துறை சார்ந்த எதைப்பற்றிப் பேசினாலும் அதில் நமக்குத் தெரியாத விஷயங்களைச் சொல்வார். அவருடன் நான் இணைந்து நடித்த ஒவ்வொரு காட்சியையும் என்னுடைய வாழ்நாளில் மறக்கவே முடியாது.

தமிழில் பேசத் தெரியுமா?

வணக்கம், என்னுடைய பெயர் பூஜா, நல்லாயிருக் கீங்களா? எப்படி இருக்கீங்க? இப்படிச் சில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டுள்ளேன். விரைவில் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அடுத்த பேட்டி கண்டிப்பாகத் தமிழில் கொடுக்கிறேன்.

SCROLL FOR NEXT