இந்து டாக்கீஸ்

திரையிசை: ஆன்மாவைத் தீண்டும் குட்டிப் பையன்

ஷங்கர்

மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி என்றாலே இசை அசத்தலாக இருக்கும். அந்த வகையில் சில தோல்விகளுக்குப் பிறகு மிக குறைவான கால அவகாசத்தில் மணிரத்னம் எடுத்திருக்கும் படமான ‘ஓ காதல் கண்மணி’ மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

மௌன ராகம், அக்னி நட்சத்திரம், அலை பாயுதே போன்று இளமை ததும்பும் காதல் படமாக இதுவும் இருக்கும் என்று ட்ரெய்லரும் பாடல்களும் கட்டியம் கூறுகின்றன. அதிரடி, மெலடி, மோனம் என மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து மூன்று பேரும் தங்களைப் புதுப்பித்துக் கொண்டது போல் பாடல்கள் இருக்கின்றன. மன…மன…மன…மெண்டல் பாடலின் பரவசம் ஏற்கனவே இளைஞர்களைத் எட்டிவிட்டது.

‘ஓ காதல் கண்மணி’ ஆல்பத்தின் கடைசிப் பூங்கொத்தாக மௌவ்லாய சல்லி என்ற சூஃபி பிரார்த்தனைப் பாடல் இடம்பெறுகிறது. மிகக் குறைந்த வாத்திய இசையுடன், ஒரு குழந்தை, உலகத்தை நோக்கி ஆத்மார்த்தமாக இறைஞ்சுவதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும் பாடல் இது.

ஏ.ஆர்.ரஹ்மானின் குட்டிமகன் ஏ.ஆர்.அமீன் பாடியுள்ள பாடல். சங்கராபரணம் ராகத்தின் மென்மையான ஸ்வரங்களை நேர்த்தியாகக் கோத்து ஆங்காங்கே பெஹாக் மற்றும் யமன் ராகங்களின் ஹிந்துஸ்தானி அம்சங்களைத் தூவி இந்தப் பாடலை வடிவமைத்திருக்கிறார் ரஹ்மான். இந்த அரேபியப் பாடலை எழுதியவர் 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த எகிப்திய ஞானி இமாம் ஷராஃபுதின் முகமத் அல் பசாரி. அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது எழுதிய கவிதை இது.

தனது உடல்நலத்துக்காக அல்லாவைத் தொழுதுவிட்டு உறங்கியபோது, இந்தக் கவிதையைப் பாடியது போல் கனவு கண்டார். நபிகள் நாயகத்தின் அங்கி அவரது உடலைத் தொட்டு குணப்படுத்தும் காட்சியையும் கனவில் கண்டார். கண் விழித்த அல் பசாரிக்கு உடல் குணமாகியிருந்தது. இந்த பிரார்த்தனைக் கவிதை மனனம் செய்யப்பட்டு வழிவழியாக கடத்தப்பட்டு பின்னர் மசூதிகளிலும், மதராசாக்களின் சுவர்களிலும் பொறிக்கப்பட்டன.

மௌவ்லாய சல்லி வசல்லிம் தாயி மண் அபதன்

அலா ஹபீபி பிக்க கைரில் ஹல்கி குல்லிஹிமி

என்று ஆரம்பிக்கும் பாடல் தமிழ் சினிமா இசை ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தைக் கொடுப்பது.

எங்களின் எஜமானரே! உங்கள் படைப்புகளிலேயே சிறந்த, உங்களின் அன்புக்குரிய நபிக்கு ஆசிர்வாதம் மற்றும் அமைதியைச் சொல்வீர்களாக! என்பதுதான் முதல் வரிகளின் அர்த்தம்.

‘ஜோதா அக்பர்’ படத்தில் ‘க்வாஜா மேரே க்வாஜா’ பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடி எப்படி நம் இதயத்தைத் தீண்டினாரோ, அதே மந்திரக் குரலால் இந்தப் பாடல் வழியாக ஆன்மாவை வருடுகிறார் அமீன்.

SCROLL FOR NEXT