இந்து டாக்கீஸ்

மொழி பிரிக்காத உணர்வு- நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க!

எஸ்.எஸ்.வாசன்

தன்னை முட்டாள் என்றும் தனக்கு எதுவும் தெரியாது என்றும் திரை நாயகர்கள் ஏற்கும் கதாபாத்திரங்கள் அறிவித்துக்கொள்ளும் சூழல் பல படங்களில் உண்டு. இதுபோன்ற சூழ்நிலையில் அவை பாடும் பாடல் வரிகள் மட்டும் அழமான பொருள் பொதிந்தவையாக இருப்பது சுவையான ஒரு திரைமுரண்.

இந்த உத்தியின் ஊடே வெளிப்படும் உணர்வு அதைக் கேட்கும் நாயகி அல்லது பிற பாத்திரங்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் இதுவரை இல்லாத எழுச்சியையும் தெளிவையும் அளிக்கும்.

இவ்விதம் அமைந்த தமிழ் இந்திப் பாடல்களை பார்ப்போம்.

படம். அனாரி (முட்டாள்) -1959.

பாடலாசிரியர். ஷைலேந்திரா. பாடியவர். முகேஷ். இசை. சங்கர் ஜெய்கிஷன்

பாடல்:

சப் குச் சீக்கா ஹம்னே

ந சீக்கீ ஹுஷியாரி

சச் ஹை துனியா வாலோன்

கி ஹம் ஹை அனாடி

- - - -

- - - -

பொருள்:

எல்லாவற்றையும் கற்றேன் நான்

இந்த சாமர்த்தியத்தை மட்டும் கற்கவில்லை

உண்மைதான் உலகத்தாரே (நீங்கள் கூறுவதன்படி)

உள்ளபடியே நான் ஒரு முட்டாள்தான்

உலகத்தார் எவ்வளவு புரிய வைத்தனர்

எவர் நம்மவர் எவர் அடுத்தவர் என்று

இருந்தும் இதய வலியை மறைத்துக்கொண்டு

இனியவளே உன்னை நேசித்தேன்

நானே என்னை அழித்துக்கொள்ளும்

இந்தப் பிடிவாதம் இருந்தது எனக்கு

உன் உள்ளத்தின் மதிப்பு உயர்ந்துகொண்டே

செல்வதைக் கண்டேன்

உண்மையான உன் அன்பு குறைந்துகொண்டே

செல்வதைக் கண்டேன்

ஒவ்வொரு செல்வந்தரும் செல்வத்துடனே

உயிரை விடுவதையும் கண்டேன்.

ஆனால் காதலுடன் இறப்பவன்

ஏழையாகவே இறப்பான்

அசல், நகல் முகங்களைக் கண்டேன்

ஆயிரக்கணக்கில் அலைச்சலைக் கண்டேன்

ஏமாந்த என் இதயத்தைக் கேள்

என்ன என்ன வண்ணக் கனவு இருந்தன என

விழுந்து நொறுங்கும் விண்மீன் மீது

எனது விழிகள் இருந்தன

எல்லாவற்றையும் கற்றேன் நான்

இந்த சாமர்த்தியத்தை மட்டும் கற்கவில்லை

உண்மைதான் உலகத்தாரே (நீங்கள் கூறுவதன்படி)

உள்ளபடியே நானொரு முட்டாள்தான்.

வரிகளிலும் சொல்லும் வகையினிலும் மிகுந்த வேறுபாடுகள் இருந்தாலும் புரியவைக்கும் உணர்வினிலும் உருக்கமான சோக குரலினிலும் இதேபோல அமைந்திருக்கும் தமிழ்ப் பாடலைப் பார்ப்போம்.

படம். சகோதரி.

பாடலை எழுதியவர்: கண்ணதாசன். பாடியவர்: சந்திரபாபு. இசை. ஆர். சுதர்சனம்

நான் ஒரு முட்டாளுங்க

ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க

நான் ஒரு முட்டாளுங்க

ஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க

எல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க

நான் ஒரு முட்டாளுங்க

கண்ணிறைஞ்ச பெண்டாட்டிய கய்தேனு சொன்னாங்க

ஏ.ஏ.ஏ கய்தே.. டாய்

கண்ணிறைஞ்ச பெண்டாட்டிய கய்தேனு சொன்னாங்க

முன்னாலே நின்னாக்க மூஞ்சி மேலே அடிச்சாங்க

பேசாத என்னாங்க பொரட்டி பொரட்டி எடுத்தாங்க

பீஸ் பீஸா கீசாங்க பேஜாரா பூட்டுதுங்க

நான் ஒரு முட்டாளுங்க

கால் பாத்து நடந்தது கண் ஜாடை காட்டுது

பால் கொண்டுபோறதெல்லாம் ஆல்ரௌண்டா ஓடுது

மேல் நாட்டு பாணியிலே வேலை எல்லாம் நடக்குது

ஏன்னு கேட்டாக்க எட்டி எட்டி உதைக்குது

நான் ஒரு முட்டாளுங்க

நாணமுன்னு வெட்கமுன்னு நாலு வகை சொன்னாங்க

நாலும் கெட்ட கூட்டம் ஒண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க

ஆன வரை சொன்னேங்க அடிக்கதானே வந்தாங்க

அத்தனையும் சொன்ன என்னை இளிச்சவாயன் என்னாங்க

நான் ஒரு முட்டாளுங்க

SCROLL FOR NEXT